சஹ்ரான் குழுவின் முக்கியஸ்தருக்கும், குற்றப்புலனாய்வு அதிகாரிக்கும் தொடர்பா?: வெளியானது திடுக்கிடும் தகவல்!

சஹ்ரான் ஹசீமின் தீவிரவாத கும்பலின் ஆயுத பயிற்சியாளரான ஆமி மொஹிதீன் மற்றும் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிக்கு இடையில் தொடர்பு இருந்ததாக சந்தேகிப்பதாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு இனங்கண்டுள்ளது.

முகமது ரில்வான் மற்றும் முகமது சைனி ஆகியோர் இருக்கும் இடம் குறித்து சிஐடிக்கு தகவல் அளித்ததாகவும், ஆனால் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர் அவர்களை கைது செய்யவில்லை என்றும் அம்பாறைக்கு பொறுப்பாக இருந்த அரச புலனாய்வு சேவையின் அதிகாரி நேற்று (22) சாட்சியம் அளித்தார்.

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் குழு அறையில் நேற்று ஆணைக்குழு கூடியது.

இதன்போது சாட்சியமளித்த உளவுத்துறை அதிகாரி,

காத்தான்குடி பகுதியில் தீவிரவாத அமைப்புகளின் நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களை 2016 அன்று உளவுத்துறை அதிகாரிகளுடன் கலந்துரையாடியபோது வெளிப்படுத்தினேன். தேசிய தவ்ஹீத் ஜமாஅத்தின் தீவிரவாத நடவடிக்கைகள் குறித்து பேசினேன். முஸ்லீம் தீவிரவாதத்தை பரப்புவதில் முகமது சஹ்ரான், சஃபி மற்றும் சைனி ஆகியோர் ஈடுபட்டுள்ளனர் என்பதை நான் சுட்டிக்காட்டினேன்.

முஸ்லிம் அமைப்புக்கள் மட்டுமல்ல, மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரதன தேரரும் தீவிரவாதமாக நடந்து கொண்டிருப்பதை நான் சுட்டிக்காட்டினேன்.

மேலும், கிழக்கு மாகாணத்தில் இயங்கும் தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்புக்கு கூடுதலாக, இலங்கை தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு, சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு, சிவசேனா, மஹாசன் படை, சிங்கள தேசிய அமைப்பு,
சிங்கள ரவயா போன்ற அமைப்புகளைப் பற்றியும் சுட்டிக்காட்டினேன்.

சஹாரன், ரில்வான், ஆமி மொஹிதீன் மற்றும் யூசுப் அன்வர் ஆகியோரை கைது செய்ய நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்தது. முகமது சைனி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். ஆனால் மற்ற நான்கு பேரும் ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்னர் கைது செய்யப்படவில்லை.

ஆமி மொஹிதீன் பாசிகுடாவில் ஒரு தென்னந் தோட்டத்தில் ஒரு வீட்டில் வசித்து வந்தார். ரில்வான் அந்த பகுதிக்கு வெளியே பல்வேறு இடங்களில் வசித்து வந்தார். மேலும் அவரது மனைவி 309 / பி, இரண்டாவது குறுக்கு, ஃபரினாஸ் வீதி, ஆரையம்பதி கிழக்கில் வசித்து வந்த வீட்டை அடிக்கடி பார்வையிட்டார்.

அவரது மனைவி பிரசவித்திருந்த குழந்தையை பார்க்க வந்து போனார்.

அரச புலனாய்வு அதிகாரிகளுக்கு கைது செய்யவதற்கான அதிகாரம் இல்லாத காரணத்தினால் ஆமி மொஹிதீன் மறைந்திருந்த இடம்தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு தகவல் வழங்கினோம்.

இன்ஸ்பெக்டர் மரசிங்க என்ற அதிகாரியுடன் ஒரு குழு வருவதாக முதலில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் பின்னர் சப்-இன்ஸ்பெக்டர் டயஸ், பொலிஸ் சார்ஜன்ட் நந்தலால் உள்ளிட்ட ஒரு குழு மார்ச் 7, 2019 அன்று வந்தது.

எனக்கு கீழ் இரண்டு அதிகாரிகள் அவர்களை தொடர்பு கொண்டனர். அவர்கள் பாசிக்குடாவுக்குச் சென்று ஆமி மொஹிதீன் இருக்கும் இடத்தை சுட்டிக்காட்டினர். மற்ற சந்தேக நபர்கள் இருக்கும் இடத்தைப் பார்க்க எங்கள் அதிகாரிகளுடன் செல்வதற்குப் பதிலாக, அவர்கள் இருக்கும் இடம் பற்றிய தகவல்களைப் பெற்று அவற்றை வரைபடமாக்கினோம்.

ஈஸ்டர் ஞாயிறு வரை அவர் கைது செய்யப்படவில்லை. அந்த சந்தர்ப்பத்தில் கூட சஹ்ரான் ஹசீமை கைது செய்ய புலனாய்வு பிரிவு தகவல்களைத் தேடிக்கொண்டிருந்த போதிலும் ஆமி மொஹிதீனை கைது செய்து சஹ்ரான் ஹசீம் தொடர்பில் தகவல்களை பெற்றுக் கொள்ள எதிர்ப்பார்த்தாலும் அவர் அந்த சந்தர்ப்பத்தில் கைது செய்யப்படவில்லை.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்குப் பிறகு, ஏப்ரல் 24, 2019 அன்று, அவர்கள் திரும்பி வந்து ஆமி மொஹிதீனை கைது செய்தனர். ஆனால் அந்த நேரத்தில் அவர் முன்பு அடையாளம் கண்டுகொண்ட வீட்டில் இல்லை. அங்கு இருந்த மற்றொரு நபர் கைது செய்யப்பட்டார். பின்னர் மொஹிதீன் அழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.

சஹாரனின் ஆயுதக் குழுவினருக்கான பயிற்சிகளை நடத்தியவர் அவர்தான். பாசிக்குடாவில் அவர் கடற்கரைக்கு வந்து உடற்பயிற்சி செய்கிறார். 1994 ல் ராணுவத்தில் சேர்ந்த அவர் பின்னர் ராணுவத்தில் இருந்து தப்பினார். அவர் 2004 இல் பொது மன்னிப்பு பெற்றார் மற்றும் இராணுவத்தை சட்டப்பூர்வமாக விட்டுவிட்டார். பின்னர் எலக்ட்ரீஷியனாக வாழ்ந்தார்.

கடந்த வருடம் ஏப்ரல் 24 ஆம் திகதி ஆமி மொஹிதீன் கைது செய்யப்பட்டு அவருடன் தொலைபேசியை சோதனை செய்த சந்தர்ப்பத்தில் இதற்கு முன்னர் சந்தேக நபரை கைது செய்ய வருகை தந்த குற்றப்புலனாய்வு திணைக்கள குழுவின் பொலிஸ் சார்ஜன்ட் நந்தலாலின் புகைப்படம் ஒன்று குறித்த தொலைபேசியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் ஆமி மொஹிதீன் இதற்கு முன்னர் பயன்படுத்திய தொலைபேசி தகவல்கள் அழிக்கப்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் ஆமி மொஹிதீன் கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் அவரை அழைத்து செல்வதற்கு குற்றப்புலனாய்வு திணைக்கள உப பொலிஸ் பரிசோதகர் டயஸ் மற்றும் பொலிஸ் சார்ஜன்ட் நந்தலால் ஆகிய அதிகாரிகளே வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன்போது சந்தேக நபரான ஆமி மொஹிதீன் ´சேர் இனக்கும் இந்த தாக்குதலுக்கு எந்த தொடர்பும் இல்லை, பொய் என்றால் நந்தலால் சேரிடம் கேட்டுப்பருங்கள்´ என தெரிவித்தாகவும் அவர் சாட்சி வழங்கியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here