தோட்டத்துறையில் இயங்காத தொழிற்சாலைகளில் சுய தொழில் திட்டங்கள்: அனுஷா!

பெருந்தோட்டதுறையில் மூடிக்கிடக்கும் தொழிற்சாலைகளில் சுய தொழில் திட்டங்களை ஆரம்பிப்பதன் மூலம் இங்குள்ள இளைஞர் யுவதிகள் அதிகளவில் வேலை வாய்ப்பினை பெற்றுக் கொள்ளும் நிலையை உருவாக்கலாம் என்று மலையக மக்கள் முன்னணியின் பிரதிசெயலாளர் நாயகமும் சட்டத்தரணியும் கோடரி சின்ன வேட்பாளருமான அனுஷா சந்திரசேகரன் தெரிவித்தார்.

அப்கொட் பகுதியில் தன்னை சந்தித்த இளைஞர் யுவதிகள் மத்தியில் அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கும் போது,

மலையகத்தில் கல்வி கற்ற இளைஞர் யுவதிகளுக்கேற்ற வேலைவாய்ப்புகள் கிடைக்காததால் எமது இளைஞர்கள் வெளி மாவட்டங்களுக்கு இடம் பெயர்ந்து செல்கிறார்கள். இது அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் மட்டுமல்ல எமது சமூக கட்டமைப்பிலும் பாரிய சிக்கல்களையும் சவால்களையும் தோற்றுவித்து விடுகிறது.

தேயிலை பயிர்ச்செய்கையில் ஆர்வமில்லாத இளைஞர் யுவதிகளும் கூட அன்றாட வேலைக்காக வெளிமாவட்டங்களுக்கும் நகர்ப்புரங்களுக்கும் இடம் பெயர்ந்து செல்கிறார்கள். இவ்வாறானவர்களின் எதிர்காலம் எவ்விதமான உத்தரவாதமும் இன்றி கேள்விக்குறியாகிறது.

இவர்களை சுயதொழிலில் ஈடுபடுத்துவதற்கேற்ற அனைத்து சாத்தியக் கூறுகளையும் ஆராய்ந்து பயன்படுத்த வேண்டும்.
இதன் ஒரு கட்டமாக மூடிக்கிடக்கும் தொழிற்சாலைகளில் பல்வேறு சுயதொழில் திட்டங்களை உருவாக்கலாம். இதில் முதலீடு செய்யுமளவுக்கு தொழிலதிபர்களுக்கு நாம் நம்பிக்கையான செயற்திட்டங்களை முன்வைக்க வேண்டும். புலம் பெயர்ந்து வாழும் மலையகத்தவர்களின் உதவிகளையும் மலையகம் சார்ந்த தொழில் அதிபர்கள் மட்டுமின்றி எம் சமூகவளர்ச்சியில் அக்கறைக் கொண்ட ஏனைய முதலீட்டாளர்களின் பங்களிப்பையும் இதில் பெற்றுக்கொண்டால் இவ்வாறான திட்டங்களை அமுல் படுத்துவதில் எந்த பிரச்சினையுமே ஏற்படாது எனவும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here