தோட்டங்களை மேலும் 25 ஆண்டுகளிற்கு கம்பனிகள் குத்தகைக்கு கேட்கின்றனர்: ஜீவன்!

பெருந்தோட்டங்களை, தோட்ட கம்பனிகள் மேலும் 25 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு கேட்கின்றன. அதற்கு உடன்பட முடியாது. எமது மக்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்குவதே எமது இலக்காகும் – என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

அக்கரப்பத்தனை எல்பியன் தோட்டத்தில் இன்று இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்த கொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஜனாதிபதியால் ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொடுக்க முடியாது, அதற்கு சட்டத்தில் இடமும் இல்லை என்று சிலர் கூறியுள்ளனர். ஆயிரம் ரூபா பெற்றுக்கொடுக்கப்படும் என ஜனாதிபதி, பிரதமர் ஆகிய இருவரும் உறுதியளித்துள்ளனர். எனவே, கம்பனிக்கு தேவையான சலுகைகளை வழங்கி, அழுத்தங்களைப் பிரயோகித்து உரிய நடவடிக்கையை எடுப்பார்கள். மாபெரும் தொழிற்சங்கமான எமக்கும் பக்கபலமாக இருப்பார்கள்.

மேலதிக 2 கிலோ கொழுந்து, மேலும் 25 ஆண்டுகளுக்கு குத்தகை காலத்தை நீடித்தல் உட்பட மேலும் சில நிபந்தனைகளை கம்பனிகள் முன்வைத்தன. அவற்றுக்கு நாம் உடன்படவில்லை. தற்போதே பாதி தோட்டங்களை காடாக்கியுள்ளனர். இந்நிலையில் மேலும் 25 ஆண்டுகள் வழங்கினால் என்ன நடக்கும்? முழு தோட்டத்தையும் நாசமாக்கிவிடுவார்கள்.

100 ரூபாவை வாங்கிக்கொடுத்துவிட்டு நிலுவைக்கொடுப்பனவான 88 ஆயிரம் ரூபாவுக்கு சிலர் வேட்டு வைத்ததுபோல, நிபந்தனைகளுக்கு அடிபணிந்து அவசரப்பட்டு தவறான முடிவை எடுப்பதற்கு நாம் தயார் இல்லை. அப்படி செய்தால் அவர்களுக்கும், எமக்குமிடையில் வித்தியாசம் இல்லாமல்போய்விடும்.

மலையக பல்கலைக்கழகம் அட்டனில் அமையவேண்டும் என கோரிக்கை முன்வைத்திருந்தோம். அதற்கான நிதி ஆசிய அபிவிருத்தி வங்கி ஊடாக பெறுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. ஓராண்டுக்குள் திட்டம் நிறைவேறும். இதன்படி ஆறுமுகன் தொண்டமானின் ஒரு கனவு நிறைவேறிவிடும்.

அதேவேளை, கடந்த காலங்களில் ஆயிரம் ரூபாவை வைத்து ஏனைய பிரச்சினைகளை மூடிமறைத்தனர். தற்போதும் இதனையே செய்வதற்கு முயற்சிக்கின்றனர். தொழிற்சங்கம் ரீதியாக செய்து முடிக்க வேண்டிய வேலையைக்கூட அரசியல் மயப்படுத்துகின்றனர். குடிநீர் பிரச்சினை உட்பட எமது மக்களுக்கு பல பிரச்சினைகள் இருக்கின்றன. இவை தொடர்பில் பேச வேண்டும். தற்போதைய சூழ்நிலையில் ஆயிரம் ரூபா போதாது, எனவே, நிரந்தர தீர்வு அவசியம். அதற்காக தோட்டத் தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்க வேண்டும். அதற்கான திட்டத்தை நாம் முன்னெடுப்போம்.

எமது மக்களுக்கான தனிவீட்டுத் திட்டம்கூட உரிய வகையில் முன்னெடுக்கப்படவில்லை. எமது இளைஞர்கள் புறக்கணிக்கப்பட்டனர். தோட்டத்தில் வேலை செய்தவர்களுக்கு மாத்திரமே அதுவும் கட்சி மற்றும் தொழிற்சங்கம் பார்த்து வழங்கப்பட்டது. இந்நிலைமையை நாம் மாற்றுவோம். கிராமமொன்றை அமைப்போம். பொருளாதாரத்தையும் பலப்படுத்துவோம். காணி உரிமை பத்திரம் வழங்கிவிட்டார்களாம். அவற்றை காட்டுமாறு சவால் விடுகின்றேன்.” – என்றார்.

க.கிஷாந்தன்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here