அங்கொட லொக்கா: கணவன் கொலைக்கு பழிவாங்க காதலியாக நடித்து நஞ்சூட்டினாரா?… வெளிநாடு தப்ப முகமாற்று அறுவை சிகிச்சையா?; சினிமாவை மிஞ்சிய சுவாரஸ்ய சம்பவங்கள்!

இலங்கையில் இருந்து தப்பிச் சென்று, இந்தியாவில் தலைமறைவாக வாழ்ந்து வந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவரான மதுமேஜ் லசந்த சமிந்த பெரேரா அல்லது அங்கொட லொக்கா விசம் செலுத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.

அவரது காதலியாக நடித்து, பெண்ணொருவரே இந்த கொலையை புரிந்துள்ளார். அந்தப் பெண் தற்போது தலைமறைவாகி விட்டார்.

இந்த சம்பவம் குறித்து, சினிமாவை மிஞ்சிய பரபரப்பு தகவல்கள் வெளியாகி வருகின்றன.

அங்கொட லொக்கா உயிரிழந்து விட்டார் என இலங்கையிலுள்ள பாதாள உலக கும்பல் உறுப்பினர்கள் பல நாட்களின் முன்னரே தகவல் தெரிவித்து வந்துள்ளனர். அங்கொட லொக்கா கடந்த 3ஆம் திகதி உயிரிழந்துள்ளார் என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

எனினும், சென்னையிலுள்ள இலங்கைத் துணைத்தூதர், அவரது உயிரிழப்பு பற்றி உறுதியான தகவல் எதுவும் இல்லை, இராஜதந்திர மட்டத்தில் இது குறித்து ஆராயப்படுவதாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அங்கொட லொக்கா முகமாற்ற சிகிச்சை செய்து கொண்டு இலங்கைக்கு வர அல்லது ஐரோப்பிய நாடொன்றிற்கு செல்ல இந்த தகவலை பரவ விட்டாரா என்ற கோணத்திலும் இந்த விடயத்தை அணுகுவதாக தெரிவித்துள்ளார்.

ஏனெனில், அங்கொட லொக்கா முகமாற்ற அறுவை சிகிச்சை செய்து இத்தாலிக்கு தப்பிச்செல்ல முயற்சிப்பதாக புலனாய்வுப் பிரிவினர் ஏற்கனவே தகவல் பெற்றிருந்தனர்.

தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, இலங்கையிலிருந்த சென்ற அழகுக்கலையில் ஈடுபட்ட பெண்ணொருவரே இந்த கொலையை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கொட லொக்காவை பழிவாங்கவே அவர் காதலியாக நடித்து, இந்த கொலையை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடலுக்கு சக்தியூட்டும் பானத்தில் அவருக்கு விசம் கலந்து வழங்கப்பட்டதாகவும், சுமார் ஒரு வாரமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அவரது இறுதிச் சடங்கின் வீடியோ இந்தியாவின் தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் நடந்ததாகவும், அங்கு எடுக்கப்பட்ட வீடியோவை, அங்கொட லொக்காவின் சகோதரிக்கு, அழகுக்கலை பெண் அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. இதன்மூலமே தகவல் இலங்கைக்குள் பரவியது.

இந்த சம்பவத்தின் பின்னணியில் மற்றொரு சக்திவாய்ந்த பாதாள உலக கும்பல் உறுப்பினர் இருந்ததாகவும், அவர் அந்தப் பெண்ணை இந்தியாவுக்கு அனுப்பி கொலை செய்ததாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அந்தப் பெண் ஒரு அழகு கலைஞர். சில காலமாக அங்கொட லொக்காவின் காதலியாக இருந்து வருகிறார். அவ்வப்போது அவரை சந்தித்து வருகிறார் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

அங்கொட லொக்காவும், அவரது நண்பரான தினமுல்ல கங்கனவை சேர்ந்த நலின் சதுரங்க அல்லது லடியாவும் சென்னை காவல்துறையினரால் 2017 ஆம் ஆண்டு மே 22ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.

இரண்டு போலி பாஸ்போர்ட்டுகள் மூலம் இந்தியாவிலிருந்து ஐரோப்பிய நாடொன்றிற்கு தப்பிக்க முயன்றபோது, இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர். அப்போது மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர்கள் இருவரும் தேடப்பட்டவர்கள் என்ற தகவல் வெளியானது.

அதன்படி, சரணடைதல் சட்டத்தின் கீழ் இலங்கைக்கு ஒப்படைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சந்தேக நபர்களைப் பற்றிய தகவல்களை சென்னை காவல்துறை இலங்கை காவல்துறைக்கு வழங்கியிருந்தது.

இதற்கிடையில், பொலிஸாரால் பிணையில் விடுவிக்கப்பட்ட சந்தேக நபர்கள் இரகசியமாக வேறு மாநிலத்திற்கு தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டது.

களுத்துறை சிறைச்சாலையிலிருந்து கொழும்பு சிறைச்சாலைக்கு சமயங் உள்ளிட்ட சந்தேகநபர்களை ஏற்றிச் சென்ற பஸ் சுமார் 20 ஆயுதமேந்திய அடையாளம் தெரியாத நபர்கள் குழுவால் தடுத்து நிறுத்தப்பட்டு, பிப்ரவரி 27, 2017 அன்று துப்பாக்கிச் சூடு நடந்தது.

இந்த வழக்கின் முக்கிய சந்தேக நபராக அங்கொட லொக்காவை பொலிசார் பெயரிட்டுள்ளனர். இந்த சம்பவத்திற்குப் பிறகு அவர் இந்தியாவுக்கு தப்பிச் சென்றதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

அங்கொட லொக்காவை கொன்றதாக கூறப்படும் அழகுக்கலை பெண், அவரை பழிவாங்கியதற்கு பின்னால் கொலைச்சம்பவம் ஒன்று உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த பெண்ணின் கணவன், அங்கொட லொக்காவின் கூட்டாளியாக செயற்பட்டவர். அவர் பின்னர் அங்கொட லொக்காவினாலேயே கொல்லப்பட்டார். அப்போது இரு தரப்பிற்குமிடையில் முரண்பாடு ஏற்பட்டாலும், அங்கொட லொக்காவை பழிவாங்க, அந்த சம்பவத்தை பெரிதாக காண்பிக்காமல், அவருடன் நெருங்கிப் பழகியுள்ளார். இதனால் இருவரும் காதலர்களாக மாறினர். அந்த பெண், பழிவாங்குவதற்காக லொக்காவுடன் நெருக்கத்தை ஏற்படுத்தி, அடிக்கடி இந்தியா சென்ற வந்துள்ளார்.

தனது கணவனின் கொலைக்கு பழிவாங்கவே அவர் நெருங்கிப்பழகி, நஞ்சூட்டி கொன்றதாக கூறப்பட்டுள்ளது. அங்கொட லொக்கா நஞ்சூட்டப்பட்ட பின்னர், அந்த பெண் அவரை வீடியோ எடுத்துள்ளார். அவரது இறுதிச்சடங்கையும் வீடியோ எடுத்து, அங்கொட லொக்காவின் சகோதரிக்கு அனுப்பியுள்ளார்.

இதேவேளை, அங்கொட லொக்கா கொல்லப்பட்டதும், அவரது சொத்துக்களிற்காக அடியாட்கள் மோதலில் ஈடுபடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here