நம்ப முடியாத காட்சி: தீயிலிருந்து தப்ப 3வது மாடியிருந்து குதித்த 3, 10 சிறார்கள்; பாதுகாப்பாக ஏந்தப்பட்டனர்!


அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய இரண்டு சிறார்கள், 3வது மாடியிலிருந்து குதித்த திகிலூட்டும் வீடியோ காட்சிகள் வெளியாகின

3, 10 வயதான சிறார்களே 33 அடி உயரத்திலிருந்து கீழே குதித்தனர். கீழே கூடியிருந்த சிலர், அவர்களை ஏந்திப்பிடித்தனர். இந்த ஆச்சரிய வீடியோ இணையத்தளங்களில் தீயாக பரவி வருகிறது.

தென்கிழக்கு பிரான்ஸின் கிரெனோபில் பகுதியில் உள்ள கட்டிடத்தில், நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை திடீரென பெரும் தீ விபத்து ஏற்பட்டது. 3வது மாடியில் வீடொன்றில் சிக்கியிருந்த 3, 10 வயதான இரண்டு சிறார்கள் தீயில் கருக வேண்டும் அல்லது குதித்து தப்ப வேண்டுமென்ற வாழ்வா சாவா தருணத்தில், கீழே குதிப்பதென தீர்மானித்தனர்.

மாடியின் கீழே நின்றவர்களிடம் மூத்த சகோதரன் உதவி கோரினான். இதன்படி சுமார் 8 பேர் அவர்களை தாங்கிப்பிடிக்க தயாராகினர். முதலில் 3 வயதான தனது தம்பியை கீழே நின்றவர்களிடம் வீசினார், 10 வயதான சகோதரன்.

பின்னர் அவர் ஜன்னலில் தொங்கிக் கொண்டிருந்து விட்டு, கீழே குதித்தார். அவரையும் கீழே நின்றவர்கள் தாங்கிப் பிடித்தனர்.

இந்த சம்பவத்தில் 17 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 4 பேர், மாடியிலிருந்து குதித்த சிறார்களை தாங்கிப்பிடித்தவர்கள். ஒருவருக்கு மணிக்கட்டு உடைந்திருந்தது. இன்னொருவருக்கு தோள்மூட்டு உடைந்திருந்தது.

மணிக்கட்ட உடைந்த  25 வயதான அதுமனி வாலித் இது பற்றி கூறும்போது, “திடீரென அலறல் சத்தம் கேட்டது. வெளியில் வந்து பார்த்தபோது அருகிலுள்ள கட்டிடத்தில் தீப்பற்றியிருந்தது. உடனே அங்கு ஓடினேன். வழியில் அகப்பட்ட 4,5 பேரையும் அழைத்துக் கொண்டு சென்றேன்.

என்ன செய்வதென எமக்கு தெரியவில்லை. நாங்கள் கதவை உடைக்க விரும்பினோம். ஆனால் அது சாத்தியமில்லை. சிறுவர்கள் எமது கைகளில் குதிக்கப் போவதாக கூச்சலிட்டனர். ஆரம்பத்தில் சிறுவர்கள் பயந்தனர். எமக்கும் பயமாக இருந்தது. ஆனால் முதலாவது குழந்தை கீழே வீசப்பட்டதும் பயம் போய்விட்டது. அவர்களை காப்பாற்ற வேண்டுமென்பதே முக்கியமானது“ என்றார்.

அந்தப்பகுதி அதிகம் புலம்பெயர்ந்தவர்கள் வசிக்கும் பகுதி. “நாங்கள் ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருக்கிறோம் என்பதை உணர்த்தியுள்ளோம்“ என அந்த மீட்புப்பணியில் ஈடுபட்ட இன்னொருவர் தெரிவித்தார்.

நகர மேயர் எரிக் பியோல் மீட்புப் பணியில் ஈடுபட்டவர்களை வாழ்த்தினார்.

https://www.ledauphine.com/faits-divers-justice/2020/07/21/grenoble-deux-enfants-sautent-d-un-balcon-pour-echapper-a-un-incendie

2018 மே மாதம் பல்கனியில் தொங்கிக் கொண்டிருந்த குழந்தையொன்றை மாலியை சேர்ந்த அகதியொருவர் அநாயாசமாக செயற்பட்டுமீட்டதும், அவருக்கு பிரான்ஸ் குடியுரிமை வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here