75 ஆண்டுகளில் முதல் முறை: ஐ.நா பொதுக்குழுக் கூட்டத்தில் உலகத் தலைவர்கள் இந்த முறை நேரடியாக பங்கேற்பு இல்லை!

ஐக்கிய நாடுகள் சபையின் 75 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக பொதுக்குழுக்கூட்டம் கொரோானா வைரஸ் பரவல் காரணமாக உலக நாடுகளின் தலைவர்களின் நேரடியான பங்கேற்பு இல்லாமல் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளது.

193 நாடுகளின் உறுப்பினர்களும் நேரடியாக இந்த முறை பங்கேற்காமல் வீடியோ மூலம் தங்களின் அறிக்கையை முன்கூட்டியே பதிவு செய்து அளிக்க ஒப்புக்கொண்டுள்ளனர்.

ஐ.நா.அவையின் பொதுக்குழுக் கூட்டம் வரும் செப்டம்பர் 15 ஆம் திகதி தொடங்குகிறது. 193 நாடுகளின் தலைவர்களும் ஐ.நா. விவாதத்தில் பங்கேற்று தங்களின் கருத்துக்களையும், உரைகளையும் வழங்குவார்கள். ஏறக்குறைய இந்த பொதுக்குழுக்கூட்டம் ஒருவாரத்துக்கும் அதிகமாக நடக்கும். செப்டம்பர் 21ஆம் திகதி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு,22 ஆம் திகதி முதல் அதன் மீது விவாதங்கள் நடக்கும்.

ஆனால், உலகம்முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதாலும், சர்வதேச விமானப் போக்குவரத்து முழுமையாக தொடங்காததாலும் இந்த முறை ஐ.நா. பொதுக்குழுக்கூட்டத்தில் உலகநாடுகளின் தலைவர்கள், பிரிதிநிதிகள் பங்கேற்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து, காணொலி மூலம் கூட்டத்தை நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு முடிவு எடுக்கப்பட்டது.

இதன்படி, ஐ.நா. பொதுச்சபை நேற்று எடுத்த முடிவின்படி, “ 75வது ஐ.நா. சபை பொதுக்குழுக்கூட்டம் இந்த ஆண்டு காணொலி மூலம் நடத்தப்பட உள்ளது. ஒவ்வொரு நாட்டின் உறுப்பினர், பார்வையாளர், நாட்டின் தலைவர், துணைத் தலைவர், மன்னர் அல்லது, அரசின் தலைவர் ஆகியோரின் அறிக்கை முன்கூட்டியே பேசப்பட்டு வீடியோவாக அளிக்கப்பட வேண்டும். அவர்கள் உரையாற்றும் நாள் வரும்போது, அந்த வீடியோ, விவாதத்தின் போது பொது அவையில் ஒளிபரப்பப்படும்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் பொருட்டு, உலகத் தலைவர்கள், பிரிதிநிதிகள் நேரடியாக பங்கேற்க முடியாத சூழலால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஐ.நா சபையின் 75 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறையாக பொதுக்குழுக் கூட்டத்தில் உலக நாடுகளின் பிரதிநிதிகள், தலைவர்கள், ஆயிரக்கணக்கான பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், தன்னார்வலர்கள், ஊடகத்தைச் சேர்ந்தவர்கள் நேரடியாக அவைக்கு வராமல் விவாதத்தில் பங்கேற்கும் புதிய முறை இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here