நீதிமன்ற அவமதிப்பு விவகாரத்தில் ஹூலை நீதிமன்றத்தில் முன்னிலையாக உத்தரவு!

நீதிமன்ற அவமதிப்பு விவகாரத்தில் நாளை (23) கொழும்பு வணிக மேல் நீதிமன்றில் ஆஜராகுமாறு, தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல் உள்ளிட்ட நால்வருக்கு, நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது.

சிரேஷ்ட சட்டத்தரணி கே.கணேஷயோகனின் அறிவுறுத்தல் பிரகாரம் சட்டத்தரணிகளான தனுஷன் கணேஷயோகன், அனுஷா ராமன், அச்சினி ரணசிங்க ஆகியோருடன் சிரேஷ்ட சட்டத்தரணி என்.ஆர்.சிவேந்ரன் முன்வைத்த விஷேட விளக்கங்களை ஆராய்ந்தே வணிக மேல் நீதிமன்றின் நீதிபதி டி.எப்.எச்.குணவர்தன, நீதிமன்ற அவமதிப்பு விவகாரத்தில் இந்த அழைப்பாணையை பிறப்பித்துள்ளார்.

கொழும்பு வணிக மேல் நீதிமன்றில் 2007 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க கம்பனி சட்டத்தின் 233 ஆவது அத்தியாயத்தின் கீழ் சாம் தேவபாலசிங்கம் மற்றும் பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல் ஆகியோர் 10 பிரதிவாதிகளுக்கு எதிராக சி.எச்.சீ/15/2020/ சி. ஓ எனும் வழக்கிலக்கத்தின் கீழ் வழக்கொன்றினை தாக்கல் செய்துள்ளனர்.

அதில் நீதிமன்றினால் வழங்கப்பட்ட உத்தரவொன்று, ‘Direction’ எனும் சஞ்சிகையில் கடந்த மே / ஜூன் மாத இதழில் 12 ஆம் பக்கத்தில் திருகோணமலையின் பால்டீயஸ் தியோலஜிகல் கல்லூரி விவகாரத்தில் நியாயத்தை நிலை நிறுத்தும் நடவடிக்கைகளில் தலையீடு செய்யும் வகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளதாகவும், அது நீதிமன்றை அவமதிக்கும் செயற்பாடு எனவும் சி.எச்.சீ/15/2020/ சி. ஓ வழக்கின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டிருந்த பிரதிவாதிகளில், 1,2,3,5,6,7,8 மற்றும் 10 ஆம் பிரதிவாதிகள் சார்பில் கொழும்பு வணிக மேல் நீதிமன்றுக்கு சிரேஷ்ட சட்டத்தரணி கே.கணேஷயோகனின் அறிவுறுத்தல் பிரகாரம் விடயங்கள் முன்வைக்கப்பட்டன.

அதனை ஆராய்ந்தே குறித்த சி.எச்.சீ/15/2020/ சி. ஓ இலக்க வழக்கில் முறைப்பாட்டாளர்களான சாம் தேவபால சிங்கம், பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல் ( நீதிமன்ற அவமதிப்பு விவகாரத்தில் 1ஆம் 2 ஆம் முறைப்பாட்டாளர் – பிரதிவாதிகள் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்), 3,4 ஆம் பிரதிவாதிகளான ஜோர்ஜ் எஸ். டேவிட், பேராசிரியை துஷ்யந்தி ஹூல் ஆகியோரையும் நாளை நீதிமன்றில் ஆஜராக அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here