குள்ள மனிதர் யார்?: பொலிசார் அம்பலப்படுத்திய அதிர்ச்சி உண்மை!

குள்ளமனிதன் விவகாரம் பொய்யான சம்பவம் என பொலிசார் கூறுகின்றனர். இதுவரை குள்ள மனிதனை நேரில் கண்டதாக ஒரு பொதுமகன்கூட கூறவில்லையென பொலிசார் கூறியுள்ளனர்- இவ்வாறு உள்ளதை உள்ளபடி நேரில் கூறியிருக்கிறார் வடக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன்.

வடக்கு முதலமைச்சருக்கும், வடக்கு பொலிசாருக்குமிடையில் நேற்று விசேட கலந்துரையாடல் ஒன்று நடந்தது. யாழில் அண்மையில் அதிகரித்துள்ள வாள்வெட்டு, வன்முறைகள், பீதி உள்ளிட்டவை தொடர்பில் ஆராயும் இந்த விசேட சந்திப்பின் முடிவிலேயே முதலமைச்சர் இப்படி தெரிவித்தார்.

“வாள்வெட்டு சம்பவங்கள் தொடர்பில் மக்கள் எவரும் முறைப்பாடு தருவதில்லை. இந்த சம்பவங்களின் பின்னால் அரசியல் இருக்குமோ என சந்தேகிப்பதாக பொலிசார் கூறுகின்றனர். வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் குறித்தும், அவர்களிற்கிடையிலுள்ள தொடர்புகள் குறித்தும் பொலிசார் எமக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் கூறியுள்ளனர்.

போதைப்பொருள் கடத்தல் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருவதால், கடத்தல் வெகுவாக குறைந்துள்ளதை சுட்டிக்காட்டினார்கள். மணல் கடத்தலையும் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக கூறினார்கள். இந்த விடயங்களில் பொலிசார் எடுக்கும் நடவடிக்கைகள், அதன் முன்னேற்றங்கள் குறித்து வாரத்துக்கு ஒரு அறிக்கை தரும்படி கேட்டிருக்கிறேன்.

வடக்கில் வீதி விபத்து அதிகரித்துள்ளது. இதை ஆராய்ந்தபோது, வீதியில் பொறுப்பற்ற விதத்தில் நிறுத்தப்படும் வாகனங்கள் குறித்தும் ஆராய்ந்தோம். வீதி அபிவிருத்தி அதிகாரசபையுடன் பேசுவதாகவும், சாரதிகள் ஓய்வின்றி நீண்டநேரம் பயணிப்பது பற்றி ஆராய்வதாகவும் குறிப்பிட்டார்கள்.

எனவே நீண்டதூர சேவையில் ஈடுபடும் பயணிகள் வாகனங்களை பதிவுசெய்யுமாறும், இரண்டு சாரதிகள் அதில் இருப்பதை உறுதிசெய்யுமாறும் பொலிசாரை நான் கேட்டுள்ளேன்.

குற்றச்செயல்கள் குறித்து மக்கள் முறைப்பாடு தெரிவிக்க அச்சப்படும் நிலையில், மக்களின் அச்சத்தை போக்கும் விதத்தில் தொலைபேசி ஊடாக பிரதி பொலிஸ் மா அதிபரிடம் நேரடியாக முறையிடும் விதத்தில், அவருடைய தொலைபேசி இலக்கத்தை பொறித்த துண்டுபிரசுரங்களை விநியோகித்து வருவதாக பொலிசார் கூறினர்.

வாள்வெட்டு சம்பவங்களின் பின்னணியில் உள்ளவர்கள் பற்றிய புகைப்படங்களையும் வழங்கினார்கள். தனுரொக், ஆவா என்ற இரண்டு வாள்வெட்டு குழுக்களிற்கிடையிலான பிரச்சனையே இப்போது நடக்கிறது, வாகனம் ஒன்று மீட்கப்பட்டது தொடர்பாகவும் சொன்னார்கள். இந்த விடயத்தில் ஊடகங்கள் இல்லாத பொல்லாத விடயங்களை எழுதுவதற்கு அரசியல் பின்னணியுள்ளதாகவே கருதுகிறேன்.

குள்ளமனிதன் விவகாரத்தை ஆராய்ந்ததாகவும், குள்ளமனிதனை நேரில் கண்டதாக ஒருவரும் முறைப்பாடு தர தயாராக இருக்கவில்லையென சொன்னதாகவும் பொலிசார் தெரிவித்தனர்“ என்றார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனே இந்த விடயத்தில் தீவிரமாக இருப்பதும், அவர் சரிந்த வாக்குவங்கியை ஈடுகட்ட குள்ளமனிதன் விவகாரத்தை பூதாகாரப்படுத்தும் உத்தியை கையாள்கிறார் என்றும் பரவலான விமர்சனங்கள் எழுப்பப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here