சுவரொட்டி ஒட்டவிடாத வீட்டுக்குள் புகுந்து தாக்குதல்; பெண் வைத்தியசாலையில்: சிறிதரனின் சாரதி உள்ளிட்ட மூவர் மதுபோதையில் கைது!

யாழ்ப்பாண தேர்தல் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தற்போதைய வேட்பாளருமான சி.சிறிதரனின் வாகன சாரதி உள்ளிட்ட மூவர் வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கிளிநொச்சி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மூவரினாலும் தாக்கப்பட்ட பெண்ணொருவர் கிளிநொச்சி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வாகன சாரதி வேந்தன், உருத்திரபுர அமைப்பாளர் திலக்சன் உள்ளிட்ட மூவரே கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நாளை கிளிநொச்சி நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.

உருத்திரபுரம் பகுதியில் இந்த குழுவினர் தேர்தல் விதிமுறையை மீறி வீட்டு கதவுகளிலும், சுவர்களிலும் சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டு சென்றுள்ளனர். இதன்போது உருத்திரபுரத்திலுள்ள வீடொன்றின் கேற்றில் சுவரொட்டியை ஒட்ட முனைந்தனர். இதற்கு குடியிருப்பாளர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதற்கு அந்த நபர்கள், “நாங்கள் அனைத்து வீடுகளிலும் ஒட்டிக்கொண்டு வருகிறோம். உனக்கு மட்டும் தனிச்சட்டமா? இங்கு ஒட்டுவோம்“ என அடாவடியில் ஈடுபட்டதாக வீட்டு உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

இரு தரப்பிற்கும் தர்க்கம் உச்சமாக, தனது வீட்டு கேற்றில் சுவரொட்டி ஒட்டினால், அவர்களை தாக்குவேன் என கோடாரியை எடுத்து குடியிருப்பாளர் எச்சரித்துள்ளார். இதனால் கோபமடைந்த மூவரும் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த குடியிருப்பாளரை தாக்கி, அவரது மனைவியையும் தாக்கியதாகவும், வீட்டின் சொத்துக்களிற்கும் சேதம் விளைவித்ததாகவும் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

தாக்குதலில் காயமடைந்த பெண்மணி கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பொலிசாருக்கு விடயம் அறிவிக்கப்பட்டதையடுத்து, அடாவடியில் ஈடுபட்ட 3 பேரையும் மடக்கிப்பிடித்தனர். கைது செய்யப்பட்டபோது அவர்கள் மதுபோதையில் இருந்தனர் என தெரிவிக்கப்படுகிறது.

மதுபோதையில் வீடு புகுந்த பெண்ணை தாக்கிய மூவரும் தற்போது கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். நாளை நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here