பொருண்மிய மேம்பாட்டின் ஊடாகவே தமிழ்த்தேசியத்தையும் அதன் இருப்பையும் தக்கவைக்க முடியும்: மு. சந்திரகுமார்

எமது இனத்தின் இருப்பையும் தனித்துவத்தையும் பாதுகாப்பதற்கு பொருளாதார அடிப்படைகள் பலப்படுத்தப்பட வேண்டியது அவசியம். பொருண்மிய மேம்பாட்டின் ஊடாகத் தமிழ்த்தேசியத்தையும் அதன் நிலைபேற்றுக்கு அடிப்படையான இருப்பையும் தக்க வைக்க வேண்டிய கட்டமைப்புக்களை உருவாக்கி பலப்படுத்துதல் வேண்டும் என கேடயச் சின்னத்தில் சுயேச்சைக் குழுவில் போட்டியிடுகின்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திகுமார் தெரிவித்துள்ளார்.

நேற்று (20) மலையாளபுரம் கிராமத்தில் இடம்பெற்ற மாபெரும் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

அனைவருக்குமான தொழில் வாய்ப்புக்களைப் பெறுவதற்கேற்ற வகையில் மாவட்டங்களின் பொருளாதார மற்றும் உற்பத்திக் கட்டமைப்புக்களை விரிவாக்குதல், இளைய தலைமுறையினரை ஆய்வு அபிவிருத்தி மற்றும் உற்பத்தித்துறையில் ஈடுபடுத்துதல், தேசிய ரீதியாகவும் பாரம்பரிய ரீதியாகவும் மேற்கொள்ளக்கூடிய தொழிற்துறை மற்றும் உற்பத்தித் திட்டங்களை மேற்கொள்ள வேண்டும்.

தமிழர் பிரதேசங்களில் புலம்பெயர் சமூகத்தினர் முதலீடு செய்து உற்பத்திகளை ஆரம்பிப்பதற்கும் வேலை வாய்ப்புக்களை வழங்குவதற்கும் ஏற்றதான நடவடிக்கைகளை இலஞ்சம் – ஊழல் போன்ற தடைகள் இன்றி இலகுவாக மேற்கொள்ள வழிவகை செய்ய வேண்டும். எனவே இந்த தேர்தலில் மக்கள் எனக்கு அமோக ஆதரவளித்து அதிகாரத்தை வழங்கும் போது இந்த விடயங்களை என்னால் மேற்கொள்ள முடியும் என்பதனை உறுதிப்பட கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

அத்தோடு கிளிநொச்சி அறிவியல் நகரில் உருவாக்கப்பட்ட ஆடைத்தொழிற்சாலைகள், பழத்தொழிற்சாலை, முழங்காவிலில் உருவாக்கப்பட்ட நண்டு பதனிடும் தொழிற்சாலைகளைப் போல இன்னும் பல தொழிற்சாலைகளை உருவாக்கி ஆயிரக்கணக்கான நேரடியானதும் மறைமுகமானதுமான வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்ததுதல். யாழ்ப்பாண மாவட்டத்தில் முன்னர் இயங்கிய தொழில் நிறுவனங்களைப்போல புதிய சூழலுக்கு அமைவான தொழில்மையங்களை உருவாக்குதல் போன்ற விடயங்களை மேற்கொள்வதன் ஊடாகவே புலம்பெயர்ந்தும் இடம்பெயர்ந்தும் செல்லும் எமது சமூகத்தினரை தடுத்து நிறுத்தி சொந்த மண்ணில் தலை நிமிர்ந்து வாழ வைக்க முடியும்.

இதன் மூலமே எமது பிரதேசங்களின் பொருண்மிய மேம்பாட்டை ஏற்படுத்தி அதன் எமது மக்களை சொந்த மண்ணில் வளமுடன் வாழ வைக்க முடியும். அவ்வாறு வாழ்கின்ற போது தமிழ்த் தேசியத்தையும் அதன் இருப்பையும் தக்கவைக்க முடியும் என்பது எங்களுடைய உறுதியான நிலைப்பாடாகும் எனவும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here