பொதுமக்களின் எதிர்ப்பையடுத்து தமிழ் அரசு கட்சியின் பிரசுர விநியோகம் இடைநிறுத்தம்!

பொதுமக்களிடம் விநியோகிக்க மட்டக்களப்பு மாவட்ட இலங்கை தமிழ் அரசு கட்சியின் வாலிபர் முன்னணி அச்சிட்ட பெருந்தொகை துண்டுப்பிரசுரங்கள் பொதுமக்களின் எதிர்ப்பையடுத்து, விநியோகிப்பது இடைநிறுத்தப்பட்டது.

கட்சியின் செயலாளர் தரப்பு தகவல்களும் இந்த தகவலை தமிழ்பக்கத்திடம் உறுதிசெய்தன.

நேற்று முன்தினமும், நேற்றும் மாவட்டத்தின் சில பாகங்களில் துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டது. இதன்போது பொதுமக்களிடமிருந்து எழுந்த எதிர்ப்பையடுத்து, துண்டுப்பிரசுரம் விநியோகத்தை இடைநிறுத்த முடிவெடுக்கப்பட்டது. இன்று அந்த துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்படவில்லை.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் 8 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். இதில் இலங்கை தமிழ் அரசு கட்சி சார்பான 5 வேட்பாளர்களிற்கும் ஆதரவு திரட்டி, தமிழ் அரசு கட்சியின் இளைஞர் அணியினர் இந்த துண்டுப்பிரசுரத்தை அச்சிட்டனர்.

பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டபோது, “தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடுகிறீர்கள். பிறகெதற்கு 5 வேட்பாளர்களின் படத்துடன் வருகிறீர்கள். 3 பேருக்கு உங்களால் பிரச்சாரம் செய்ய முடியாவிட்டால் எதற்காக கூட்டமைப்பாக இணைந்தீர்கள்? அல்லது அந்த கட்சிகளிற்கு ஆசனம் கொடுத்தீர்கள்? நாம் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குத்தான் வாக்களிக்கலாம். அதிலுள்ள தனிக்கட்சிகளிற்கு வாக்களிக்க முடியாது“ என மாவட்டத்தில் பரவலான எதிர்ப்பு கிளம்பியிருந்தது.

இதையடுத்து துண்டுப்பிரசுர விநியோகம் இடைநிறுத்தப்பட்டது.

சுமார் 50,000 துண்டுப்பிரசுரங்கள் அச்சிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அதில் சிறியளவிலான பிரசுரங்களே விநியோகிக்கப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here