காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம்!

வவுனியா வீதிஅபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக சுழற்சிமுறை உணவுத்தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கபட்ட உறவினர்களின் போராட்டம் இன்றுடன் 1250வது நாட்களை எட்டுவதையிட்டு, கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த ஆர்பாட்டக்காரர்கள்,

கடந்த 1250 நாட்களாக நாம் போராடி வருகின்றோம். எமக்கான தீர்வினை தருமாறு வெளிநாடுகளிடம் நாம் கோரிக்கையை முன்வைத்துள்ளோம். எமது பிரச்சனையை பார்க்காமல் தேர்தல் தேர்தல் என்று அனைத்து கட்சிகளும் அலைகின்றன.

கூட்டமைப்பானது இரவிரவாக வாக்குகேட்டு வீடுகளுக்கு செல்கின்றனர். எமது பிரச்சனைக்கு தீர்வை கண்டிருந்தால் எமக்கு வாக்குபோடுங்கள் என்று அவர்கள் கேட்க வேண்டிய தேவையே இல்லை. எனவே இவ்வாறானவர்களை புறம்தள்ளிவிட்டு இராஜதந்திரம் மிக்க சட்டத்தரணிகளிற்கு இத்தேர்தலில் மக்கள் வாக்களிக்க வேண்டும்.

மீண்டும் அவர்களிற்கு வாக்களித்தால் இன்னும் ஐந்து வருடங்கள் வீதிகளிலேதான் நாம் இருக்க வேண்டும்.

அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவர்களின் தேர்தல் அறிக்கையை அண்மையில் வெளியிட்டது. அதில் சில முக்கியமான விஷயங்களை நாங்கள் கவனித்திருக்கிறோம். ,அவர்களின் அறிக்கையின் அடிப்படையில், அடுத்த தேர்தல் முடிவதற்குள் தமிழர்கள் அடிமைப்படுத்தப்படுவார்கள் என்பது நிச்சயம்.
சிங்களவர்களைப் பிரியப்படுத்தும் செய்தியாகவே அது தெரிகிறது.

அண்மையில் சிங்களசெய்தி ஊடகத்தில் சுமந்திரன் வழங்கி நேர்காணலில், ​​தமிழர்களை பயங்கரவாதிகள் என்றும் கீழ்த்தரமானவர்கள் என்றும்
சிங்களத்தை மகிழ்வித்தார். இது ராஜபக்சர்களையும், சிங்கள மக்களையும் மகிழ்ச்சி அளிப்பதற்கான சுமந்திரனின் செயல் என்பதுடன் சுமந்திரன் ஒரு மந்திரி பதவியை பெறுவதற்கு, கையாளும் தந்திரமாகவே இது காணப்படுகின்றது.

அத்துடன், தமிழர்களுக்கு என்ன நடந்தது என்பது பற்றிய சில கதைகளை அந்த அறிக்ககையில் கூறுகிறார்கள். ஆனால் தமிழரின் துன்பத்திற்காக அவர்கள் என்ன செய்தார்கள் என்பது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றனர்

ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்க நாட்டு கொடிகளை ஏந்தியிருந்ததுடன், கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here