சுவிஸ் தூதரக அதிகாரி கடத்தல் விவகாரம்: தர்சா குறித்து நீதிமன்றம் தடாலடி உத்தரவு!

கொழும்பிலுள்ள சுவிஸ் தூதரக அதிகாரி கானியா பெரிஸ்டா பிரான்சிஸ் கடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு வெளிநாட்டில் உள்ள ஊடகவியலாளர் தர்சா பெஸ்டியன்ஸினால் ஏதேனும் தடைகள் ஏற்படுத்தப்பட்டிருப்பின் அது குறித்து விசாரணை செய்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கொமும்பு பிரதான நீதவான் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரத்ன, குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த மனு நேற்று (20) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு விடயங்களை தெளிவுப்படுத்தினர்.

அதாவது ஊடகவியலாளர் தர்சா பெஸ்டியன்ஸின் மடிக்கணினி நீதிமன்றத்தின் தேடுதல் பிடியாணை அனுமதிக்கமைய ஜூன் மாதம் 10 ஆம் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தாக அவர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர்.

எனினும் ஊடகவியலாளர் தர்சா பெஸ்டியன்சை பிரதிநிதித்துவப்படுத்தி மன்றில் முன்னிலையான சட்டத்தரணி சிராஸ் நூர்டின், குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தமது கட்சிக்காரரின் மடிக்கணினியை ஜூன் 10 ஆம் திகதி பெற்றுக்கொள்ளவில்லை எனவும் மாறாக ஜூலை 4 ஆம் திகதியே மடிக்கணனி பெறப்பட்டதாக கூறினார்.

இதன் காரணமாக மடிக்கணினியில் உள்ள தரவுகள் மாற்றப்பட்டுள்ளதா? என விசாரிக்குமாறு சட்டத்தரணி சிராஸ் நூர்டின் நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டார்.

ஜூன் 4 ஆம் திகதி தனது கட்சிக்காரரின் வீட்டிற்கு வந்திருந்தாலும், ஜூன் 10 ஆம் திகதியே மடிக்கணினியை எடுத்துச் சென்றதாக தனக்கு தகவல் கிடைத்தாக சட்டத்தரணி சிராஸ் நூர்டின், மன்றில் ஒப்புக்கொண்டார்.

தகவல்தொடர்பு பிரச்சினை காரணமாக விசாரணையின் கடைசி நாளில் தான் இந்த அறிக்கையை வெளியிட்டதாகவும் சட்டத்தரணி சிராஸ் நூர்டின் கூறினார்.

அப்போது குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் சார்பில் ஆஜரான எஸ்.பி மெரில் ரஞ்சன் லமஹேவா நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைத்தார்.

ஊடகவியலாளர் தர்சா பெஸ்டியன்ஸ் வேண்டுமென்றே விசாரணைகளை தடுக்க முயற்சிக்கின்றாரா என்ற சந்தேகம் எழுவதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

ஊடகவியலாளர் தர்சா பெஸ்டியன் ஆரம்பத்தில் இருந்தே இது குறித்த விசாரணைக்கு தடையை ஏற்படுத்துகின்றமை தெரியவந்துள்ளதால் அது குறித்து விசாரணை நடத்த அனுமதிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரத்ன, ஊடகவியலாளர் தர்சா பெஸ்டியன்ஸினால் ஏதேனும் தடைகள் ஏற்படுத்தப்பட்டிருப்பின் அது குறித்து விசாரணை நடத்தவும், அவ்வாறு அவர் விசாரணைகளுக்கு தடையாக இருப்பது கண்டறியப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

பின்னர் இந்த வழக்கை செப்டம்பர் 8 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தீர்மானித்த நீதவான், அன்றைய தினம் விசாரணையின் முன்னேற்றம் குறித்த அறிக்கை ஒன்றை சமர்பிக்குமாறும் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதேவேளை, அண்மையில் நீதிமன்றம் வெளியிட்ட அறிவித்தலின் பிரகாரம் வெளிநாட்டில் உள்ள ஊடகவியலாளர் தர்சா பெஸ்டியன்ஸின் மாமனார் உபாலி இந்திரகுப்தவும் நீதிமன்றத்தில் ஆஜராகியதுடன் அவர் நீதிமன்றத்தில் பிரமாண பத்திரத்தை சமர்ப்பித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here