521 பந்துகளுக்குப் பிறகு விக்கெட் எடுத்த கெமர் ரோச்!

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வேகப்பந்து வீச்சாளர் கெமர் ரோச், கடைசியாக 2019 செப்டம்பர் 1 அன்று விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்தினார். அன்றைய தினம் டக் அவுட் ஆனார் கோலி. அந்த டெஸ்டில் மே.இ. தீவுகள் அணி தோற்றாலும் மொத்தமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார் ரோச்.

அதற்குப் பிறகு 521 பந்துகளைத் தொடர்ச்சியாக வீசிய பிறகுதான் தனக்கு அடுத்த விக்கெட் கிடைக்கும் என அன்றைய தினம் அவர் நினைத்திருக்க வாய்ப்பில்லை.

இதற்குப் பிறகு இரு டெஸ்டுகள் மற்றும் தற்போது நடைபெறும் டெஸ்ட் என 86.5 ஓவர்கள் வரை ஒரு விக்கெட்டும் கிடைக்காமல் பந்து வீசியுள்ளார். இதன்பிறகு நேற்று அடுத்தடுத்த பந்துகளில் ஸ்டோக்ஸ், வோக்ஸ் ஆகியோரை வீழ்த்தி பெருமூச்சு விட்டார்.

இதுவரை 58 டெஸ்டுகளில் (இந்த டெஸ்டையும் சேர்த்து) விளையாடியுள்ள 32 வயது ரோச், 195 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். 2009 முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார்.

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்புக்கு 469 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. 2-ம் நாள் முடிவில் மே.இ. தீவுகள் அணி 1 விக்கெட் இழப்புக்கு 32 ரன்கள் எடுத்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here