ஹொங்கொங்கிலிருந்து வெளியேறிய தைவான் தூதர்; அரசியல் தடைகள் காரணமாம்

ஹொங்கொங்கில் செயல்பட்ட தனது உயர்மட்ட தூதர் ஒருவர் தேவையற்ற அரசியல் தலையீடு காரணமாக தாயகம் திரும்பிவிட்டதாக தைவான் நேற்று தெரிவித்தது.

பெய்ஜிங்குக்கு ஆதரவான அறிக்கையில் கையெழுத்திட கட்டாயப்படுத்தப்பட்டதால் அவர் ஹொங்கொங்கிலிருந்து வெளியேறியதாக தைவானின் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.

ஹொங்கொங்கில் உள்ள ஜனநாயக ஆதரவு போராட்டக்காரர்களுக்கு ஆதரவு வழங்கப் போவதாக சில நாட்களுக்கு முன்பு தைவான் கூறியது. அது மட்டுமல்லாமல் ஹொங்கொங்கிலிருந்து வெளியேற விரும்புவோருக்கு உதவ அலுவலகம் ஒன்று திறக்கப்படும் என்றும் தைவான் அறவித்தது.

இதனால் எரிச்சலடைந்த பெய்ஜிங், தைவான் தூதருக்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

கடந்த மாதம் ஹொங்கொங்கில் சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தை சீனா நடைமுறைப்படுத்தியது.

மேலும் தைவான் அரசியல் அமைப்புகள் தங்களுடைய சொத்து விவரங்களை வெளியிட வேண்டும் என்று சீனாவின் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து சீனா-தைவான் உறவு மேலும் மோசமானது.

தைப்பே பொருளியல், கலாசார அலுவலகத்தின் இடைக்கால இயக்குநரான காவோ மிங்-டிசுன் தைவானுக்குத் திரும்ப கட்டாயப்படுத்தப்பட்டதாக தலைநில விவகார மன்றத்தின் பேச்சாளர் சியூ சுய்-செங் குறிப்பிட்டார்.

ஹொங்கொங் கருத்தொற்றுமையை மீறி நடந்துகொண்டதாகவும் தேவையில்லாத அரசியல் தடைகளை ஏற்படுத்தியதாகவும் அவர் கூறினார். ஆனால் அது எந்த மாதிரி தடைகள் என்பதை சியூ விளக்கவில்லை.

தைவானின் ‘அப் மீடியா’ எனும் ஊடகம், காவோ விசாவை புதுப்பிக்கச் சென்றபோது பெய்ஜிங்குக்கு ஆதரவான அறிக்கையில் கையெழுத்திட அவர் கட்டாயப்படுத்தப்பட்டதாகக் கூறியது.

ஒரே சீனாவில் தைவான் ஒரு பகுதி என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்ததாக அந்த ஊடகம் தெரிவித்தது.

இதனால் காவோ அறிக்கையில் கையெழுத்திட மறுத்து நாடு திரும்பினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here