தடுப்பு மருந்தின் ஆய்வுகளை திருட ரஷ்யா முயற்சிப்பதாக பிரிட்டன் புகார்

தங்கள் நாட்டில் நடைபெற்று வரும் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துக்கான ஆராய்ச்சி விவரங்களை ரஷ்யா திருட முயற்சிப்பதாக பிரிட்டன் குற்றம் சாட்டியுள்ளது.

கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இலட்சக்கணக்கானோர் உயிரிழந்து விட்டனர். மிக அபாயகரமான இந்த வைரஸைக் கட்டுப்படுத்த தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணி உலக நாடுகள் எங்கும் வேகமாக நடைபெற்று வருகிறது.

இதனிடையே, ரஷ்யாவில் இந்த வைரஸுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு விட்டதாக அந்நாட்டு அரசு அண்மையில் அறிவித்தது. மேலும், இந்த மருந்து ஓரிரு மாதங்களில் உலக சந்தைக்கு வந்துவிடும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில், தங்கள் நாட்டில் நடந்து வரும் கொரோனா தடுப்பு மருந்து ஆராய்ச்சி விவரங்களை ரஷ்ய அரசின் ஆதரவு பெற்ற ஹக்கர்கள் திருட முயற்சித்ததாக பிரிட்டன் பாதுகாப்புத் துறை இணையமைச்சர் ஜேம்ஸ் ப்ரோக்கன்ஷைர் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து ‘ஸ்கை நியூஸ்’ தொலைக்காட்சிக்கு அவர் நேற்று அளித்த பேட்டியில் மேலும் கூறியிருப்பதாவது:

பிரிட்டன் மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளில் நடந்து வரும் கொரோனா தடுப்பு ஆராய்ச்சி விவரங்களை ரஷ்ய உளவுத் துறை நிறுவனங்கள் திருட முயற்சித்து வருகின்றன. இதுபோன்ற செயல்களை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த நடவடிக்கையை அந்நாடு உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here