இளைஞர்களை பொலிஸ் அதிகாரி தாக்கியதால் பதற்றம்; வீதி மறியல்: வவுனியாவில் பரபரப்பு!

வவுனியா ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி இளைஞர்கள் இருவரை தாக்கியதால் அப்பகுதியில் குழப்பமான நிலை ஏற்பட்டிருந்தது.

இன்று மாலை 5 மணியளவில் ஈச்சங்குளம் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக குறித்த சம்பவம் இடம்பெற்றது.

சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட இளைஞர்கள் கருத்து தெரிவிக்கும் போது, இன்று மாலை குறித்த பகுதியில் நின்றிருந்த சமயம் அவ்வீதியால் வருகைதந்த ஈச்சங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்மை அங்கிருந்து செல்லுமாறு தெரிவித்து விட்டு சென்றார்.

பின்னர் சிறிது நேரத்தின் பின்னர் மீண்டும் வந்த அவர் திடீர் என்று எம்மை தாக்கினார். தாம் எந்த குற்றமும் செய்யாத நிலையில் அவர் எம்மை தாக்கியதாக பாதிக்கப்பட்ட இளைஞர்கள் தெரிவித்தனர்.

குறித்த சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் ஒன்று திரண்ட இளைஞர்கள் மற்றும் ஊர் மக்கள் ஈச்சங்குளம் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக உள்ள பிரதான வீதியின் குறுக்காக தடைகளை ஏற்படுத்தியதுடன், வீதியை வழிமறித்து தமக்குரிய நீதியை வழங்குமாறு கோரி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் குறித்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டிருந்தது. சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா பொலிஸ் அத்தியட்சகர், வவுனியா தலைமை பொலிஸ்நிலைய உப பொறுப்பதிகாரி, மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் செ.மயூரன் ஆகியோர் போராட்டக்காரர்களுடன் கலந்துரையாடியிருந்தனர்.

இந்நிலையில் தாக்குதலிற்குள்ளான இளைஞர்களை நாளையதினம் வன்னிமாட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகத்திற்கு சென்று முறையிடுமாறும், தற்போது போராட்டத்தை கைவிடுமாறும் பொலிஸ் அத்தியட்சகரால் வேண்டுகோள் விடுக்கப்பட்டதற்கமைய போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.

குறித்த போராட்டம் காரணமாக தாண்டிகுளம் ஊடாக பாலம்பிட்டி செல்லும் பிரதான பாதையூடான போக்குவரத்து இரண்டுமணி நேரம் தடைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here