‘இப்போது போதைப்பாவனையை கைவிட்டு விட்டேன்’: 1,100 பேருக்கு கொரோனா பரவ காரணமான ஜா எல இளைஞன் முகம் காட்டினார்!

இலங்கையில் அதிகமானவர்களிற்கு கொரோனா தொற்ற காரணமானர் என குறிப்பிடப்படும் ஜா-எல பகுதியை சேர்ந்த போதைக்கு அடிமையானவர் தனது அடையாளத்தை வெளிப்படுத்தியுள்ளார். இலங்கையில் அதிக கொரோனா பரவலிற்கு தன்னை காரணம் கூறுவதையும் நிராகரித்துள்ளார்.

தென்கொரியாவில் 3,000 பேருக்கு மேல் கொரோனா தொற்ற ஏற்பட காரணமானவர் “நோயாளி 31“ என குறியீட்டு பெயரால் அழைக்கப்பட்டார். சீனாவை சேர்ந்த சுற்றுலா பயணியான அவர், கொரொனா தொற்றுடன் தேவாலயம் ஒன்றிற்கு சென்றார். இதுவே, தென்கொரியாவில் கொரோனா தொற்று பரவலிற்கு காரணமாக அமைந்த சம்பவம்.

இதேபோல, இலங்கையில் “நோயாளி 206“என குறிப்பிடப்பட்ட நபரே, கொரோனா பரவலிற்கு பிரதான காரணம் என பொலிசார் பகிரங்கமாக அறிவித்தனர்.

ஜா-எலவை சேர்ந்த போதைப்பொருள் அடிமையாளரான அவர் மூலம் 1,100 பேருக்கும் அதிகமானவர்களிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

ஏப்ரல் 5ஆம் திகதி கொள்ளையில் ஈடுபட முயன்றபோது, கிராமவாசிகள் அவரை வளைத்துப் பிடித்து, நையப்புடைத்து, பொலிசாரிடம் ஒப்படைத்தனர். அவருக்கு காலில் காயமிருந்தது. அத்துடன் காய்ச்சல் இருந்தது. இதையடுத்து அவரை வைத்தியசாலையில் பொலிசார் ஒப்படைத்தனர். அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருந்தது.

இதையடுத்து ஜா எலவில் பலரை தனிமைப்படுத்தினர். அத்துடன், போதைப்பாவனையில் ஈடுபட்டவரின் வலையமைப்பை சேர்ந்தவர்களையும் அடையாளம் காணும் பணி நடந்தது. எனினும், ஜா எலவை சேர்ந்த போதைப்பாவனையாளர்கள் தனிமைப்பட மறுத்தனர். தப்பியோடினர். இதையடுத்து வெலிசறை கடற்படை முகாமை சேர்ந்த கடற்படையினர் களமிறக்கப்பட்டு, அந்த போதை வலையமைப்பு மற்றும் கொரோனா சங்கிலியை சேர்ந்தவர்கள் வெற்றிகரமாக தனிமைப்படுத்தப்பட்டனர்.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் நூற்றிற்கும் அதிகமானவர்கள் கொரோனாவுடன் அடையாளம் காணப்பட்டனர்.

இதை தொடர்ந்து, வெலிசறை முகாமிலிருந்த பொலன்னறுவையிலுள்ள தனது வீட்டுக்கு விடுமுறையில் சென்ற ஒரு கடற்படை வீரர், ஏப்ரல் 22ஆம் திகதி கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார்.

மறுநாள் நடத்தப்பட்ட சோதனையில் 30 கடற்படையினர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். இதை தொடர்ந்து வெலிசறை முகாம் தனிமைப்படுத்தப்பட்டு நடத்தப்பட்ட சோதனையில் சுமார் 900 கடற்படையினர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

அத்துடன், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் மூலம் 150 பேர் வரை தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

“நோயாளி 206“ என அடையாளம் காணப்பட்ட ஜா-எலவை சேர்ந்தவர் வெளிநாட்டு ஊடகங்களிடம் பகிரங்கமாக பேசியுள்ளார். அவரது பெயர் பிரசாத் தினேஷ் (33).

வேறு மூவருடன் இணைந்து போதைப்பொருள் பாவித்து வந்ததாகவும், போதைப்பொருளிற்காக பணம் தேவைப்பட்டபோது, தேங்காய் திருட சென்று, சிக்கியதாகவும் தெரிவித்தார்.

எனினும், இலங்கையில் பெருமளவு கொரோனா தொற்று ஏற்பட தானே காரணமென்பதை அவர் மறுத்துள்ளார்.

தான் போதைக்கு அடிமையானவன் இல்லையெனவும், எனினும் இடையிடையே பயன்படுத்துபவன் என்றும் தெரிவித்தார். 2002 முதல் போதைப்பொருளை பயன்படுத்தி வருகிறார். எனினும், கொரோனா காலத்தில் போதைப்பொருளை தினமும் பயன்படுத்தியதாகவும் தெரிவித்தார்.

தற்போது போதைப்பொருளில் இருந்து விடுபட்டு விட்டதாகவும், தற்போது அவற்றை பயன்படுத்தவதில்லையென்றும் தெரிவித்துள்ளார்.

கொரோனா ஏற்பட்டதால் ஏற்பட்ட நல்ல விசயம் நான் போதைப்பழக்கத்திலிருந்து விடுபட்டேன். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காலகட்டத்தில் போதைப்பழக்கத்திலிருந்து விடுபட்டேன். முதல் 2 நாள் கடுமையான வலியிருந்தது. பின்னர் சரியாகி விட்டது என்றார்.

இப்பொழுது சிகரெட் கூட புகைப்பதில்லை. எனது இரண்டு குழந்தைகளுடன் பொழுதை கழிக்கிறேன். ஆனால் எனத தொழில் வாய்ப்பு இல்லாமல் போய் விட்டது. கொரோனா பரவ காரணமாக இருந்தேன் என எனக்கு யாரும் தொழில் வாய்ப்பு தருவதில்லையென தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here