மேற்கு கரையை இணைக்கும் இஸ்ரேலின் திட்டத்திற்கு எதிர்ப்பு: ஐ.நாவில் பாலஸ்தீனத்தை ஆதரித்தது இலங்கை!

உத்தேச மேற்குக் கரை இணைக்கும் திட்டத்தை கைவிடுமாறு இஸ்ரேலுக்கு அழைப்பு விடுத்துள்ளது இலங்கை.

மனித உரிமைகள் பேரவையின் 44 ஆவது அமர்வில் உரையாற்றிய ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் பதில் நிரந்தர பிரதிநிதி தயானி மெண்டிஸ் இதனை வலியுறுத்தினார்.

பாலஸ்தீன மக்களின் நிலைமை குறித்து ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் மைக்கேல் லிங்க் முன்வைத்த அறிக்கையை இலங்கை கவனத்தில் எடுத்து, இந்த நிலைப்பாட்டை அறிவித்தது.

ஐ.நா. பொதுச்செயலாளர், மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர், இஸ்ரேலிய நடைமுறைகளை விசாரிப்பதற்கான ஐ.நா. சிறப்புக் குழு மற்றும் சிறப்பு அறிக்கையாளர் ஆகியோர் எழுப்பியுள்ள கவலைகளை இலங்கை பகிர்ந்து கொண்டது. இஸ்ரேலின் இணைப்பு திட்டம், ஐ.நா. சாசனம், தொடர்புடைய மாநாடுகள் மற்றும் பாதுகாப்பு கவுன்சில் மற்றும் பொது சபை தீர்மானங்கள் உள்ளிட்டவற்றை கடுமையாக மீறும செயல் என இலங்கை காட்டமாக தெரிவித்துள்ளது.

மேலும், இணைக்கப்பட்ட திட்டம் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையிலும் ஜோர்டான் பள்ளத்தாக்கிலும் வாழும் பாலஸ்தீனியர்களின் மனித உரிமைகளில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என்றும் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்களை வலுக்கட்டாயமாக இடம்பெயர வழிவகுக்கும் என்றும் சிறப்பு அறிக்கையாளர் எழுப்பிய கவலைகளை இலங்கை குறிப்பிட்டது.

பாலஸ்தீன மக்களுக்கு சுயாட்சி உரிமை மற்றும் அவர்களின் பிரதேசத்தில் உள்ள இயற்கை வளங்கள் ஆகியவற்றின் நியாயமான மற்றும் தவிர்க்கமுடியாத உரிமையின் கொள்கை ரீதியான நிலையை இலங்கை தொடர்ந்து, உறுதியாகக் கொண்டுள்ளது.

சர்வதேச சட்டத்திற்கு இணங்கவும், திட்டமிடப்பட்ட இணைப்பைக் கைவிடவும் இஸ்ரேல் அரசாங்கத்திடம் சர்வதேச சமூகத்துடன் இணைந்து அழைப்பு விடுத்த இலங்கை, அமைதியை நோக்கிய உரையாடலைத் தொடர அனைத்து தரப்பினரையும் வலியுறுத்தியது.

பாலஸ்தீனிய மக்களின் பெறமுடியாத உரிமைகள் மற்றும் 1967 எல்லைகளின் அடிப்படையில் இரு அரச தீர்வை அடைவது தொடர்பான ஐ.நா பொதுச் சபைத் தீர்மானங்களை விரைவாக அமல்படுத்தியதன் முக்கியத்துவத்தை இலங்கை மீண்டும் வலியுறுத்தியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here