நாவற்குழி அரசகாணியில் குடியிருக்கும் மக்கள் விவகாரம்: சுமுக தீர்விற்கு இணக்கம்

“தென்மராட்சி, நாவற்குழி தேசிய வீடமைப்பு அதிகார சபைக்கு சொந்தமான காணியில் குடியிருக்கின்ற மக்களுக்கு எதிரான வழக்குகளை சுமுகமான முறையில் தீர்த்து வைக்க முடியும். அதுதொடர்பில் வீடமைப்பு அமைச்சருடன் பேசி நடவடிக்கை எடுப்பதற்கு கால அவகாசம் வேண்டும்” என்று வீடமைப்பு அதிகார சபை சார்பில் முன்னிலையான சட்டத்தரணி சாவகச்சேரி நீதிமன்று இன்று அறிவித்தார்.

அதனால் அரச காணியில் குடியிருப்போருக்கு எதிராக தொடரப்பட்ட 12 வழக்குகளை வரும் நவம்பர் 9ஆம் திகதிவரை ஒத்திவைத்து சாவகச்சேரி நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

தென்மராட்சி, நாவற்குழியில் தேசிய வீடமைப்பு அதிகார சபைக்கு சொந்தமான காணியில் குடியிருக்கின்ற மக்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்காக தேசிய வீடமைப்பு அதிகார சபையால் சாவகச்சேரி நீதிமன்றில் 64 வழக்குகள் தொடரப்பட்டன. அவற்றில் 34 வழக்குகள் இன்று சாவகச்சேரி நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

இந்த வழக்கில் குடியிருப்பாளர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், சட்டத்தரணி கேசவன் சயந்தன் ஆகியோர் முன்னிலையாகினர்.

இந்த விடயம் தொடர்பாக வீடமைப்பு அமைச்சரோடு பேசி சுமூகமான முறையில் நடவடிக்கை எடுப்பதற்காக ஒரு நீண்ட தவணை ஒன்றை வழங்குமாறு வீடமைப்பு அதிகார சபை மற்றும் குடியிருப்பாளர்களின் சட்டத்தரணிகளால் விண்ணப்பம் செய்யப்பட்டது.

இதனடிப்படையில் எதிர்வரும் நவம்பர் 9ஆம் திகதிக்கு 34 வழக்குகளும் ஒத்திவைக்கப்பட்டன.

“நாவற்குழியிலுள்ள வீடமைப்பு அதிகார சபையின் காணியில் குடியிருக்கும் மக்கள், வீடமைப்புத் திட்டத்துக்கு எதிர்பார்த்துள்ளவர்கள். அந்த இடத்தில் வீடமைப்புத் திட்டத்தை அமைக்கவேண்டும் என்றுதான் அந்த மக்களை வீடமைப்பு அதிகார சபை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு நீதிமன்றில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் நாடாளுமன்றில் நேற்று வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாஸவுடன் பேசியிருந்தேன். நாவற்குழி விடயம் தனக்கு தெரியாது என்றும் உடனடியாக அது குறித்து விசாரிப்பேன் என்று உறுதியளித்தார். அத்துடன், அரச காணியில் குடியிருக்கும் மக்களை வெளியேற்றுவது அரசின் கொள்கையில்லை என்பதையும் அமைச்சர் சஜித் பிரேமதாஸ திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார்.

அதனடிப்படையில் வீடமைப்பு அதிகார சபையின் அதிகாரிகள் என்னுடன் நேற்றுமாலை உரையாடி, இதுதொடர்பான எல்லா விவரங்களையும் என்னிடத்தில் பெற்றுக்கொண்டிருந்தார்கள்.

ஆனால் நீதிமன்றுக்கு வழக்குகள் விசாரணைக்கு வந்த போது, வீடமைப்பு அதிகார சபை சார்பில் முன்னிலையான சட்டத்தரணி தனது மேலிடத்திலிருந்து எந்த அறிவுறுத்தலும் வரவில்லை என்று மன்றில் தெரிவித்திருந்தார். எனினும் அமைச்சருடன் பேசிய விடயங்களை நீதிமன்றில் நாம் முன்வைத்தோம்.

அதனையடுத்து அமைச்சருடன் பேசி இந்த வழக்குகள் தொடர்பில் சுமுகமான தீர்வை வழங்கலாம். அதற்கு கால அவகாசம் வேண்டும் என்று கேட்டுக்கொண்டதற்கு இணங்க நவம்பர் மாதம் 9ஆம் திகதிவரைக்கும் 34 வழக்குகளும் ஒத்திவைக்கப்பட்டன. அத்துடன், 62 வழக்குகளில் மீதமுள்ள 28 வழக்குகளும் வரும் 24ஆம் திகதி விசாரணைக்கு வருகின்றன. அந்த வழக்குகளையும் நவம்பர் 9ஆம் திகதிக்கு ஒத்திவைக்க நாம் முயற்சிகள் எடுப்போம்.

அத்துடன், வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாஸ வரும் 20ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு வருகை தருகின்றார். அவருடன் இந்த விடயம் தொடர்பில் நேரில் பேச்சு நடத்துவோம். அந்தக் காணியில் வீட்டுத் தொகுதி அமைக்கும் போது, அங்குள்ள மக்கள் மாற்று இடத்தில் இருக்க வேண்டும் என்றாலும் அதற்கான ஒழுங்குகளை நாம் செய்யலாம்” என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here