போகும் வழியில் வீட்டுப்பக்கம் எட்டிப்பார்த்த ஆர்ச்சர்; 2வது டெஸ்டிலிருந்து நீக்கம்!

இங்கிலாந்து-மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையே இன்று தொடங்கியுள்ள 2வது டெஸ்ட் போட்டியிலிருந்து அந்த அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளார் ஜோப்ரா ஆர்ச்சர் நீக்கப்பட்டுள்ளார்.

கொரோனா காலத்தில் நடக்கும் டெஸ்ட் தொடர் என்பதால் வீரர்களுக்கு கடும் கோவிட்-19 தடுப்பு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இதனைக் கடைப்பிடிக்க ஜோப்ரா ஆர்ச்சர் தவறியதால் அவர் டெஸ்ட்டிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

மேலும் அவர் 5 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும், 2 கொரோனா வைரஸ் டெஸ்ட்களை அவர் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இவரது சுய-தனிமை காலத்துக்குள் 2 பரிசோதனைகளிலும் நெகெட்டிவ் என்று வந்தால்தான் இவர் தொடர முடியும்.

“நான் செய்த காரியத்துக்காக மிகவும் வருந்துகிறேன். நான் என்னை மட்டுமல்ல அணி, நிர்வாகம் அனைவரையுமே அபாயத்தில் ஆழ்த்தி விட்டேன். நான் இதன் விளைவுகளை முழுதும் ஏற்கிறேன். அனைவரிடமும் மன்னிப்புக் கேட்கிறேன்.” என்றார் ஜோப்ரா ஆர்ச்சர்.

இரு அணிகளும் உயிர்-பாதுகாப்பு சூழல் ஏற்படுத்தப்பட்டு அதற்குள்தான் சாப்பாடு, உறக்கம், பயிற்சி எல்லாமே என்று இருந்து வருகின்றனர். இந்நிலையில் ஆர்ச்சர் மீறியதால் அவர் நீக்கப்பட்டுள்ளார்.

செளதாம்ப்டனிலிருந்து மான்செஸ்டருக்குச் செல்லும் வழியில் விதிமுறையை மீறி தனது வீட்டுக்குச் சென்றுள்ளார் ஆர்ச்சர். ஒவ்வொரு வீரரின் அடையாள அட்டையில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் எந்த ஒரு வீரராவது பாதுகாப்பு விதிமுறையை மீறினால் கண்டுபிடித்துவிட முடியும். செளதாம்ப்டனிலிருந்து மான்செஸ்டருக்கு ஒவ்வொரு வீரரும் தனியாகச் சென்றுள்ளார்கள். பேருந்தில் சென்றால் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க முடியாது என்பதால் அனைவரும் அவரவர் காரில் சென்றுள்ளார்கள். இதில், ஆர்ச்சர் மட்டும் செல்லும் வழியில் உள்ள தனது வீட்டுக்குச் சென்றதால் தற்போது அவருக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here