ஆட்டமிழக்க செய்த எதிரணி வீரருக்கு பரிசளித்த கோலி!

கொல்கத்தாவில் நடந்த ஐபிஎல் போட்டியில் தன்னை ஆட்டமிழக்கச் செய்த வீரருக்கு கிரிக்கெட் மட்டை ஒன்றைப் பரிசாக அளித்து பெங்களூர் ரோயல் சலஞ்சர்ஸ் அணியின் கப்டன் விராட் கோலி நெகழ்ச்சி அடையச் செய்துள்ளார்.

கடந்த 8-ம் திகதி கொல்கத்தாவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பெங்களூர் ரோயல் சலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நடந்தது. இந்தப் போட்டியில் கொல்கத்தா அணியின் ஓல்ரவுண்டர் நிதிஷ் ராணா வீசிய 15-வது ஓவரின் 2-வது பந்தில் டீவல்லியர்ஸ் 44 ரன்களில் ஜோன்சனிடம் கட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்த பந்தில் விராட் கோலி 31 ரன்கள் சேர்த்த நிலையில் ஆர்கேசிங்கிடம் கட்ச் கொடுத்து வெளியேறினார். இருவரும் அடுத்தடுத்த பந்தில் ஆட்டமிழந்தது ஆட்டத்தில் பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியது.

பெங்களூர்அணியின் மிகப்பெரிய தூண்களாக இருக்கும் இருவரையும் ராணா ஆட்டமிழக்கச் செய்தது கொல்கத்தாவுக்கு வெற்றியை எளிதாக்கியது. அதுமட்டுமல்லாமல் துடுப்பாட்டத்திலும் ராணா 34 ரன்கள் சேர்த்தார். இந்தப் போட்டியில் கொல்கத்தா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதைப் பாராட்டும் விதமாக நிதிஷ் ராணாவுக்கு கிரிக்கெட் மட்டை ஒன்றை பெங்களூர் அணியின் கப்டன் விராட் கோலி பரிசாக அளித்துள்ளார். விராட் கோலி அளித்த மட்டையுடன் இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை ராணா பகிர்ந்து தனது மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து நிதிஷ் ராணா இன்ஸ்டாகிராமில் கூறுகையில், ”பெங்களூர் ரோயல் சலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி, டீவில்லியர்ஸ் இருவரையும் அடுத்தடுத்த பந்தில் ஆட்டமிழக்கச் செய்தேன். இதைப் பாராட்டி விராட் கோலி அண்ணா எனக்கு புதிய மட்டை ஒன்றைப் பரிசாக அளித்துள்ளார்.

ஒருவிளையாட்டில் சிறப்பாக இருப்பவர்கள் மூலம் நாம் வாழ்த்தப்படும்போது, நாம் செய்வது சரியாக இருக்கிறது என்று அர்த்தம். எனக்கு மட்டை பரிசளித்த விராட் கோலி அண்ணாவுக்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here