அபிவிருத்தி, வேலைவாய்ப்பு என்ற பெயரில் எமது உரிமைகளைத் தாரைவார்க்கக்கூடாது

தற்போதைய எமது சமுதாயம் வழிமாறிய தவறான பாதையில் சென்று கொண்டிருக்கின்றது. அபிவிருத்தி, வேலைவாய்ப்பு என்பது தேவையான ஒன்று தான் ஆனால் அவற்றுக்காக எமது உரிமைகளைத் தாரைவார்க்கக்கூடாது என்பதை அவர்கள் உணரவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் மு.ஞானப்பிரகாசம் தெரிவித்தார்.

நேற்றைய தினம் இடம்பெற்ற புளொட் அமைப்பின் வீரமக்கள் தின நிகழ்வில் ஆற்றிய உரையின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமது எண்ணங்களை நோக்கங்களை சரியாக முன்நின்று நடத்துவது மிகவும் முக்கியமான விடயம். எமது போராட்டம் இன்னும் முடிவுபெறவில்லை. வருங்காலத்தில் இன்னும் மாறுபட்ட கோணங்களில் எமது இனத்தின் விடுதலை நசுக்கப்பட இருக்கின்றது. எனவே அவற்றில் இருந்து நாங்கள் வெளியேறுவதற்கும் எமது இனத்தின் பாதுகாப்பிற்கும் நாங்கள் இப்போதே தீர்மானம் எடுக்க வேண்டும்.

தற்போது இருக்கின்ற அரசாங்கம் எமது இனத்தின் அடையதாளத்தை எம்மவர்களை வைத்தே மாற்றும் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது. நாங்கள் இதனைக் கவனமாகக் கையாண்டு இந்த அரசு எமக்குத் தருகின்ற நெருக்கடிகளில் இருந்து விடுபட நாம் எல்லோரும் ஒற்றுமையாக செயற்பட வேண்டும்.

எமது போhட்டங்கள் மறக்கப்படக் கூடாது. எமது இன விடுதலைப் போராட்டத்தில் நாம் இழந்த இழப்புகளை பின்னுள்ள எமது சமுதாயம் அறிந்து கொள்ளும் வகையில் செயற்பட வேண்டும்.

தற்போதைய எமது சமுதாயம் வழிமாறிய தவறான பாதையில் சென்று கொண்டிருக்கின்றது. அந்த நிலைமையை மாற்றி அவர்களை எமது இனத்தின்பால், தேசியத்தின்பால் அக்கறை கொண்டவர்களாக மாற்ற வேண்டும். அபிவிருத்தி வேலைவாய்ப்பு என்பது தேவையான ஒன்று தான் ஆனால் அவற்றுக்காக எமது உரிமைகளைத் தாரைவார்க்கக்கூடாது என்பதை அவர்கள் உணரவேண்டும்.

எமது போராட்டம், அதற்கான இழப்புகள் அத்தனையும் மறைக்கப்படக் கூடியதான காலகட்டமிது. அதற்காகவே அரசினால் பல திட்டமிட்ட செயற்பாடுகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இதனை முறியடிப்பதற்கு நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து தொடர்ச்சியாகச் செயற்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here