தோண்டும் ஒவ்வொரு கிடங்கில் இருந்தும் புத்தர் உயிர்த்தெழப் போகிறார்!

கிழக்கில் தொல்பொருள் என்ற பெயரில் தோண்டப் போகும் ஒவ்வொரு கிடங்கில் இருந்தும் புத்தர் உயிர்த்தெழப் போகின்றார். இப்போதைக்கு தொல்லியல் செயலணியின் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளது என ஆளும் கட்சி சார்பான வேட்பாளர்கள் சொல்கின்றார்கள். ஆனால் அது முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாக எந்த தகவலும் இல்லை என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு வேட்பாளருமாகிய கி.துரைராசசிங்கம் தெரிவித்தார்.

வடக்கு கிழக்கு பரிரதேசம் எல்லாம் சிங்கள பௌத்தர்கள் வாழ்ந்த பிரதேசங்கள் என்ற தங்களின் கட்டுக்கதையை அவர்கள் தொல்லியல் சார்பின் மூலம் நிறுவ இருக்கின்றார்கள் எனவும் தெரிவித்தார்.

நேற்று மாலை புளியந்தீவு பகுதியில் இடம்பெற்ற ஆதரவாளர்களுடனான கலந்துரையாடலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமது இனம் எமது மொழி என்பன தொடர்பில் கவலை கொள்ளாமல் அபிவிருத்தி, உணவு, உடுபுடவை என்று மட்டும் இருந்ததன் காரணமாகவே எமது நாட்டில் தமிழர்கள் வாழந்த பல இடங்கள் இன்று சிங்களப் பிரதேசங்களாகப் போயுள்ளன. ஆனால் வடக்கு கிழக்கில் தமிழரசுக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வழிகாட்டலின் காரணமாகவே எமது நிலத்தில் எமது இனம், எமது மொழியோடு வாழ முடிகின்றது.

எமது மிகப்பெரிய போராட்டம் முள்ளிவாய்க்காலிலே மிகப் பெரிய அநியாயத்துடன் முடிவுற்றதன் பிறகு எம்மை நோக்கி இருந்த பாரிய அபாயம் எமது மக்கள் எடுத்த தீர்மானத்தின் பிரகாரம் சற்றே தணிந்தது. எமது யுத்தம் மௌனிக்கப்பட்ட பின்னர் எமது மக்கள் சரியான தீர்மானத்தை எடுத்திருக்காவிட்டால் பத்து ஆண்டுகளுக்குள்ளே நாம் இருந்த இடமெல்லாம் இல்லாமல் எமது அடையாளத்தைத் தொலைத்த இனமாக ஆகியிருப்போம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் எமது உரிமை தொடர்பிலான அரசியலமைப்பினை மையப்படுத்தியதான கோரிக்கையை பாராளுமன்றத்தில் ஒலிக்கச் செய்தார்கள். இதன் காரணமாக ஒரே நாடு. ஒரே மக்கள், ஒரே மொழி என்கின்ற அவர்களின் வேகம் தடைப்பட்டுப் போனது. தொடர்ச்சியாகாத் தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குக் கொடுக்கும் ஆதரவின் காரணமாக சிங்களப் பெருந்தேசியவாதம் இந்த நாட்டை அவர்கள் விரும்பிய படி சிங்கள பௌத்த ஏகாதிபத்தியத்துக்குள் கொண்டு வர முடியாத அவலம் அவர்களுக்கு இருக்கின்றது.

தற்போது நாட்டின் புதிய தலைவர் உள்ளார். அவரின் பதிவியேற்பு எங்கு நடைபெற்றது. அன்று தமிழ் மக்கள் தோற்கடிக்கப்பட்டதாக அவர்கள் வரலாறு சொல்லுகின்ற ருவன்வெலிசாயவில் பதவியேற்பு நடத்தினார். அங்கு தான் சிங்கள பௌத்த மக்களால் தெரிவு செய்யப்பட்டதாகவும், அவர்களின் அபிலாசைகளை நிறைவேற்றுவதே அவரின் முதற்கடமை எனவும் தெரிவித்தமை அனைவரும் அறிந்ததே.

தற்போது தொல்லியல் ஆய்வுக்காக ஒரு அணியை உருவாக்கியுள்ளார். தொல்லியல் ஆய்வு என்றால் என்ன மண்ணைத் தோண்டி சரித்தரத்தைக் கண்டறிவது. ஆனால் இங்கு என்ன நடைபெறும் தோண்டப் போகும் ஒவ்வொரு கிடங்கில் இருந்தும் புத்தர் உயிர்த்தெழப் போகின்றார். இது தொடர்பில் ஆளும் கட்சி சார்பான வேட்பாளர்கள் என்ன சொல்கின்றார்கள். இப்போதைக்கு தொல்லியல் செயலணியின் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளது என்று. ஆனால் அது முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாக என்பதற்கு அவர்களிடம் பதில் இல்லை. தேர்தல் முடிந்ததும் அதன் நடவடிக்கைகள் மீண்டும் தொடரலாம். இவற்றை இவர்களால் தடுக்க முடியுமா? தடுக்க முற்பட்டால் இவர்களால் அவர்களுடன் இருக்க முடியுமா? இவற்றைத் தட்டிக் கேட்டும் திராணி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் மாத்திரமே இருக்கின்றது.

இவ்வாறு தோண்டப்படும் கிடங்கில் புத்தர் உயிர்த்தெழும் போது அங்கெல்லாம் பௌத்த ஆலயங்கள் உருவாகப் போகின்றன. அவர்களுடைய பௌத்த சாசனத்தில் சொல்லப்பட்டிருக்கின்றது. பௌத்த ஆலயம் ஒன்ற இருக்கும் பிரதேசத்தில் அந்த ஆலயத்தின் மணிஒலி எவ்வளவு தூரத்திற்குக் கேட்கிறதோ அவ்வளவு தூரத்திற்கு பௌத்தர்கள் குடியேற்றப்படல் வேண்டும் என்று. அந்த வகையில் இங்கு அரச மரம் இருக்கின்ற இடமெல்லாம் பௌத்த மத சின்னங்கள் வரப்போகின்றது.

அமைக்கப்பட்ட இந்தச் செயலணியிலே ஒருவரும் தமிழரும் இல்லை, சிறுபான்மையினரும் இல்லை. முழுவதும் சிங்கள பௌத்தர்கள், பொளத்த துறவிகள், இராணுவ அதிகாரிகள் தான் அங்கு இருக்கின்றது. இன்னும் ஆராய்ச்சிகளே செய்யவில்லை ஆனால் பல முடிவுகள் இப்போதே வந்துவிட்டன. வடக்கு கிழக்கிலே ஒரு அங்குலம் கூட தமிழர்களுக்குச் சொந்தமானதில்லை, கோணேசர் கோவில் மற்றும் நல்லூர் கோவில்கள் பௌத்த விகாரைகள் என்ற கருத்துக்கள் வந்துவிட்டன. எனவே இப்போதே திட்டங்கள் தீட்டிவிட்டார்கள். வடக்கு கிழக்கு பரிரதேசம் எல்லாம் சிங்கள பௌத்தர்கள் வாழ்ந்த பிரதேசங்கள் என்ற தங்களின் கட்டுக்கதையை அவர்கள் தொல்லியல் சார்பின் மூலம் நிறுவ இருக்கின்றார்கள்.

இந்த ஆபத்திற்குள்ளே தான் மொட்டு, படகு மற்றும் நாங்கள் மிகவும் பிரயத்தனப்பட்டு காப்பாற்றிய சூரியன் தற்போது மஹிந்தவின் சாராருக்கு வாடகைக்கு விடப்பட்டு அவர்கள் எம்மத்தியில் எம்மவர் என்ற போர்வையில் தேர்தல் கேட்டு வருகின்றார்கள். இவர்கள் எல்லாம் யாரின் தலைமையில் கீழ் இயங்குபவர்கள்.

இவர்கள் என்ன சொல்கின்றார்கள். அமைச்சர்களாகப் போகின்றோம். கிழக்கை மீட்கப் போகின்றோம் என்கிறார்கள். அமைச்சராகினால் இவர்கள் யாரின் சொல்லைக் கேட்க வேண்டும். சிங்களக் குடியேற்றங்களை அரச செய்யும் போது இவர்களால் மறுக்க முடியுமா? மறுத்தால் அனைத்தையும் பறித்து திறத்தி விடுவார்கள். இவ்வாறிருக்க இவர்கள் அபிவிருத்தி என்கின்ற மாயையை ஏற்படுத்துகின்றாhகள். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாம் எந்தவித அபிவிருத்தியாலும் எமது உரிமையை தடுத்துவிட முடியாது என்ற வரலாற்றோடு வந்திருக்கின்றோம்.

நாங்கள் எமது அரசியல் சார்ந்த உரிமையைப் பெறுவதற்கு முயற்சியெடுக்கின்ற அதேவேளை அபிவிருத்தி என்ற விடயத்தையும் நாங்கள் தள்ளிவிடவில்லை. அபிவிருத்தி என்பதும் எங்களது உரிமையே. எமது பெருளாதார உரிமை தொடர்பில் நாங்கள் பாராளுமன்றத்திலே பேசி எங்கள் உரிமையைக் கொண்டு வருவோம். அது எமது அரசியல் உரிமையை விற்றமைக்கான சலுகையாக அல்ல. எம்மிடமெல்லாம் இருந்து எடுக்கின்ற வரிப்பணத்தில் இருந்தே அரசாங்கம் ஆட்சியை நடத்துகின்றது. எனவே அதில் எமது பிரதேசத்திற்கான பங்குதரப்பட வேண்டும்.

கடந்த அரசிலே நாங்கள் அதனை மிகக் கவனமாகச் செய்தோம். அதன் காரணமாகத்தான் கம்பெரலிய திட்டத்தின் மூலம் கோடிக்கணக்கில் அபிவிருத்தி செயற்பாடுகளை வடக்கு கிழக்கில் மேற்கொண்டோம்.

கடந்த அரசின் வரவு செலவுத் திட்டத்தில் வடக்கு கிழக்குக்கு வங்கப்பட்ட நிதி எந்த அரசிலும் வழங்கப்படவில்லை. இதற்கு மொட்டுக் கட்சியினரும். அவர்களோடு சார்ந்தவர்களும் பாரிய விமர்சனத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நோக்கி முன்வைத்தனர். அவ்வாறு எங்களுடைய பொருளாதார உரிமையைப் பெற்றெடுப்பதற்கும் நாங்கள் தொடர்ச்சியாகப் பாடுபடுவோம். வருகின்ற அரசாட்சி நல்லாட்சியாக வரப்போவதில்லை. அதற்கு நின்றுபிடிக்கக் கூடிய விதத்திலே எங்களது செயற்பாடுகளை முன்னெடுப்போம் என்று தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here