கொரோன பரிசோதனையில் மூக்கிற்குள் குழாய் உடைந்து சிறுவன் பலி!

சவூதி அரேபியாவில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமியொருவருக்கு, கொரோனா தொற்று பரிசோதனை செய்தபோது, பரிசோதனை மாதிரி எடுக்கும் குழாய் உடைந்து சிறுவன் உயிரிழந்துள்ளார்.

அந்தக் குழாயை வெளியில் எடுக்கும் முயற்சியாக, குழந்தைக்கு பொது மயக்க மருந்து கொடுக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு, குழந்தை நல மருத்துவர் குழந்தையை பரிசோதனை செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டது. ஆனால், அந்த மருத்துவர் விடுப்பில் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கு மறுநாள் குழந்தையின் சுவாசக் குழாயில் அடைப்பு ஏற்பட்டது. சுயநினைவை இழக்கத் தொடங்கியது குழந்தை.

மேலும், குழந்தையின் உடல்நிலை மோசமடைந்ததையடுத்து, ரியாத்தில் இருக்கும் சிறப்பு மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்துச் செல்ல அனுமதி கிடைத்தது.

ஆனால், அவசர சிகிச்சை வாகனம் வரத் தாமதமானது. கடைசியில், குழந்தை இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்ட பிறகே அவசர சிகிச்சை வாகனம் வந்து சேர்ந்ததாகக் கூறப்பட்டது.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு 24 மணி நேரத்துக்குள் அந்த ஆண் குழந்தை உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

சவூதி அரேபியாவில் உள்ள ஷாக்ரா மருத்துவமனையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்பட்டது.

மருத்துவர் பொது மயக்க மருந்து கொடுக்க முற்பட்டபோது, குழந்தையின் தந்தை அதற்கு மறுப்புத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

ஆனால், அந்தக் குழாயை தொண்டை வழியாக அகற்ற அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்ததால், பொது மயக்க மருந்து கொடுக்க வேண்டுமென மருத்துவர்கள் வலியுறுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது.

சுவாசக் குழாயில் ஏற்பட்ட அடைப்பு காரணமாகக் குழந்தை சுயநினைவை இழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது தம்மை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியதாக குழந்தையின் தந்தை அப்துல்லா அல் ஜவுபான் தெரிவித்தார்.

குழந்தையின் மரணம், நிலைமையைத் தவறாக கையாண்டது ஆகியவற்றின் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள குழந்தையின் தந்தை இரண்டு வழக்குகளைப் பதிவு செய்துள்ளதாகவும் விசாரணைக்கு சுகாதாரத்துறை அமைச்சர் குழு ஒன்றை அமைத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here