கூட்டமைப்பிற்கு கொரோனா; வீட்டோடு தனிமைப்படுத்துங்கள்: ஜீ.குணசீலன்!

தமிழ் தேசிய கூட்டமைப்பை மக்கள் இம்முறை தனிமைபடுத்த வேண்டும். அவர்கள் முற்றாக குணமடைந்து சீரடைந்து திருந்தி வரும் வரைக்கும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.எங்களுடைய மக்கள் அதற்குறிய முடிவை இம்முறை கட்டாயம் எடுக்க வேண்டும் என்பது தான் எனது கோரிக்கை என முன்னாள் வடமாகாண அமைச்சரும்,தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் வன்னி மாவட்ட வேட்பாளருமான ஜீ.குணசீலன் தெரிவித்தார்.

மன்னாரில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று புதன் கிழமை மதியம் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மக்கள் கட்டாயம் புரிந்து கொள்ள வேண்டும். தற்போதைய சூழ் நிலையில் நம் சமூகத்துக்கு ஒவ்வாத விடயம் வரும் போது அவற்றை ஒதுக்கி வைக்கின்றோம். அதில் இருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று சிந்திக்கின்றோம். உண்மையிலேயே இப்போதும் அதே நிலமை தான். உதாரணமாக ‘கொரொனா’ வந்து விட்டது. எவ்வளவு முற்பாதுகாப்பு நடவடிக்கையை நாம் மேற்கொள்கின்றோம்.

இப்போது புதிதாக ஒரு ‘கொரோனா’ வந்துள்ளது. வீட்டுக்குள் கொரோனா வந்துள்ளது. வீட்டை சேர்ந்தவர்களுக்கு கொரோனா வந்துள்ளது. ஆகவே நாம் இந்த முறை அவர்களை தனிமைபடுத்த வேண்டிய அவசியம் எங்களுக்கு இருக்கின்றது. இம்முறை கூட்டமைப்பு வீட்டுடன் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பை மக்கள் இம்முறை தனிமைபடுத்த வேண்டும். அவர்கள் முற்றாக குணமடைந்து சீரடைந்து திருந்தி வரும் வரைக்கும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.

எங்களுடைய மக்கள் அதற்குறிய முடிவை இம்முறை கட்டாயம் எடுக்க வேண்டும் என்பதுதான் எனது கோரிக்கை. இந்த தேர்தலில் நாங்கள் வெற்றியடைய வேண்டும் என்பதை விட மக்களுக்கு இரண்டு முறையில் சேவை ஆற்றலாம்.

ஒன்று தேர்தலில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராகவோ, மாகாண சபை உறுப்பினர்களாகவோ அல்லது பதவிகளுக்கு வந்து மக்களுக்கு சேவை ஆற்ற முடியும்.

இன்னொருவகை இருக்கின்றது. எங்களுடைய மக்களை தீமைகளில் இருந்து சதித்திட்டங்களில் இருந்து அல்லது பிழையான வழி நடத்தல்களில் இருந்து அல்லது உள்நோக்கம் சுயநலம் கொண்ட மனிதர்களிடம் இருந்து பாதுகாப்பை வழங்குவதன் மூலம் சேவை ஆற்றலாம்.

ஆகவே நாங்கள் வெற்றி பெறுகின்றோமோ இல்லையோ என்பதற்கு அப்பால் பொருத்தமற்றவர்கள் வினைத்திறன் அற்றவர்கள் துரோகிகள் சுயநலவாதிகளை தோற்கடிக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இருக்கின்றது.

ஆகவே வெற்றி என்பது மட்டும் எங்களது குறிக்கோள் அல்ல. வெற்றி அடைந்தால் சேவை செய்யலாம் என்பது மட்டும் குறிக்கோள் அல்ல. நாங்கள் வெற்றி அடைகின்றோமோ இல்லையோ அதற்கு அப்பால் மக்களுக்கு தீமை செய்கின்ற பொருத்தமில்லாத அரசியல் வாதிகளை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதும் எங்கள் கொள்கையாக இருக்கின்றது.

அதே நேரத்தில் தற்போது வேட்பாளர்கள் தங்கள் விளம்பரங்களுக்காக பல இலட்சம் ரூபாய்களை செலவு செய்கின்றனர். புல தடவைகள் பல வருடங்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்டு பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்கின்ற நீங்கள் ஆற்றிய சேவை உங்களுடைய தியாகம் அர்பணிப்பு என்பன சிறப்பாக இருந்திருந்தால் ஏன் உங்களுக்கு ஒவ்வொரு தேர்தலிலும் கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை செலவு செய்ய வேண்டி ஏற்படுகின்றது?.

மேலும் எல்லா முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களும் மாகாண சபை உறுப்பினர்களும் பகிரங்கமாக வெளிப்படையாக உங்கள் சொத்து விபரங்கள் சம்மந்தமாக விவாதிக்க தயாராக இருக்கின்றீர்களா?

உங்கள் சொத்து விபரங்கள் என்ன? அந்த சொத்துக்கள் எவ்வாறு கிடைக்கப்பெற்றது. எந்த எந்த தொழில் வாய்பு மூலம் அதை பெற்று கொண்டீர்கள்? எத்தனை வர்த்தகங்கள் புரிகின்றீர்கள்? என்பது தொடர்பாகவும் உங்களிடம் எவ்வளவு சொத்து இருக்கின்றது என்பது தொடர்பாக விவாதிக்க எவர் தயாராக இருக்கின்றீர்கள் என்ற பகிரங்க சவாலையும் விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here