அமெரிக்க ஷொப்பிங் இணையத்தளம் குழந்தைகள் கடத்தலில் ஈடுபட்டதா?

அமெரிக்காவில் ஷொப்பிங் இணையதளம் மூலம் குழந்தைகள் கடத்தப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுகிறார்கள் என்ற தகவல் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் சர்வதேசத் தொழிலாளர்கள் அமைப்பு (International Labour Organisation) வெளியிட்ட அறிக்கையில், ஒரு வருடத்தில் 2 கோடிக்கும் அதிகமானோர் அடிமைகளாக விற்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் 25 சதவீதம் பேர், பதினெட்டு வயதுக்குக் குறைவான சிறார்கள். அமெரிக்காவில்தான் அதிகமான குழந்தைகள் அடிமைகளாக விற்கப்படுகிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

பாலியல் வக்கிரம் கொண்ட மனித மிருகங்கள் தங்கள் இச்சைகளைத் தீர்த்துக்கொள்ள அமெரிக்காவை நோக்கி ஆண்டுதோறும் ‘செக்ஸ் டூரிஸம்’ என்ற பெயரில் படையெடுப்பதாக அமெரிக்காவின் ‘நஷனல் அண்டர்கிரௌண்ட் ரெயில்ரோட் ஃப்ரீடம் சென்டர்’ என்ற அமைப்பு கூறுகிறது. குழந்தைகளை வைத்து எடுக்கப்படும் ஆபாசப் படங்களுக்கும் அமெரிக்கா புகலிடமாக இருந்து வருகிறது.

சிறார்களுக்கு எதிரான விஷயங்களைக் கண்கொத்தி பாம்பாகக் கவனித்து வருவதாக அமெரிக்காவின் உளவுத் துறையான எஃப்.பி.ஐ-யின் இணையத்தில் கூறப்பட்டிருக்கிறது. எனினும், அன்றாடம் மக்கள் பயன்படுத்தும் ஷொப்பிங் இணையதளம் மூலமாகவே குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறார்கள் என்ற குற்றச்சாட்டு சில தினங்களுக்கு முன்பு ரெடிட் என்ற இணையதளத்தில் PrincessPeach1987 என்ற கணக்கிலிருந்து எழுப்பப்பட்டது.

’வேஃபேர்’ (Wayfair) என்ற வீட்டு உபயோக மற்றும் அலங்காரப் பொருட்கள் விற்கும் இணையதளத்தின் மூலமாகக் குழந்தைகள் ரகசியமாக விற்கப்படுகின்றனர் என்று சில ஆதாரங்களும் வெளியிடப்பட்டன. அந்த இணையதளத்தில் இருக்கும் ஃபர்னிச்சர் பொருட்கள் நம்ப முடியாத அளவிற்கு அதிக விலையுடன் இருப்பதையும், அப்படி இருக்கும் பொருட்களின் பெயர்களுடன் மனிதர்களின் பெயர் இருப்பதையும் பார்க்க முடிகிறது.

மேலும், அந்தப் பெயர்கள் சில மாதங்களுக்கு முன்பு காணாமல் போன குழந்தைகளின் பெயரோடு பொருந்திப்போவது வேஃபேர் நிறுவனத்தின் மீது மேலும் சந்தேகத்தை அதிகரிக்கச் செய்கிறது. மேலும், குறிப்பிட்ட பொருட்களைக் குறிக்கும் SKS (Stock Knowing Unit) என்ற பிரத்யேக எண்ணை ரஷ்யாவைச் சேர்ந்த இணைய உலாவியான ‘யாண்டெக்ஸ்’ என்ற இணையதளத்தில் பதிவிட்டால் குழந்தைகளின் ஆபாசமான படங்கள் வருவதாகவும் அந்தக் குற்றச்சாட்டில் கூறப்பட்டிருந்தது.

“இந்த நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டதின் நோக்கமே குழந்தைகளை விற்பதற்காகத்தான்” என்று பலரும் சுட்டிக்காட்டுகின்றனர். வேஃபேர் என்ற பெயரிலேயே இந்த விஷயம் ஒளிந்துள்ளதாக அவர்கள் கூறுகிறார்கள். Waif என்ற ஆங்கில வார்த்தை கைவிடப்பட்ட குழந்தையைக் குறிக்கும். Fare என்ற வார்த்தை கட்டணம் அல்லது விலை என்பதைக் குறிக்கும் என்பது அவர்களின் கருத்து. இந்த நிறுவனம், நிரஜ் ஷா என்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கர் தன் நண்பர் ஸ்டீவ் கோனைனுடன் இணைந்து 2002 இல் தொடங்கிய நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விஷயம் தற்போது ட்விட்டர், இன்ஸ்டாகிராம் தளங்களில் வைரலான பிறகு வேஃபேர் நிறுவனம் இந்த விஷயத்திற்கு எதிர்வினையாற்றியுள்ளது. “அதிக விலை வைக்கப்பட்டிருக்கும் பொருட்களின் தரத்தைப் பொறுத்தே அந்த விலை துல்லியமாக விதிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் ஏன் இவ்வளவு அதிக விலை என்பதற்கான காரணத்தை விற்பனை முகவர்களிடமிருந்து பெற முடியாததால், தற்காலிகமாக அந்தப் பொருட்களை எங்கள் இணையதளத்திலிருந்து அகற்றியுள்ளோம்” என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்தப் பொருட்களை நீக்கியுள்ளது மேலும் சந்தேகத்தை எழுப்பியுள்ளதாகப் பல குழந்தைகள் நல அமைப்புகள் கூறியிருக்கின்றன.

ஜெஃப்ரி எப்ஸ்டின் எனும் அமெரிக்கர், சிறார்களைப் பாலியல் ரீதியாக ஈடுபடுத்திய குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டு, பின்பு சிறையில் மர்மமான முறையில் இறந்தார். நீதிமன்ற விசாரணையில் அவர் வாய் திறந்திருந்தால் குழந்தைகளை வேட்டையாடும் கும்பல் பற்றிய தகவல் முன்பே வெளிவந்திருக்கும், இப்போது இந்த வேஃபேர் சர்ச்சையை சாதாரணமாகக் கடந்து செல்லாமல் அமெரிக்க அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் குரல்கள் ஒலித்து வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here