தமிழ் தேசிய கூட்டமைப்பை சிதைக்கும் சிங்கள ஏஜெண்ட் சுமந்திரன்: சிவாஜி ‘பகீர்’ குற்றச்சாட்டு!

ரணில் விக்கரமசிங்கவின், சிங்கள பௌத்த நிகழ்ச்சி நிரலை செயற்படுத்தவே சுமந்திரன் இருக்கிறார். தமிழ் தேசிய கூட்டமைப்பையும் தமிழ் அரசு கட்சியையும் ஐக்கிய தேசிய கட்சியின் பிரிவாக மாற்றுவதுதான் அவரது நடவடிக்கை. வடமாகாணசபையில் இனப்படுகொலை தீர்மானத்திற்கு எதிராக சுமந்திரன் எழுதிய கடிதம் இப்பொழுதும் என்னிடமுள்ளது என தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கட்சியின் வேட்பாளர் எம்.ஏ.சிவாஜிலிங்கம்.

பருத்தித்துறையில் நேற்று (14) நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாலரை ஆண்டுகளில் அரசாங்கத்திற்கு ஆதரவை கொடுத்து என்ன செய்தீர்கள்? நூறு அரசியல் கைதிகளையாவது விடுவித்தீர்களா? காணிகளை விடுவித்தீர்களா? என்னத்தை செய்தீர்கள்.

ஒரு தொலைக்காட்சியில் சுமந்திரனின் விளம்பரத்தை பார்த்தேன். சர்வதேச குற்றங்களிற்காக வாதாடினாராம். சர்வதேச குற்றங்களில் இனப்படகொலையும் ஒன்று என்பது சுமந்திரனுக்கு தெரியாதா? என் நீங்கள் இனப்படுகொலைக்காக வாதாடவில்லை? போராடவில்லை? போராட முற்பட்ட எங்களையும் நசுக்கினீர்கள்.

இனப்படுகொலை தீர்மானத்தை நான் வடமாகாணசபையில் கொண்டு வர முயன்றபோது, சம்பந்தன் தொலைபேசியில், “தம்பி சிவாஜி கொஞ்சம் பொறுப்போம்“ என்றார். ஒரு கூட்டணியில் இருக்கும்போது மறுக்க முடியாது.

பிறகு அடுத்தமுறை மாவை தொலைபேசியில், “தம்பி சிவாஜி கொஞ்சம் பொறுப்போமா?“ என்பார். பிறகு சிவஞானம் ஐயாவிடம் கேட்டால், இனப்படுகொலையை நாங்கள் சுமத்த முடியாது, நிரூபிக்க முடியாது என்ற சுமந்திரனின் கடிதத்தை தந்தார். அது இப்பொழுதும் என்னிடமுள்ளது.

ஆனால் நான் அதை தொடர்ந்து முயற்சி செய்து, சிவஞானம் ஐயாவின் தடைகளை மீறி செங்கோல் தட்டிவிழுத்தப்பட்ட பின்னர், விக்னேஸ்வரன் ஐயா அழைத்து என்ன விவகாரம் என விசாரித்தார். சொன்னபோது, தான் அதை ஒரு மாதத்தில் கொண்டு வருவதாக கூறி, 2015 பெப்ரவரி 10ஆம் திகதி இனப்படுகொலை தீர்மானம் வடமாகாணசபையில் நிறைவேற்றப்பட்டது.

2017 ஆம் ஆண்டு மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு 2 வருட காலஅவகாசம் வழங்குவது பற்றி வடக்கு, கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களை அழைத்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் கூட்டம் நடந்தது. லப்ரொப்பில் சில விடயங்களை காண்பித்து, ஐநாவில் இலங்கைக்கு ஏன் காலஅவகாசம் வழங்க வேண்டுமென சுமந்திரன் ஒரு மணித்தியாலம் உரையாற்றினார். நான் கையில் எந்த தாளுமில்லாமல் சுமார் 20 நிமிடம் அவகாசம் வழங்கக்கூடாது என்று உரையாற்றினேன். ஐநாவில் இனப்படுகொலை தீர்மானத்தை கொண்டு வருவதில் வெற்றியடைந்தது மட்டுமல்ல, கூட்டத்திலிருந்த சுமந்திரனை பார்த்து கேட்டேன்- இலங்கைத்தமிழர்கள் இனப்படுகொலை குற்றச்சாட்டை சுமத்துவதற்கான தகுதியை அடைந்து விட்டார்கள் என்று கூறினாரென்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா என கேட்டபோது, ஆம் என பதிலளித்தார்.

அப்போதுதான் பல எம்.பிக்கள், கிழக்கு மாகாண அமைச்சர்கள் வந்து சொன்னார்கள், எங்களிற்கு இவ்வளவு நாளும்  தெரியாமல் போய்விட்டது.

ரணில் விக்கரமசிங்கவின், சிங்கள பௌத்த நிகழ்ச்சி நிரலை செயற்படுத்தவே சுமந்திரன் இருக்கிறார். தமிழ் தேசிய கூட்டமைப்பையும் தமிழ் அரசு கட்சியையும் ஐக்கிய தேசிய கட்சியின் பிரிவாக மாற்றுவதுதான் அவரது நடவடிக்கை.

2009 பெப்ரவரி மாதம் அமெரிக்காவும், கனடாவும் மேற்கொண்ட சர்வதேச சமரச முயற்சியை நீங்கள் முறியடித்ததை பற்றி உங்களால் வாய்திறக்க முடியுமா சம்பந்தன் ஐயா?

72 மணிதிதியாலத்தில் அமெரிக்காவும் கனடாவும் இணைந்து அந்த போர்நிறுத்தத்தை அமுல்ப்படுத்துவதாக சொன்னார்கள். அது நடந்திருந்தால் இவ்வளவு மக்கள் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள்.

அவர்கள் வைத்த நிபந்தனை, இந்த திட்டத்திற்கு சம்மதமென புலிகள் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு சொல்ல வேண்டும். தமிழ் தேசிய கூட்டமைப்ப கனடாவிற்கு சொல்ல வேண்டும்.

இங்கிலாந்து பாராளுமன்றம் முன்பாக போராட்டத்தில் இருந்த வந்தபோது, கனடாவிலுள்ள சட்டத்தரணி கரிகாலன் தொலைபேசியில் சொன்னார்.நான் உடனே வன்னியில் நடேசனிற்கு தெரிவித்தேன். பின்னர் தொடர்பு கொண்ட நடேசன், தலைவருடன் பேசிவிட்டேன், நாங்கள் தயார், சம்பந்தனிடம் சொல்லுங்கள் என்றார். நாங்கள் சொன்னால் அவர் தட்டிக்கழிப்பார், நீங்களே இதை சொல்லுங்கள் என, சம்பந்தனின் இந்தியா வீட்டு தொலைபேசி இலக்கத்தை வழங்கினார்.

இதற்காக கனடா நியமித்த பிரதிநிதியுடன் அவர் ஓடிப்பிடித்து விளையாடினார். இலங்கை வா, இந்தியா வா என்றார். இங்கிலாந்திற்கு வாருங்கள், உங்களிற்கு எதாவது பிரச்சனையென்றால் கனடாவிற்கு விசா தருகிறொம் என்றார்கள். ஐயா அசையவில்லை. ஐயா இருந்தார்… அவ்வளவு பேர் உயிரிழந்தார்கள்.

கடந்தவருடம் இலங்கை தமிழ் அரசு கட்சியின் 70வது ஆண்டு விழாவில் சம்பந்தன் உரையாற்றியபோது, இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டது நல்ல விடயமாக இருக்கலாம் என்றார். ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்ததை போராளிகள் உயிரிழந்ததை, பெண்கள் மானபங்கப்படுத்தியதை நல்லதென்கிறீர்களா? பதில் என்ன?

விடுதலைப்புலிகளின் சித்தாந்தத்தை ஏற்றுக்கொள்ளவில்லையென சிங்கள தொலைக்காட்சியொன்றிற்கு சுமந்திரன் சொல்லியிருந்தார். அதே தொலைக்காட்சியில் நானும் பேட்டியளித்துள்ளேன். தலைவர் பிரபாகரன் ஒரு வன்முறையாளரா பயங்கரவாதியா என சிங்களத்தில் கேட்டபோது, நான் சொன்னேன்- அவர் பயங்கரவாதியல்ல, தமிழ் மக்களின் விடுதலை போராட்டத்தின் தலைவர், வீரன் என சொன்னேன்.

அடுத்த கேள்வி சுமந்திரனை பற்றி கேட்டார். சுமந்திரன் ஒரு துரோகி என பதிலளித்துள்ளேன்.

இன்று சிறிதரனும், சுமந்திரனும் இரட்டைக்குழல் துப்பாக்கி மாதிரி சேர்க்கிறார்கள். இதே சிறிதரன் 2015ஆம் ஆண்டு வடக்கு கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள், எம்.பிக்களுடனான கூட்டத்தில், சரணடைந்த 12000 போராளிகளும் சயனைட் கடித்து உயிரிழந்திருக்க வேண்டும் என்றார்.

போராளிகள் சயனைட் கடித்து இறந்திருக்க வேண்டுமென கூறிவிட்டு இப்பொழுது ஜனநாயக போராளிகள்ஈ அந்தப் போராளிகள் என்று வெட்கம் கெட்டு திரிகிறார்கள். தாயை பழித்தவனை, தமிழை பழித்தவனை தாய் தடுத்தாலும் விடோம் என்று சொன்னவர்கள், உங்களது தாயை, உங்கள் மனைவிமாரை, பிள்ளைகளை கொச்சைப்படுத்தி கேவலப்படுத்தியவர்களை துதிபாடுகிறீர்களே, வெட்கமாக இல்லையா?

மாவையுடன் 45 வருடங்கள் அரசியல் செய்தேன். நல்ல மனிதர். முதுகெலும்பு இல்லாதவர். கட்சிக்கு சுமந்திரன்தான் தலைவர். கூட்டமைப்பின் தலைவராக சம்பந்தன் இருக்கிறார். ஆனால் கருணாநிதி போல இருக்கிறார். ஆனால் தன்னைத்தானே செயல்தலைவராக சுந்திரன் நிமித்து செயற்படுகிறார்.

பிரதமர் பண்டாரநாயக்கவை பார்த்து அப்போதைய நல்லூர் எம்.பி நாகராஜன் முதுகை தடவிப்பார்த்து, உனக்கு முதுகெலும்பு உள்ளதா என்றார். அப்படியான தமிழ் தலைவர்கள் வாழ்ந்த காலம் எங்கே, நீங்கள் மண்டியிடுகிறீர்களே.

3 தடவைகள் ரணில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வாக்குகளால் பரதமர் பதவியில் காப்பாற்றப்பட்டார். 2 முறை நம்பிக்கையில்லா தீர்மானம். ஒரு முறை நம்பிக்கைத் தீர்மானம்.

கடந்த ஒக்ரோபர் குழப்பத்தின் போது, டிசம்பர் மாதம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கூட்டம் இடம்பெற்றது. எமது கோரிக்கைகளை பத்திரிகைகளில் தெரிவித்து விட்டு அங்கு சென்று பேசினோம். சம்பந்தனின் வீட்டில் வெளிநாட்டு தூதர்களை அழைத்து பேசி, அவர்களின் மத்தியஸ்தத்தில் பேசலாமென்ற நிபந்தனையை விதிக்க கோரினொம். ஓமென்றார்கள். ஆனால் அந்த கடிதம் இப்பொழுது ஐயா வீட்டு கக்கூசிற்குள் இருக்கிறதோ, குசினிக்குள் இருக்கிறதோ, ரணில் வீட்டு குசினிக்குள் இருக்கிறதோ தெரியவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here