மட்டக்களப்பு மனித வெடிகுண்டு தப்பிச்சென்றாரா?: பகீர் தகவல்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மேற்கொண்ட சஹ்ரான் குழுவில் அங்கம் வகித்த மட்டக்களப்பை சேர்ந்த தமிழ் பெண்ணான சாரா என அழைக்கப்பட்ட மகேந்திரன் புலஸ்தினி, தப்பிச் சென்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சாய்ந்தமருதில் கொல்லப்பட்டவர்களின் டிஎன்ஏ மாதிரிகள் எதுவும் புலஸ்தினியின் டிஎன்ஏ உடன் பொருந்தாத நிலையில், மேலதிக சில தகவல்களின் அடிப்படையில் சிஐடியினர் இந்த கோணத்தில் விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.

மட்டக்களப்பை சேர்ந்த புலஸ்தினி மதம் மாறி சாரா என பெயரை மாற்றிக் கொண்டார். அவரது கணவன் உயிர்த்த ஞாயிறு தினத்தில் கட்டுவப்பிட்டிய தேவாலயத்தில் மனித வெடிகுண்டாக வெடித்து சிதறியிருந்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சாட்சியங்களை மறைத்த குற்றச்சாட்டில் அக்கரைப்பற்று பகுதியை சேர்ந்த அபூபக்கர் என்ற பொலிஸ் பொறுப்பதிகாரி அண்மையில் கைதானார். புலஸ்தினியின் மாமாவும் அண்மையில் கைதாகியிருந்தார்.

உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில், கொழும்பு குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவு இது தொடர்பில் விசேட விசாரணையை ஆரம்பித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தினத்தில் மனத வெடிகுண்டு தாக்குதல் நடத்தியவர்களின் பெற்றோர், சகோதரர்கள், மனைவியர் உள்ளிட்டவர்கள் சாய்ந்தமருதில் பதுங்கியிருந்தபோது 2019 ஏப்ரல் 26ஆம் திகதி குண்டை வெடிக்க வைத்து உயிரை மாய்த்தனர்.

நீர்கொழும்பு கட்டுவப்பிட்டிய தேவாலயத்தில் முஹமட் ஹஸ்துன் மனித வெடிகுண்டாக வெடித்திருநதார். அவரது மனைவியான சாரா (புலஸ்தினி) சஹ்ரான் குழுவின் எஞ்சிய குடும்ப உறுப்பினர்களுடன் சாய்ந்தமருதில் தங்கியிருந்ததாகவும், அங்கு குண்டை வெடிக்க வைத்து உயிரை மாய்த்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

எனினும், மபணு பரிசோதனை ஒத்துவராத நிலையில், அவர் இறந்தமைக்கான எந்த சான்றும் கிடைக்காத நிலையிலேயே, அவர் தப்பிச்சென்றதாக கிடைத்துள்ள தகவலின் பிரகாரம் பொலிசாரின் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சாய்ந்தமருது தாக்குதல் நடப்பதற்கு முன்னரேயே சாரா அங்கிருந்து தப்பிச்சென்றிருக்கலாமென சிஐடிக்கு தற்போது தகவல் கிடைத்துள்ளது.

அவர் தப்பிச் செல்ல உதவிய விவகாரத்திலேயே சாராவின் சித்தப்பாவும், பொலிஸ் இன்ஸ்பெக்டரும் கைதாகியுள்ளனர்.

தாக்குதல் நடந்த காலப்பகுதியில் பொலிஸ் அதிகாரி களுவாஞ்சிக்குடியில் பணியாற்றினார். தாக்குதலை அண்மித்த காலப்பகுதியில் பொலிஸ் அதிகாரி சாய்ந்தமருதிற்கு சென்றதாக கிடைத்த தகவல்களை உறுதிசெய்யும் விசாரணையை பொலிசார் ஆரம்பித்துள்ளனர்.

சாரா வெளிநாடு தப்பிச்சென்றிருக்கலாம் என்றும் சிஐடியினர் கருதுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here