வேலையில்லாததால் மகனை கூண்டுக்குள் அடைத்து வெந்நீர் ஊற்றி கொன்ற தம்பதிக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை!

சிங்கப்பூரில் தமது 5 வயது மகனை சித்திரவதை செய்து கொலை செய்த இளம் தம்பதிக்கு 27 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் உயர்நீதிமன்றம் இன்று இந்த தீர்ப்பை வழங்கியது.

ரிட்சுவான் மெகா அப்துல் ரஹ்மான் (28) என்பவருக்கு 27 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 24 பிரம்படிகளும் விதிக்கப்பட்டது. அவரது மனைவி, அஸ்லின் அருஜுனாவுக்கு (28) 27 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் பிரம்படிகளுக்குப் பதிலாக கூடுதலாக ஓர் ஆண்டுச் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கொடூரச் சம்பவம் கடந்த 2016ஆம் ஆண்டு ஒக்டோபர் 15ஆம் திகதிக்கும் 22ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலக்கட்டத்தில் நடந்தது. தோ பாயோ பகுதியில் உள்ள அவர்களது வீட்டில் நடந்த இந்தச் சம்பவத்தில் தம்பதியர், நான்கு முறை சிறுவன் மீது வெந்நீரை ஊற்றி காயம் ஏற்படுத்தி அவனை துடிதுடிக்கச் செய்துள்ளனர்.

கடைசியாக ஒக்டோபர் 22ஆம் திகதி நடந்த சம்பவத்தின்போது மயங்கி விழுந்த சிறுவனை, ஏழு மணி நேரத்திற்குப் பிறகு அந்தத் தம்பதியர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

சிறுவனின் உடலில் முக்கால்வாசி பகுதி வெந்நீர் பட்டு வெந்து போயிருந்தன. அவனுக்கு ஏற்பட்டிருந்த கடுமையான காயங்களால் அவன் உயிர் பிரிந்தது.

சிறுவனை அந்தத் தம்பதியினர் பல வழிகளிலும் கொடுமைப்படுத்தியது தெரியவந்துள்ளது.

செல்லப்பிராணியை அடைத்து வைக்கும் கூண்டுக்குள் வைத்து திருகாணிகளை முடுக்கப் பயன்படுத்தப்படும் குறடை வைத்து சிறுவன் உடம்பில் காயம் ஏற்படுத்தினர்.

அத்துடன் துடைப்பக் குச்சியைக் கொண்டு அடித்து, கரண்டியைக் காயவைத்து உள்ளங்கையில்சூடு வைத்தும் கொடுமைப்படுத்தியுள்ளனர்.

ஒரு மீட்டர் உயரமுள்ள அந்தச் சிறுவனை 91 செ.மீ நீளமும் 58 செ.மீ. அகலமும் 70 செ.மீ. உயரமும் கொண்ட சிறிய கூண்டுக்குள் அடைத்துக் கொடுமைப்படுத்திய இந்தச் செயலை கொடூரச்செயலின் உச்சம் என நீதிபதி வெலரி தீர்ப்பளிக்கும்போது கூறினார்.

எந்த ஒரு வேலையிலும் இல்லாத இந்தத் தம்பதியர் மீது முன்னதாக கொலைக்குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் கடந்த ஏப்ரல் மாதம் நீதிபதி தியேன், நோக்கத்துடனான கொலைக்குற்றம் சுமத்துவதற்குப் போதுமான ஆதாரங்கள் இல்லாததால், வெந்நீர் ஊற்றி காயமேற்படுத்தியதற்கான மாற்று குற்றச்சாட்டுகளைச் சுமத்துமாறு அரச சட்டத்தரணிகளைக் கேட்டுக்கொண்டார்.

அதனையடுத்து, கடந்த மாதம் கொலைக்குற்றச்சாட்டில் இருந்து அவர்கள் விடுவிக்கப்பட்டு, கடுமையான காயம் விளைவித்தது, தீப்புண் ஏற்படுத்தியது போன்ற கொடூரமான குற்றங்களைப் புரிந்தததாக குற்றம் சாட்டப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்ட அஸ்லின், ரிட்சுவான் ஆகியோருக்கு அதிக பட்ச ஆயுள் தண்டனை விதிக்குமாறு அரசு தரப்பு சட்டத்தரணிகள் வாதிட்டனர்.

ஒரு வார காலமாக வெந்நீரால் வெந்துபோன புண்களால் வலி வேதனையில் துடித்துக் கொண்டிருந்த சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்குப் பதில் மேலும் அத்தம்பதியர் சிறுவனைக் கொடுமைப்படுத்தினர் என்று அரச சட்டத்தரணி டான் வென் சியன் வாதாடினார்.

சிறுவனை மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற அந்தத் தம்பதியர், அவன் தானாகவே காயமேற்படுத்திக் கொண்டதாக பொய் கூறியதாக அரசாங்கத் தரப்பில் கூறப்பட்டது.

வாதங்களைக் கேட்ட நீதிபதி, இந்தக் குற்றச் செயல்களுக்கு தம்பதியர் இருவருமே சம அளவில் பொறுப்பு வகிப்பதாகக் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here