O/L சித்தியடையாத சஜித்திற்கு தனியாக கணக்கு படிப்பிக்க வேண்டும்: ஐ.தே.க பொருமல்!

ஐக்கிய தேசியக் கட்சி இன்னும் இரு வருடங்களில் அதன் புதிய தலைவரை அறிவிக்கும். இளம் தலைவர்களிடம் பொறுப்பைக் கையளிக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே ரணில் விக்கிரமசிங்கவும் இருக்கின்றார். எனினும் தற்போதைய நெருக்கடி நிலையில் நாட்டை சரிவர நிர்வகிக்கக்கூடிய சிறந்த பொருளாதார இலக்கு அவரிடம் மாத்திரமே காணப்படுகின்றது. எனவே எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் அமைக்கும் பட்சத்தில், பிரதமர் பதவிக்குப் பொருத்தமானவர்களில் ரணில் விக்கிரமசிங்கவைத் தவிர மாற்றுத் தெரிவுகள் இல்லை என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆசுமாரசிங்க தெரிவித்தார்.

மேலும், பொதுத்தேர்தலின் பின்னர் தற்போதுள்ள ஆளுந்தரப்புடன் இணைந்து அரசாங்கம் அமைக்க வேண்டிய எந்தவொரு தேவைப்பாடும் எமக்கில்லை. ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கமொன்றை அமைப்பதே எமது ஒரே எதிர்பார்ப்பாக இருக்கிறது. இதுகுறித்து எமது கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் தெளிவுபடுத்தலை வழங்கியிருந்தார். எனவே நாம் அரசாங்கத்துடன் டீல் ஒன்றைச் செய்திருப்பதாக எவரேனும் கூறுவார்களாயின், உண்மையில் அவ்வாறு கூறுபவர்கள்தான் டீலைச் செய்திருக்கிறார்கள்.

ரணில் விக்கிரமசிங்க சிங்களமொழியில் பாடசாலைக் கல்வியைப் பெற்று, பின்னர் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் சட்டமாணிப் பட்டத்தைப் பெற்றுக்கொண்டு, நாட்டின் இலவசக் கல்வியின் ஊடாகவே தனது கல்வியைப் பூர்த்தி செய்துகொண்ட ஒருவராவார். ஆனால் சில தலைவர்கள் ‘நான் தான் இந்த நாட்டிலேயே மிகவும் கற்றறிந்தவன்’ என்று கூறிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் குறைந்தபட்சம் க.பொ.த சாதாரணதரப் பரீட்சையிலேனும் சித்தியடைந்திருப்பார்களா என்று தெரியவில்லை. தாம் ஆட்சியமைத்தால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 25,000 ரூபாவை வழங்குவதாக சஜித் பிரேமதாஸ கூறுகின்றார். சாதாரணதரப்பரீட்சையில் கூட சித்தியடையாததால் அவருக்குத் தனியாகக் கணித பாடத்தைக் கற்பிக்க வேண்டியிருக்கிறது. ஒரு வாக்குறுதியை வழங்குவதற்கு முன்பாக அது நடைமுறையில் சாத்தியமானதா என்றுகூட சிந்திக்கமாட்டார்களா என்ற கேள்வியே எழுகிறது. சஜித் பிரேமதாஸ ஜனாதிபதித் தேர்தலின் போது கூறிய நடைமுறைச் சாத்தியமற்ற கருத்துக்களையே தற்போதும் கூறி வருகின்றார்.

கொரோனா வைரஸ் பரவலையடுத்து நாட்டிலேற்பட்ட பொருளாதார நெருக்கடி நிலையை சீர்செய்வதற்கு முதலில் ஒவ்வொரு குடும்பத்தினதும் பொருளாதாரத்தை சரிசெய்வதற்கான செயற்திட்டமொன்று தேவைப்படுகிறது. அதனை முன்நிறுத்தியே ஐக்கிய தேசியக் கட்சி செயற்பட்டுவருகின்றது. அதேபோன்று நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பியிருப்பதுடன், அதற்கான நிதியையும் கடந்த காலத்தில் திரட்டிக் காண்பித்திருக்கிறோம்.

அதேபோன்று அரசாங்கம் விசேட ஜனாதிபதி செயலணிகளை உருவாக்கி, அவற்றின் உறுப்பினர்களாக இராணுவத்தினரை நியமித்து ஒருபுறம் மக்களின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்திவரும் அதேவேளை, மறுபுறத்தில் தமது தொழிற்சங்கங்களின் ஊடாக எதிரணியினர் மீது தாக்குதல்களையும் நடத்தி வருகின்றது. அத்தகைய சில தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியிருப்பதுடன், அதுபற்றி உடனடியாக ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ஷ அவதானம் செலுத்தவேண்டும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here