அம்பாறையில் தபால்மூல வாக்களிப்பு மந்த கதியில் ஆரம்பம்

2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நாடு பூராகவும் நடைபெற்று வருகின்ற நிலையில் பொதுத் தேர்தலை சுகாதார விதிமுறைகளுக்கமைய நடாத்தும் திட்டத்திற்கு அமைவாக அம்பாறை மாவட்டத்தில் தபால் மூல வாக்களிப்பு பணிகள் ஆரம்பமாகியுள்ளன.

அந்தவகையில் அம்பாறை மாவட்டத்தில் பல்வேறு திணைக்களங்களில் தபால் மூல வாக்களிப்பு இன்று(14) காலை 9 மணி முதல் மும்முரமாக இடம்பெற்று வருகின்றது.சில இடங்களில் மந்த கதியில் இடம்பெற்று வருவதாக சுயாதீன தேர்தல் கண்காணிப்பு உத்தியோகத்தர்கள் ஊடகங்களிடம் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் அம்பாறை மாவட்டத்தில் கல்முனை வலயக்கல்வி பணிமனையில் கல்முனை வலயத்திற்குட்பட்ட கல்முனை கோட்டம், கல்முனை தமிழ் கோட்டம், காரைதீவு சாய்ந்தமருது கோட்டம், கல்முனை வலயக் கல்வி அலுவலகம், அதிகாரிகளும் வாக்களித்து வருகின்றனர்.

மேலும் கல்முனை பிரதேச செயலகம், கல்முனை வடக்கு பிரதேச செயலகம், நாவிதன்வெளி பிரதேச செயலகம், கல்முனை மாநகர சபை, நாவிதன்வெளி பிரதேச சபை ஆகியவற்றிலும் வாக்களிப்பு நடைபெற்றுவருகின்றன.

இத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்றும் நாளையும் நாடளாவிய ரீதியில் நடைபெற்று வருவதுடன் சுமார் 7,920 க்கும் அதிகமான வாக்களிப்பு நிலையங்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவால் அமைக்கப்பட்டுள்ளன.

தபால் மூலம் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளவர்கள் அவர்களது நிறுவனத்திலே வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்திருந்தது.

இதற்கமைய தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அரச அலுவலர்கள் தபால்மூலம் வாக்களிப்பதற்காக 14, 15 ஆம் திகதிகள் தத்தமது அரச காரியாலயங்களிலும் மற்றும் மாவட்ட செயலகங்கள், தேர்தல் அலுவலகங்கள் என்பவற்றில் வாக்களிக்க முடியும்.

பொலிஸ், முப்படை சிவில் பாதுகாப்பு படை உட்பட சுகாதார துறையினர் எதிர்வரும் 16, 17 ஆந்திகதிகளில் நள்ளிரவு 12.00 மணிவரை வாக்களிக்க முடியுமெனவும், இத்தினங்களில் வாக்களிக்க முடியாதவர்கள் தாம் சேவைபுரியும் நிலையம் அமைந்தள்ள மாவட்ட செயலகங்களில் அல்லது மாவட்ட தேர்தல் காரியாலயங்களில் வாக்களிக்க முடியுமென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும் அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் ,அக்கரைப்பற்று, பொத்துவில், அட்டாளைச்சேனை, நிந்தவூர் ,சம்மாந்துறை, காரைதீவு, கல்முனை, நாவிதன்வெளி ,சாய்ந்தமருது ,உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரச திணைக்களங்களிலும் மந்த நிலையில் தபால் தேர்தல் நடைபெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here