நுவரெலியாவில் 5 வேட்பாளர்களின் வெற்றியும் உறுதி!

நுவரெலியா மாவட்டத்தில் பொதுஜன பெரமுன கட்சியின் மொட்டு சின்னத்தில் போட்டியிடும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் 5 வேட்பாளர்களும் அமோக வெற்றி பெற்று பாராளுமன்றம் செல்வார்கள். அதில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமானே அதிக விருப்பு வாக்குகளை பெற்று வெற்றி பெறுவார். அப்போது தெரியும் ஜீவன் தொண்டமான் பெரியவரா? சிறியவரா என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிதி செயலாளரும் மத்திய மாகாண முன்னாள் கல்வி அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமாகிய மருதபாண்டி ரமேஸ்வரன் தெரிவித்தார்.

நோர்வூட் நியுவெளி தோட்டத்தில் இன்று (14) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போது இவ்வாறு தெரிவித்தார்.

மலையக மக்கள் ஏனைய சமூகங்களுக்கு நிகராக வாழும் சூழலை ஏற்ப்படுத்திக் கொடுத்தவர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமான். நீங்கள் இன்று பிரதேச சபைகளிலோ,மாகாண சபைகளிலோ, பாராளுமன்றத்திலோ இருப்பதற்கு வாக்கு உரிமையை பெற்றுக்கொடுத்தவர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களே. அதனை இன்று சிலர் மறந்துவிட்டு வாய்க்கு வந்ததை பேசி திரிகின்றனர். வாய்க்கு வந்ததை பேசுபவர்கள் நல்ல தலைவர்களாக இருக்க முடியாது.

முதலில் குறை கூறும் அரசியலை நிறுத்துங்கள். 1000 ரூபா சம்பளத்தை வைத்து அரசியல் நடத்த சிலர் முனைகின்றனர். 1000 ரூபா சம்பளம் நிச்சயமாக கிடைக்கும். அதில் எந்தவித மாற்றமும் இல்லை. நாங்கள் 80 வருடங்கள் என்ன செய்தோம் என்கின்றனர். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் செய்ததை பட்டியலிட்டு காட்ட இயலாது. எண்ணில் அடங்காத சேவைகளை செய்துள்ளது. இன்று நாம் அனுபவிக்கும் உரிமைகளை அனைத்தையும் பெற்றுக்கொடுத்ததே இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்தான். அதனை முழு மலையகமும் நாடும் அறியும்.

நாம் ஏனைய சமூகங்களுக்கு நிகராக வாழ்வதற்கு சகல உரிமைகளையும் பெற்றுக் கொடுத்தவர் மறைந்த தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமான். வருடத்தில் ஆறாவது மாதமும் பன்னிரண்டாவது மாதமும் கூடும் கட்சி இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இல்லை. மலையக மக்களுக்காக குரல் கொடுக்கும் மாபெரும் அமைப்பு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ். எனவே இன்று நாம் செல்லும் மக்கள் சந்திப்புக்கெல்லாம் அலை அலையாய் இளைஞர்கள் கூடுகின்றார்கள். ஜீவன் தொண்டமானின் தலைமத்துவத்தை இன்று இளைஞர்கள் முதல் அனைவரும் ஏற்றுக்கொண்டிருக்கின்றார்கள் எனவே நாங்கள் 5 வேட்பாளர்களும் அமோக வெற்றி பெறுவது உறுதி என்றார்.

-தலவாக்கலை  பி.கேதீஸ்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here