விலை கொடுத்து வாங்கும் ஆபத்து: ஸ்மார்ட் போனினால் கைகளிற்கு வரும் ஆபத்துக்கள்!

இப்பொழுது ஸ்மார்ட் தொலைபேசிகள் இல்லாதவர்களை காண்பது அரிது. ஒவ்வொரு குடும்பத்திலும் எத்தனை ஸ்மார்ட் போன்கள் உள்ளன என்பதுதான் இப்போது கேள்வியாக இருக்கும்.

ஸ்மார்ட் போன்கள் நமது நேரத்தில் பெருமளவு நேரத்தை விழுங்கி வருகிறது. சராசரியாக ஒவ்வொருவரும் 2 மணித்தியாலத்திற்கு குறையாமல் ஸ்மார்ட் போன்களில் செலவழிக்கிறார்கள், வருடத்தில் 75 நாள்கள் போனுடன் செலவழிகிறார்கள் என்கிறது ஆய்வு.

இது லொக்டௌனுக்கு முந்தைய நிலவரம். லொக்டௌனுக்குப் பிறகு, ஒரு நாளில் சுமார் மூன்றரை மணிநேரம் முதல் ஐந்து மணி நேரம்வரை செலவிடலாம் எனக் கணக்கிட்டுள்ளார்கள். நம்மில் பலர் காலையில் எழுவதே ஸ்மார்ட் திரையில்தான் என்பதும் மறுப்பதற்கில்லை.

“அந்த போனுக்கு மட்டும் வாயிருந்தா கதறிக் கதறி அழும்” என நம்மில் பலர் பெற்றோரிடம் திட்டு வாங்கி வருகிறோம். எப்போதும் இப்படி போனும் கையுமாக இருப்பதால் அந்த போனின் ஆயுள்காலம் குறையுமோ இல்லையோ, நிச்சயமாக நம் கைகளிலுள்ள மூட்டுகள், சவ்வுகள், தசை, தசை நாண்களின் ஆயுள்காலம் குறையும்.

Blackberry thumb, Text claw, Cellphone elbow… இவையெல்லாம் புதியதாக வந்த ஸ்மார்ட் போனின் பெயரோ, செயலிகளின் பெயரோ இல்லை. ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதால் நம் கையில், முக்கியமாக கைவிரல்களில் ஏற்படும் பாதிப்புகள்.

பிளாக்பெர்ரி தம்ப் (Blackberry thumb)

தொடர்ந்து ஸ்மார்ட்போன் தொடுதிரையில் கட்டை விரலை அதிக நேரம் பயன்படுத்தினால் ஏற்படும் வலியே ‘பிளாக்பெர்ரி தம்ப்’. சில நேரங்களில் விரல் நுனியில்கூட வலி ஏற்படும்.

டெக்ஸ்ட் க்ளா (Text claw)

கையின் கட்டைவிரலானது பொருள்களை வலுவாகப் பிடித்துக் கொள்வதற்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால், நாம் அதைப் போனில் விளையாடுவதற்கும், தட்டச்சு செய்வதற்கும், ஸ்கிரோலிங் செய்வதற்கும் பயன்படுத்தி அதன் வேலை இயல்பையே மாற்றுகிறோம். இதனால் கட்டை விரலையும் மணிக்கட்டுப் பகுதியையும் இணைக்கும் தசை நாணில் வீக்கம் ஏற்படும். அந்தக் கட்டைவிரல் தசை நாண்களின் வீக்கத்தை ‘டெக்ஸ்ட் க்ளா’ என்கிறோம்.

மேலும், தொடர்ந்து மணிக்கட்டுப் பகுதியை வளைந்த நிலையில் வைத்திருப்பதால் மணிக்கட்டு, கட்டைவிரல் மற்றும் மோதிர விரலுக்கு உணர்வுகளைக் கடத்தும் நரம்பு (median nerve) அழுத்தப்படும். இதனால் தசைநாண் வீக்கத்தோடு சேர்ந்து விரல்கள் மரத்துப் போவதுடன் மணிக்கட்டுப் பகுதியை அசைக்கும்போது அதிக வலியையும் உண்டாக்கும். இதை ‘கோர்பல் டனல் சிண்ட்ரோம் (carpal tunnel syndrome)’ என்று கூறுவர்.

செல்போன் எல்போ (Cell phone elbow)

முழங்கையை காதோரம் மடித்து வைத்தபடி அதிக நேரம் மொபைலை பயன்படுத்துபவர்களுக்கு முழங்கை மூட்டுப் பகுதியில் உள்ள நரம்பு (ulnar nerve) அழுத்தப்படும். அதில் வீக்கமோ ஏதாவது பாதிப்பு ஏற்பட்டாலோ சிறுவிரல், மோதிர விரலில் மரத்துப்போவது மற்றும் வலி ஏற்படும். மேலும் மொபைலின் அடிப்பகுதியை சிறுவிரலின் மூலமே அதிக நேரம் தாங்கிப் பிடித்திருப்போம். இதுபோல் அதிக நேரம் அந்த விரலைப் பயன்படுத்துவதாலும் மேற்கூறிய பாதிப்புகள் ஏற்படும். இந்த பாதிப்பை ‘க்யூபிட்டல் டனல் சிண்ட்ரோம்(cubital tunnel syndrome)’ என்பர்.

செல்ஃபி எல்போ(Selfie elbow)

முழங்கையை நேராக நீட்டிக்கொண்டு மணிக்கட்டை வளைத்து செல்போனை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு செல்ஃபி எடுப்போம். இப்படி அடிக்கடி செய்வதால் தோள்பட்டையின் கீழிருந்து முழங்கை வழியாகக் கைவிரல் பகுதிவரை செல்கிற‌ தசை மற்றும் தசை நாண்களில் வலியோ, வீக்கமோ, காயமோ ஏற்படும். இதனால் காலையில் எழும்போதே கையில் வலி, விறைப்புத்தன்மை என ஏற்படும். இதனை செல்ஃபி எல்போ(Selfie elbow) என்பர்.

செல்போனை அதிக நேரம் குனிந்துகொண்டே பார்ப்பதால் கழுத்து வலி (Cervical spondylosis) , தோள்பட்டை வலி (shoulder pain) போன்ற வலிகளும் ஏற்படும்.

உட்கார்ந்து கொண்டோ, படுத்துக் கொண்டோ நம் வசதிக்கு ஏற்றால்போல கால வரையறை இல்லாமல் போன் பார்த்துக் கொண்டோ, விளையாடிக் கொண்டோ இருக்கிறோம். இதனால் நம்மை அறியாமலே நம் உடலின் மேல்பாதியில் (upper body) உள்ள தசைகளையும், தசைநாண்களையும் அதிக நேரம் பயன்படுத்தி சிரமத்திற்கு உள்ளாக்கி (Repetitive Strain Injury) உடல் உபாதைகளை அனுபவிக்கின்றோம்.

Trigger thumb, Gamer’s thumb, Mother’s wrist, New Mommy thumb, Washerwoman’s sprain, ipad wrist, Text claw, Selfie elbow, Smartphone pinky syndrome என்று விதவிதமாகப் பெயரிட்டு அழைக்கப்படும் உடல் உபாதைகளுக்கான காரணகர்த்தா ஒன்றுதான்… உள்ளங்கைக்குள் கிடக்கும் மொபைல்.

நமது உடலின் தசைகளும் எலும்பு மூட்டுகளும் குறிப்பிட்ட அசைவுகளையும் செயல்களையும் செய்யவே வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆனால், நாம் அவற்றின் வடிவமைப்புக்கும் வேலை இயல்புக்கும் நேர் எதிரான செயல்களைத் தொடர்ந்து செய்வதால், நம் உடலை நாமே பல பாதிப்புகளுக்கு உள்ளாக்குகிறோம்.

மொபைல் போன் பயன்படுத்துவதால் உடலில் ஏற்படும் உபாதைகளுக்கு சிகிச்சைகள் உண்டு. என்றாலும், வரும் முன் காப்பதே சிறந்தது அல்லவா? மொபைல் பயன்பாட்டு நேரத்தைக் குறைத்து, பயன்பாட்டு வழிமுறைகளை மாற்றினாலே இத்தகைய உடல் உபாதைகளிலிருந்து விடுபடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

– ந.கிருஷ்ணவேணி,
(இயன்முறை மருத்துவர்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here