தேர்தல் பிரச்சாரத்தில் பொதுச்சொத்துக்களை சேதமாக்காதீர்கள்!

தேர்தல் பிரச்சாரத்தில் பொதுச் சொத்துக்களையும் சூழலையும் பாதுகாப்பதில் வேட்பாளர்கள் பொறுப்புணர்வுடன் செயற்படவேண்டும். பிரச்சாரம் என்ற போர்வையில் எமது பிரதேசத்தை நாமே அழித்து விடக்கூடாது என வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சிலர் பொதுச் சொத்துக்களை நாசம் செய்யும் வகையிலும் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் வகையில் செயற்படுகின்றனர். இது சட்டம் ஒழுங்கு நடவடிக்கைக்கு புறம்பான காரியமும் ஆகும். பொது தாபனங்கள், மதில்களிலும் கண்டபடி சுவரொட்டிகளை ஒட்டுகின்றனர். பொது வீதிகளில் தமது கட்சியின் சின்னம், விருப்பு இலக்கம் போன்றவற்றை வர்ணப்பூச்சுக்கொண்டு எழுதிவிட்டுச் செல்கின்றனர். இதனால் வீதிகளில் கடவைக்கோடுகள் உள்ளிட்ட சமிஞை கோடுகள் மறைகின்றன. உள்ளூராட்சி மன்றங்களான எமக்குச் சொந்தமான வீதிகள், வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான வீதிகள், மாகாணத்தினைக்களத்திற்குச் சொந்தமான வீதிகள் என வேறுபாடின்றி நாசம் செய்யப்படுகின்றது. இவ்வாறு எழுதப்பட்டவற்றை அழிக்கும் போது கூட அழிப்பதற்காக பயன்படும் வர்ணப்பூச்சு மீது எவராவது வழுக்கி விழவும் விபத்துக்கள் நடக்கவும் அதிகமாக சந்தர்ப்பங்கள் உள்ளன.

வீதிகளில் எழுதுவோர் பயணிகளின் உயிருடன் விளையாடுகின்றனர். எனவே அரச சொத்துக்கு இழப்பினை ஏற்படுத்தி மக்களின் வரிப்பணத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திகளை நாசம் செய்வதுடன் மட்டும் நின்றுவிடவில்லை. இதற்கு அடுத்ததாக வீதிகளின் பெயர்ப்பலகைகள், திட்டங்களின் பெயர்ப்பலகைகளை மறைத்து வேட்பாளர்களின் படங்களை ஒட்டுகின்றனர். தேர்தலில் வெற்றிபெற்று பிரதேசத்தை அபிவிருத்தி என்று அரசியலில் கூறும் சிலர் இவ்வாறு மேற்கொள்வதனால் ஒட்டுமொத்த அரசியல் வாதிகளுக்கும் அவமானமாகவும் அமைகின்றது. இவற்றில் கணிசமானவற்றினை பொலிசார் அகற்றி வருகின்றனர். இவ்வாறு ஒட்டப்பட்டவற்றை அகற்றுவதற்கும் நாட்டில் பெரும் நிதி செலவு ஏற்படுகின்றது.
வேட்பாளர்கள் தமது பிரசாரகாரருக்கு உரிய அறிவுறுத்தல்களைக் கொடுக்க வேண்டும் என உள்ளுராட்சி மன்றம் என்ற வகையில் கேட்டுக்கொள்கின்றேன்.

மக்களின் பொதுச் சொத்துக்களுக்கும் எமது சூழலுக்கும் விரோதமாகச் செயற்படும் வேட்பாளர்களை மீது சட்டம் ஒழுங்கிற்கு மேலாக மக்கள் தமது வாக்குரிமை மூலமும் தகுந்த பாடம் கற்பிக்கவேண்டும். நாமும் அரசியல் கட்சி சார்ந்தவர்களாக வாக்குரிமை அடிப்படையில் தெரிவாகின்ற போதும் நாமே மக்களின் விடயத்தில் பொறுப்பற்று செயற்பட்டு விட்டு மக்களின் தலைமைத்துவப் பொறுப்பினை கோருவதில் அர்த்தமில்லை என வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here