நான் கறிவேப்பிலையல்ல; தமிழ் தேசிய நீக்க கூட்டங்களிலும் கலந்து கொள்ள மாட்டேன்: சசிகலா ரவிராஜ் அதிரடி!


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது தமிழரின் அரசியல் ஒற்றுமையை பிரதிபலிக்கும் ஓர் அமைப்பு என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை என்றே நான் கருதுகிறேன். அந்த ஒற்றுமை என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளும் இருக்க வேண்டுமென்று வாஞ்சிக்கிறேன். அந்த வகையில் தான் பரப்புரை நிகழ்வுகளில் நான் பங்கேற்கிறேன். நான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒன்பது சகோதர வேட்பாளர்களுடனும் சேர்ந்து இயங்கவே விரும்புகிறேன். இது தொடர்பாக கட்சித் தலைமைக்கும் தெரியப்படுத்தியிருந்தேன்.

ஆயினும் நான் பங்கேற்கும் நிகழ்வுகளை விளம்பரமாக்கி நான் தங்களுக்கு மட்டுமே ஆதரவாக பிரச்சாரம் செய்வது போன்ற பிம்பத்தை உருவாக்கி நான் ஏனைய வேட்பாளர்களுடன் பேணும் சுமுகமான உறவை சிதைக்க முயற்சிப்பது ஆரோக்கியமற்ற ஒரு விடயமாகும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் கிளிநொச்சி தேர்தல் மாவட்டங்களின் பெண் வேட்பாளர் என்ற வகையில் கட்சியின் மகளிர் அணி உட்பட சகல பெண்கள் அமைப்புகளின் ஆதரவை கோரும் எனக்கு சிலர் தடையை ஏற்படுத்துவது வேதனை அளிக்கிறது. பெண்களுக்கான பிரதிநிதித்துவத்தை வழங்க முன்வந்த ஒருத்தியை சிலர் சர்வாதிகாரம் சார்ந்த போக்குடன் கையாள முற்படுவது வேதனை தரும் விடயமாகும்.

இது எனக்கு மட்டுமல்ல என்னை பின் தொடர்ந்து வரும் பெண் அரசியல்வாதிகளுக்கும் அச்சுறுத்தலாக அமைந்துவிடக்கூடும். அத்தோடு, எனக்கு ஆதரவு அளிக்க நினைக்கும் பெண்களுக்கும் இது ஒரு சவாலாக காணப்படுகிறது.

தமிழ்த் தேசிய நீக்க அரசியலை ஊக்குவிக்கும் முகமாக எந்த கூட்டத்திலும் நான் கலந்து கொள்ளவில்லை. தென்மராட்சி எனது மண் நான் அந்த மண்ணில் பிறந்தவள்; என் மக்களை சுதந்திரமாக சந்தித்து கலந்துரையாடுகிறேன். அவர்கள் குறைகளை அறிந்து கொள்கிறேன். அவற்றை நிவர்த்தி செய்ய விரும்புகிறேன். எப்போதும் அப்படியே இருக்க விரும்புகிறேன்.

பெண்கள் அரசியலுக்கு வரவேண்டும் என நினைக்கிறோம்; பெண்களை மதிக்கிறோம் என்று பேசுபவர்கள் உண்மையில் பெண்களை சுயாதீனமாக இயங்க அனுமதிக்க வேண்டும் என்பதே எனது வேண்டுகோளாகும் என சசிகலா ரவிராஜ் தெரிவித்துள்ளார்.

பின்னணி

அண்மையில் விடத்தற்பளையில் நடந்த தேர்தல் பரப்புரை கூட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சி.சிறிதரன், எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சசிகலா ரவிராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். சிறிதரன்- சுமந்திரன் தரப்பு இம்முறை கூட்டாக விருப்பு வாக்கு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தென்மராட்சியில் நடக்கும் கூட்டங்களில் மாத்திரம் சசிகலா ரவிராஜை அழைப்பதாகவும், தென்மராட்சிக்கு வெளியில் நடக்கும் கூட்டங்களிற்கு அவரை அழைப்பதில்லையென்றும் அவரது தரப்பினர் கருதுகின்றனர்.

இரு தினங்களின் முன்னர் சி.சிறிதரனின் ஏற்பாட்டில் முழங்காவிலில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ரெலோ அமைப்பின் சுரேன் சுரேந்திரன் அழைக்கப்பட்டிருந்தார். ஆனால் தமிழ் அரசு கட்சியின் ஈசரவணபவன், சசிகலா ரவிராஜ் உள்ளிட்ட சிலரும் புளொட் தரப்பினரும் அழைக்கப்படவில்லை.

இதேவேளை, அண்மைக்காலமாக தனி ஒரு சிலருடன் இணைந்து விருப்பு வாக்கு பிரச்சாரத்தில் ஈடுபடாமல், அனைத்து வேட்பாளர்களுடனும் இணைந்து செயற்பட்டு வரும் சசிகலாவை, சில தினங்களின் முன்னர் விடத்தற்பளையில் நடந்த கூட்டத்தின் பின்னர், அவர் தமது தரப்புடன் இணைந்துள்ளதை போன்ற அபிப்பிராயத்தை சமூக வலைத்தளங்களில் பிரச்சாரம் செய்வதில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் கே.சயந்தன் தரப்பு ஈடுபட்டதாக சசிகலா தரப்பு அதிருப்தியில் இருந்தது.

தென்மராட்சி வாக்கை பெறுவதற்கு மாத்திரமே மேற்படி அணுகுமுறையை அரசியல்வாதிகள் செய்வதாக அதிருப்தியடைந்துள்ள நிலையிலேயே சசிகலா இந்த அதிரடி அறிவிப்பை விடுத்துள்ளார்.

இதேவேளை, சசிகலா ரவிராஜ் தனது அதிருப்தியை சில தினங்களின் முன்னர் முகப்புத்தகம் வழியாகவும் வெளியிட்டிருந்தார். எனினும், சிறிது நேரத்தின் பின்னர் அது அகற்றப்பட்டிருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here