விமல் வீரவன்ச எனது நண்பர்; தமிழ் மக்கள் அரசில் பங்காளியாகி கிடைப்பதை எடுத்துக் கொள்ள வேண்டும்: தமிழர்களிற்கு முரளி மீண்டும் ‘விவகார’ யோசனை!


தமிழ் மக்களிற்கு தொடர்ந்து விவகாரமான யோசனைகளை தெரிவித்து வரும் முத்தையா முரளிதரன் தற்போது புதிய யோசனையொன்றை தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் அரசின் பங்குதாரர்களாக இணைந்து கொள்ள வேண்டும். இந்த அரசாங்கமே ஆட்சிக்கு வரவுள்ள நிலையில், கிடைக்கும் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தமிழ் மக்களிற்கு ஆலோசனை தெரிவித்துள்ளார்.

அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு ஆதரவு தெரிவித்து, கிங்ஸ்பெரி ஹோட்டலில் முத்தையா முரளிதரன் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தார். இங்கு உரையாற்றிய போதே இந்த யோசனையை தெரிவித்துள்ளார்.

அவர் கருத்து தெரிவிக்கையில்,

நான் அரசியல்வாதியல்ல. எமது மக்கள் ஏன் தொடர்ந்து கஷ்டப்பட வேண்டும். அவர்களின் தலைவிதியா?. நான் பல உதவிகள் செய்தாலும், வெளியில் சொல்லவில்லை. அரசியல்வாதிகள் மக்களிற்கு உதவுவார்கள் என எதிர்பார்த்தோம். காலம்காலமாக மக்கள் அதேநிலையிலேயே இருக்கிறார்கள். தேர்தல் நோக்கத்தில் நான் மக்களிற்கு உதவ வரவில்லை. எமது மக்களிற்கு உதவக்கூடிய சந்தர்ப்பம் எழுந்துள்ளது.

நான் பாடசாலை மாணவர்களிற்குஉதவ தயாரானபோது இங்குள்ள அரசியல்வாதிகள் அதை தடுத்துள்ளனர்.

ஜனாதிபதியினதும், பிரதமரினதும் குடும்பத்தினர் 20 வருடங்களாக என்னுடன் நெருக்கமாக இருக்கிறார்கள். அவர்களின் ஆட்சிதான் வரப் போகிறது.

எமது நுவரெலியாவில் சிங்கள, தமிழ் மக்கள்தான் அதிகம் வாழ்கிறார்கள். இப் பிரதேசத்தில் சேவையாற்ற முன்வருமாறு மக்கள் அழைத்தனர். வடக்கு ஆளுனர் பதவி தந்தபோதும் மறுத்தேன். அரசியலில் குதிக்கும் எண்ணம் கிடையாது. எனக்கு பதிலாக எனது தம்பியை இறக்கியுள்ளோம். அவரூடாக மக்களிற்கு சேவையாற்றுவோம்.

ஆதரவு அளிக்காமல் அமைச்சர்களிடம் சென்று உதவி கேட்க முடியாது. இந்த அரசில் தமிழ் மக்களும் பங்காளியாக வேண்டும். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்த வேண்டும்.

மலையக மக்களிற்காக லிந்துலை தோட்டத்தில் பெரிய நிலமொன்று கிடைத்துள்ளது. அக்கடமி ஒன்றை ஆரம்பித்து மக்களிற்கு சேவையாற்றவுள்ளேன். மலையக இளைஞர்களிற்கு திறமையுள்ளது. அவர்களை முன்னேற்ற வேண்டும். வசதியானவர்கள் இவற்றிற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். 90 வீதமானவர்கள் லயன்களில் வாழ்கிறார்கள். கையேந்தும் நிலைமையில் உள்ளனர்.

மக்கள் வறுமையில் இருந்தால்தான் அரசியல்வாதிகளுக்கு நிலைக்க முடியும். அரசாங்கம் வழங்கும் வீடுகளைகூட கட்டிக்கொடுக்காமல் இழுத்தடிக்கிறார்கள். பல திட்டங்களை இப்பகுதியில் முன்னெடுக்கவுள்ளோம். உங்கள் உதவிகளை என்றும் மறக்க மாட்டேன். கிடைத்த வாய்ப்பை பயன்படுத்துவோம். உங்களிடம் பணம் கேட்கவில்லை. வாக்கைத்தான் கேட்கிறோம். ஜனாதிபதி வித்தியாசமானவர். அவர் அரசியல்வாதியல்ல. அவர் கொழும்பில் பல சேவைகள் செய்தவர். விமல் வீரவன்ச என்னுடைய நண்பர். மிக நல்லவர். அவரும் இந்த மக்களிற்கு உதவ தயாராக இருக்கிறார்.

பத்திரிகைகள் சில விடயங்களில் உசுப்பேற்றுகின்றன. எல்லா நல்ல விடயங்களையும் போட்டால் பத்திரிகையை யாரும் வாங்க மாட்டார்கள். அதனால் இடையிடையே சில பொய்யான செய்திகளை வெளியிட்டு உசுப்பேற்றுகின்றன என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here