அரச உத்தியோகத்தர்களிடம் ராமேஷ்வரன் விடுத்துள்ள வேண்டுகோள்!

நுவரெலியா மாவட்ட அரச உத்தியோகத்தர்கள் நீங்கள் அளிக்கயிருக்கின்ற வாக்கானது எமது நாட்டில் நிலையான ஓர் அரசை உருவாக்கவும் இனங்களுக்கிடையே ஒரு காத்திரமான சூழலை உருவாக்கவும் மக்களின் பாதுகாப்பையும் ஆரோக்கியத்தையும் உறுதிப்படுத்துவதாகவும் இருக்கவேண்டும். எமது மக்களின் அரசியல், பொருளாதார, கல்வி, கலாசார அபிலாசைகளை அடைந்துக்கொள்வதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் வேட்பாளர்களுக்கே உங்களது வாக்குகளை அளிக்க வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிதி செயலாளரும் மத்திய மாகாண முன்னாள் கல்வி அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமாகிய மருதபாண்டி ரமேஸ்வரன் தெரிவித்தார்

ஊடகச் சந்திப்பொன்றின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் இது தொடர்பாக தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

மலையக கல்விக்கு வித்திட்டவர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமான் ஆவார். அவரின் அயராத முயற்சியினால்தான் இன்று மலையகம் கல்வி வளர்ச்சியில் உயர்வடைந்துள்ளது. அதேபோல் தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களும் மலையக கல்வி வளர்ச்சிக்காக பல்வேறு சேவைகளை செய்துள்ளார். அதனை நாங்கள் வாய் மூலமாக சொல்வதை விட இன்று முழு மலையகமே புரிந்துக்கொண்டுள்ளது. ஒரு காலகட்டத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலிருந்து மலையகத்திற்கு ஆசிரியர்கள் வரவழைக்கப்பட்ட காலத்தை மாற்றியமைத்தவர் மறைந்த தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமான்.

இன்று எமது சமூகத்தை சேர்ந்தவர்களே ஆசிரியர்களாகவும் அதிபர்களாகவும் பல்வேறு துறைசார்ந்த அறிவியலாளர்களாகவும் திகழ்கின்றனர்.இன்று மலையக பாடசாலைகளிலே கல்வி பெறுபேறுகளை பார்க்கும்போது வியக்கத்தக்கதாக இருக்கின்றது. அன்று எம்மிடம் இருந்தது ஆசிரியர் தொழில் மட்டுமே. 1982 ம் 1983ம் ஆண்டுகளில் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களால் 500 ஆசிரியர் நியமனங்கள் மலையகத்திற்கு பெற்றுக்கொடுக்கப்பட்டன. அதில் 402 நியமனங்கள் கணித பாடம் சித்தியடையாதவர்களும் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். அதன்பிறகு பல்வேறு ஆசிரியர் நியமனங்கள், ஏனைய அரச நியமனங்கள் மலையகத்திற்கு இ.தொ.காவினால் பெற்றுக்கொடுக்கப்பட்டன. இந்நியமனங்கள் அரசியல், கட்சி பேதமின்றி அனைவருக்கும் பெற்றுக்கொடுக்கப்பட்டன.

2007 ம் ஆண்டு 3179 ஆசிரியர் நியமனம் அதன் பின்னர் உதவி ஆசிரியர் நியமனம் போன்றன இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களால் பெற்றுக்கொடுக்கப்பட்டன. 1970 ஆண்டு தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்கள் பாராளுமன்றம் சென்றார் அதன்பிறகே மலையகமெங்கும் பாடசாலைகள் கட்டப்பட்டன. பின்னர் சீடா என்ற வெளிநாட்டு நிறுவனம் இலங்கைக்கு வந்தது. சீடா நிறுவனத்தின் வேலைத்திட்டங்களை மலையகத்திற்கு கொண்டு வர சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்கள் பெரும்பாடுபட்டார். சீடா மலையகத்திற்கு வந்த பின்னரே மலையகத்தில் கட்டிடங்களை காணமுடிந்தது.

மலையக சமூகத்தோடு பெரும்பான்மை சமூகம் போட்டி போடுகின்ற அக்கால சூழ்நிலையிலும் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை எமது சமூகத்திற்காக தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமான் செய்தார். தோட்டப் பாடசாலைகளாக இருந்த சகல பாடசாலைகளும் அரசாங்க பாடசாலைகளாக பொறுப்பேற்கப்பட்டு முப்பதைந்து வருடங்களை கடந்துவிட்டன. பல்வேறு வெளிநாட்டு நிதி உதவியுடன் பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. ஆசிரியர் நியமனங்கள் பெருவாரியாக வழங்கப்பட்டு தற்போது ஆசிரியர் பற்றாக்குறை பெருமளவில் நிவர்த்திக்கப்பட்டுள்ளது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்டு 75 வருட காலப் பகுதியில் மலையகத்தில் பாடசாலை வசதிகள், போக்குவரத்து வசதிகள், மின்சார வசதிகள் என்பன பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன.

மலையகத்தில் இன்று கல்வி வளர்ச்சியடைந்தமைக்குக் காரணம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸே ஆகும். இ.தொ.கா வின் தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் அரசியல் அணுகுமுறையின் ஊடாக மத்திய மாகாணத்திலுள்ள பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனங்கள் வழங்கப்பட்டன. இது மலையக கல்வி வளர்ச்சியில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஒரு முக்கிய பங்காகும். எனவே நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த அரச வாக்காளர்கள் நன்கு சிந்தித்து பொதுஜன பெரமுனவின் மொட்டு சின்னத்தில் போட்டியிடும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் வேட்பாளர்களுக்கு வாக்களித்து எம்மை அமோக வெற்றிப் பெறச் செய்து எங்களின் கரங்களை பலப்படுத்துங்கள் என்றார்.

-தலவாக்கலை நிருபர் பி.கேதீஸ்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here