வெல்லாவெளி சம்பவம் போலி நாடகம்!

அண்மையில் பரபரப்பாக பேசப்பட்ட வெற்றுச்சேனை சர்ச்சை ஒரு போலி நாடகம் என குறிப்பிடப்படுகிறது. புதையல் தோண்டுபவர்கள் அல்லது தேர்தல் ஆதாயத்தை இலக்காக கொண்ட அரசியல் பிரமுகர் ஒருவரால் அது திட்டமிடப்பட்டிருக்கலாமென்ற தகவல் இப்பொழுது வெளியாகிறது.

மட்டக்களப்பு போரதீவுபற்றி பிரதேசசெயலாளர் பிரிவில் உள்ளது வெற்றுச்சேனை கிராமம். விவசாயமும், கால்நடை வளர்ப்பும் இங்குள்ள மக்களின் பிரதான தொழில்.

இம்மாதம் 4ஆம் திகதி அங்கு சர்ச்சைக்குரிய சம்பவம் நடந்தது. அங்கு பிக்குகள் வந்து உரிமை கொண்டாடினார்கள் என்றும், தமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டியிடும் சிங்கள வேட்பாளர் சாணக்கிய ராகுல் வீரபுரத்திரன் அதை தடுத்து நிறுத்தினார் என்றும், அவர் பேஸ்புக்கில் கட்டணம் செலுத்திய விளம்பர வீடியோக்களை வெளியிட்டபடியிருந்தார்.

அந்த வீடியோவின் சாணக்கிய ராகுலின் நடவடிக்கை செயற்கைத்தனமாகவும், நாடகத்தனமாகவும் தோன்றியதாக சந்தேகம் எழுவதாக சிலர் சமூக ஊடகங்களில் கருத்திட்டிருந்தனர். அதை அந்த பகுதி மக்களே இப்பொழுது முணுமுணுப்புடன் சொல்கிறார்கள். தேர்தல் கால நாடகமாக, சாணக்கி ராகுலை கதாநாயகனாக வைத்து நடத்தப்பட்ட படப்பிடிப்பு அனு என்கிறார்கள்.

அந்த கிராமத்தில் நிலையான கட்டடம் இல்லாத ஆலயமொன்றுள்ளது உயரமாக கட்டப்பட்ட சீமெந்து தளத்தில் இரண்டு வேல்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வளர்ச்சியை காணாத அந்த ஊரில் எல்லாமே ஆலயம்தான். அறுவடை முடிந்ததும் ஆனி மாத பூரணை தினத்தில் அந்த ஆலயத்தில் பொங்கல் வைப்பார்கள். அப்படியான நாளில்தான் அந்த நாடகம் நடந்துள்ளது.

இதுபற்றி அங்குள்ள மக்கள் கருத்து தெரிவிக்கையில்,

வழக்கம் போல அன்றும் பூசை நடந்து கொண்டிருந்தது. திடீரென சில வாகனத்தில் பௌத்த தேரர்கள் வந்தனர். ஆலயம் அமைந்துள்ள இடத்தை சூழவுள்ள பகுதி தமக்குரியது என்றார்கள். நாங்கள் ஆலய வரலாற்றை கூறினோம்.

என்ன மாயமோ தெரியவில்லை, திடீரென சாணக்கிய ராகுல் வீரபுத்திரனும் அங்கு வந்தார். ஏற்கனவே எல்லாம் அறிந்தவரை போல, இது தமிழ் மக்களின் பூர்வீக காணி, தேரர்களிற்கு இங்கு இடமில்லை, உடனடியாக வெளியேறுங்கள், நாம் போராட்டத்தில் ஈடுபட போகிறோம் என்றார். அவர் ஆரம்பத்திலிருந்தே தேவையற்ற விதமாக உணர்ச்சிவசப்பட்டவராகவும், தானாக மோத சென்றவராகவும் தெரிந்தது. அவருடன் வந்த சிலர் அவரது நடவடிக்கைகளை தொடர்ந்து வீடியோ எடுத்துக் கொண்டிருந்தனர்.

பின்னர் தாமதமாக வியாழேந்திரனும், அருண் தம்பிமுத்துவும் வந்தார்கள். அவர்களை இதில் தலையிட வேண்டாம் என்றோம். அவர்கள் திரும்பி சென்று விட்டார்கள்.

6ஆம் திகதி ஆலயத்தின் பிரமுகர்கள் 12 பேருக்கு எதிராக வெல்லாவெளி பொலிசாரால், களுவாஞ்சிக்குடி நீதிமன்றத்தில், இந்த விவகாரத்தில் தலையிட கூடாதென தடையுத்தரவு பெறப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி, தனக்கும் இந்த சம்பவத்திற்கும் தொடர்பில்லையென்றார். பௌத்த மதத்தின் புராதன சின்னங்கள் இருந்தால் அதை எப்படி அணுக வேண்டுமென்பது  துறவிகளிற்கு தெரியும். இப்படியான போலி நடவடிக்கைகளை யாருமே அனுமதிக்க முடியாது. சர்ச்சையை கேள்விப்பட்டுபக்கத்திலுள்ள சின்னவத்தை விகாராதிபதியை தொடர்பு கொண்டு வினவினேன். அவருக்கும் விடயம் தெரியவில்லை. அதனால் என்ன நடக்கிறதென்பதை அறிவதற்காக அங்கு சென்றேன். அங்கு சென்ற உடனேயே, அது புதையல் தோண்டுபவர்களின் போலி நாடகமோ என்ற சந்தேகம் ஏற்பட்டது. ஆயினும் பொலிசார் தலையிட்டதால் நான் அதில் தலையிடவில்லையென்றார்.

அது ஒரு போலி நடவடிக்கையாக இருக்கலாமென அந்த பகுதி மக்களிடம் தற்போது அப்பிராயம் ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here