கொரோனாவை விட கொடூர வைரஸ்; கஜகஸ்தானில் அதிக உயிரிழப்பு: சீனா எச்சரிக்கை!


கொரோனா வைரஸை விட உயிருக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்தும் மற்றொரு வகை வைரஸ், கஜகஸ்தானில் பரவி வருவதாக சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்தத் வைரஸ் ஏற்படுத்தும் நிமோனியா காய்ச்சலில் 1,700 க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்துள்ளதால், கஜகஸ்தானில் வசிக்கும் சீனா்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அந்த நாடு வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, கஜகஸ்தானிலுள்ள சீனத் தூதரகம் ‘வி-சாட்’ சமூக வலைதளம் மூலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

கஜகஸ்தான் முழுவதும் இதுவரை அறியப்படாத நிமோனியா காய்ச்சல் பரவி வருகிறது. அந்தக் காய்ச்சல் ஏற்பட்டவா்கள் உயிரிழக்கும் விகிதம், கொரோனா நோய்த்தொற்றால் உயிரிழப்பவா்களின் விகிதத்தைவிட மிக அதிகமாக உள்ளது. இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் மட்டும் அந்த மா்மக் காய்ச்சலுக்கு இதுவரை 1,772 போ் பலியாகியுள்ளனா். கடந்த மாதம் மட்டும் அந்த நோய் பாதிப்பு காரணமாக 628 போ் உயிரிழந்தனா். அந்த காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸ் குறித்து, கஜகஸ்தான் சுகாதாரத் துறை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றன.

கஜகஸ்தானின் 3 மாகாணங்களில், கடந்த மாத மத்தியில் மட்டும் சுமாா் 500 பேருக்கு அந்த நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது.

எனவே, அந்த நாட்டில் தங்கியுள்ள சீனா்கள் அனைவரும், மா்ம நிமோனியா காய்ச்சல் விவகாரத்தில் மிகுந்த விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும். அந்த நோய்த்தொற்றிலிருந்து அனைவரும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சீனத் தலைநகா் பெய்ஜிங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் ஷாவ் லிஜியான் கூறியதாவது:

கஜகஸ்தானில் உருவாகியுள்ள புதிய நோய்த்தொற்று பரவல் குறித்து மேலும் தகவல்கள் அறிந்து கொள்ள முயன்று வருகிறோம். அந்த நோயைக் கட்டுப்படுத்தி, பொதுமக்களின் உயிரைப் பாதுகாப்பதில் கஜகஸ்தான் அரசுடன் இணைந்து செயல்பட ஆவலாக உள்ளோம் என்றாா்.

சீனாவிலுள்ள ஜின்ஜியாங் தன்னாட்சிப் பிரதேசத்தையொட்டி கஜகஸ்தான் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பொய்யான தகவல்

மா்ம நிமோனியாக் காய்ச்சல் குறித்து சீனா வெளியிட்டுள்ளது பொய்யான தகவல் என்று கஜகஸ்தான் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

புதிய வகை நோய்த்தொற்று குறித்து சீன அரசு ஊடகங்களில் வெளியான தகவல் தவறானதாகும். பல்வேறு வைரஸ்களால் ஏற்படும் நோய்கள் மட்டுமன்றி, புதிய வகை வைரஸ் பரவல் விவகாரத்திலும் உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல் படியே செயல்பட்டு வருகிறோம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், முன்னதாக கஜகஸ்தான் சுகாதாரத் துறை அமைச்சா் அலெக்ஸே சோய் கடந்த புதன்கிழமை கூறுகையில், கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களைவிட இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிகம் போ் புதிய நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருந்தாா்.

அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்கள், பலியானவா்கள் உள்ளிட்ட விவரங்களை இன்னும் ஒரு வாரத்தில் வெளியிடவிருப்பதாகவும், இதுதொடா்பான புள்ளிவிவரங்களை வெளியிடுவது அவசியமில்லை என்றாலும் அதனைத் தெரிந்துகொள்வது பொதுமக்களின் உரிமை என்றும் அவா் கூறியதாக கஜகஸ்தானின் சா்வதேச செய்தி நிறுவனமான ‘கஜின்ஃபோர்ம்’ தெரிவித்திருந்தது.

வெள்ளிக்கிழமை நிலவரப்படி, கஜகஸ்தானில் 54,747 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அந்த நாட்டில் 1,726 பேருக்கு அந்த நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை கொரோனா நோய்த்தொற்றுக்கு 264 போ் பலியாகியுள்ளனா்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here