இருபாலையில் அரச முன்பள்ளிக்கான வேலைகளை பிரதேசசபை ஆரம்பித்தது

பிரதேச சபை நிதியில் அரச முன்பள்ளி அமைப்பதற்கான வேலைகளை இருபாலையில் வலிகாமம் கிழக்கு பிரதேச சபை ஆரம்பித்து வைத்துள்ளது.

கடந்த வாரம் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில் உறுப்பினர்கள், உத்தியோகத்தர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு சம்பிரதாய பூர்வமாக வேலைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இது குறித்து வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் கருத்துத் தெரிவிக்கையில், கொரோனாத் தொற்று எச்சரிக்கை காணப்படுவதனால் வரையறுக்கப்பட்ட நபர்களுடன் அமைதியான முறையில் வேலைகளை ஆரம்பித்துள்ளோம்.

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் கோப்பாய உப அலுவலகத்திற்கு உட்பட்ட பிரதேசத்தில் அரச முன்பள்ளி ஒன்றை நிறுவும் முயற்சியாக இச் செயற்றிட்டத்தினை 4.15 மில்லியன் ரூபா மதிப்பீட்டில் நாம் முன்னெடுத்துள்ளோம். ஏற்கனவே பிரதேச சபைக்குச் சொந்தமாகக் காணப்பட்ட தண்ணீர்த்தாங்கி அமையப்பெற்றுள்ள எஞ்சிய வளாகத்திலேயே இம் முன்பள்ளி அமைக்கப்படுகின்றது. இவ்வேலைகள் மூன்றுமாத கால ஒப்பந்தத்தில் கேள்விக்கோரல் வழங்கப்பட்டுள்ளன.

வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்கு உட்பட்டு ஏற்கனவே அச்சுவேலி உப அலுவலகத்தின் கீழ் கஜமுகன் முன்பள்ளியும் புத்தூர் உப அலுவலகத்தின் கீழ் அரிச்சுவடி முன்பள்ளியும் இயங்கிவருகின்றன. எமது பிரதேச சபை ஐந்து உப அலுவலகங்களைக் கொண்டுள்ள நிலையில் காலக்கிரமத்தில் நீர்வேலி, உரும்பிராய் உப அலுவலகங்களின் கீழும் அரச முன்பள்ளிகளை ஆரம்பிக்கும் எண்ணமும் தேவையும் எம்மிடம் காணப்படுகின்றன.

பிரதேச சபையின் முன்பள்ளிகளில் எமது சபைக்கு ஒதுக்கப்பட்ட முன்பள்ளி ஆசிரிய ஆளணியின் பிரகாரம் அண்மையில் வடக்கு மாகாண சபையினால் நியமனம் பெற்ற ஆசிரியர் குழாம் சேவையாற்றி வருகின்றது. மேலும் இங்கு கல்வி பெறும் குழந்தைகளுக்கு இதர போசாக்கு மற்றும் நலன்நோன்பு விடயங்கள் மீதும் எமது சபை அதிக கரிசனை கொள்கின்றது.

  • எமது சபைக்குட்பட்ட முன்பள்ளிகளில் அரிச்சுவடி முன்பள்ளியை நவீன வசதிகளுடன் அண்மைய காலப்பகுதியிலேயே திறந்து வைத்தோம். இதேவேளை அச்சுவேலி கஜமுகன் முன்பள்ளியில் வசதி வாய்ப்புக்களை ஏற்படுத்த வேண்டிய தேவையுள்ளது. அதற்கான வேலைகளும் விரைவில் ஆரம்பிக்கப்படும். இலங்கை போன்ற நாடுகளில் முன்பள்ளிக் கல்வியின் முக்கியத்துவம் உரியவாறு கண்டுகொள்ளப்படுவதில்லை. இந் நிலையில் எமது பிரதேச சபை முன்பள்ளி மற்றும் சிறார்களின் நலன்நோன்பு விடயத்தில் அதீத கவனம் கொள்ள விரும்புகின்றது என வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here