மலையக மாற்றத்தில் ஆசிரியர்களின் பங்களிப்பு அத்தியாவசியமானது: அனுஷா சந்திரசேகரன்

மலையகத்தில் மாற்றம் என்பதை வெறுமனே ஒருவர் பேசிக்கொண்டிருக்கும் வார்த்தையாக இல்லாமல் செயற்பாடாக உருவாக்க வேண்டும் என்றால் அதற்கு ஆசிரியர்களின் பங்களிப்பு மிக அத்தியாவசியமானது என நுவரெலியா மாவட்ட சுயேட்சை குழு ஒன்று கோடரி சின்னத்தில் போட்டியிடும் மலையக மக்கள் முன்னணியின் பிரதி செயலாளர் நாயகம் அனுஷா சந்திரசேகரன் தெரிவித்தார்.

டயகம, உருளவள்ளி பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போது கருத்து தெரிவித்த அவர்,

இம்முறை பொதுத்தேர்தலில் நான் கோடரி சின்னத்தில், இலக்கம் 04ல் போட்டியிடுகிறேன். எனது தந்தை அமரர் சந்திரசேகரனது காலத்தில் வீருகொண்டு எழுந்து ஏனைய சமூகங்களுக்கு சரிநிகர் சமமாக இருந்த எம் சமூகம் அவரது மறைவுக்கு பின் மீண்டும் பின்னோக்கி நகர்வதை எம்மால் உணர்ந்துகொள்ள கூடியதாக இருக்கிறது. ஒரு தலைமைத்துவ வெற்றிடம் ஏற்பட்டிருப்பதையும் அதற்கான சரியானதொரு தெரிவு இல்லாத நிலையும் ஏற்பட்டிருப்பதை நான் உணர்கிறேன்.

பாரம்பரிய சலுகை அரசியல் கலாசாரத்திலிருந்து விடுபட்டு எம் உரிமை எம் முன்னேற்றம் என்பதை பற்றி ஒவ்வொரு தனிமனிதனும் சிந்திக்கக்கூடிய ஆற்றலை வளர்த்து தனித்துவமாக செயற்படக்கூடிய நிலையை உருவாக்குவதன் மூலமே எம் சமூகத்தின் மாற்றம் என்ற விதையை விதைக்கலாம்.

இந்த சமூகத்தின் கல்வி மாற்றத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் உங்களை போன்ற ஆசிரியர்களின் ஒத்துழைப்புடனேயே எம் சமூகத்தின் அரசியல் மாற்றத்தையும் ஏற்படுத்த வேண்டும் என்பது எனது எண்ணப்பாடாகும். ஆகவே இம்முறை பொதுத்தேர்தலிலும் எதிர்வரும் தபால் மூல வாக்களிப்பிலும் கல்விசார் சமூகமாக உங்கள் அனைவரது ஆதரவுடனும் எமது கோடரி சின்னத்தின் வெற்றியை உறுதிப்படுத்துவீர்கள் என நம்புகிறேன் என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here