நம்பி ஏமாந்ததை தந்தை செல்வா பகிரங்கமாக சொன்னார்; இன்றும் அதுதான் நிலை, ஆனால் நாங்கள் வெளியில் சொல்லவில்லை: சீ.வீ.கே!

தமிழ் மக்களின் அரசியல் தீர்வு இந்தியாவின் ஆதரவுடன் தான் பெற்றுக் கொள்ளலாம் என வடக்கு மாகாண அவைத் தலைவரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மூத்த துணைத் தலைவருமான சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

சிங்கள அரசுகள் அரசியல் தீர்வு ஒன்றை முன் வைப்பதாக பாசாங்கு செய்வார்கள் என்பதுதான் கடந்த 5 வருட கால அனுபவம். அதற்கு முன்னரும் சொன்னார்கள்தான். கடைசியாக கொஞ்சம் படிமுறைக்கு மேலாக வந்தது. அதை நாங்கள் ஒத்துக் கொள்ள வேண்டும்.

மொழி சம்பந்தமாக இன்றைக்கு சிங்களம் மட்டும் சட்டமில்லை. தமிழும் சிங்களமும் தேசிய மொழிகள் என்று வந்துவிட்டதுதானே உத்தியோகபூர்வ மொழி என்று வந்துவிட்டதுதானே. மாற்றம் நடைபெற்றதுதானே அதேபோல் 78 ஆம் ஆண்டு அரசியலமைப்பிலே பௌத்தத்திற்கு முன்னுரிமை என்ற வசனம் இருக்கிறது. இன்றும் அதுதான் இருக்கிறது. ஆனால் முக்கியமான விடயம் நடந்தது. இந்த முன்மொழிவிலே என்ன நடந்தது என்றால் ஏனைய மதங்களுடைய உரிமை இப்பொழுது இந்த மதங்கள் என்ற ஏற்பாட்டுக்குள்ளே உள்ளடக்கப்பட்டுள்ளது. இப்பொழுது அது அடிப்படை உரிமைகளுக்குள் கொண்டு போய் செருகப்பட்டுள்ளது.

ஆனால் எங்களில் சிலர் இது ஒரு மதசார்பற்ற நாடுஎன்கின்றார்கள். இது எல்லாம் அர்த்தமில்லாமல் யதார்த்தமில்லாமல் நாங்கள் கதைப்பது. இந்தியா மதசார்பு இல்லாத நாடாக இருக்கிறது. ஆனால் பாரதீய ஜனாதாக் கட்சி ஆட்சிக்கு வந்த பின்னர் அங்கு அப்படி நடக்கிறதா? இல்லை. நடைமுறை அப்படி. 74 வீதமான பெளத்தர்கள் மதசார்பற்ற நாடாக இந்த நாட்டை மாற்ற முடியாது என்று மறுக்கின்றார்கள். எங்களுடைய மதங்களுக்கான ஏற்பாட்டை மதங்களுக்குள் கொண்டு வந்தது முன்னேற்றம். ஆனால் அது திருப்தி இல்லை. இது மதசார்பற்றதல்ல. இதைக் கேட்கிறவர்களுக்கு நான் பொதுவாகச் சொல்கிறேன். தனிய ஒரு மதத்திற்குச் சொல்லவில்லை. இப்ப இருக்கிற நிலையிலே நாங்கள் மிகக் கவனமாக கையாளவேண்டும். நாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்பது உண்மைதான். இதை நாங்கள் ஏற்றுக் கொள்ளத்தான் வேணும். இதுதான் யதார்த்தம்.

தந்தை செல்வா அவர்களையே ஏமாற்றியவர்கள் என்பது என்னுடைய கருத்து. இது புதியவர்களுக்குத் தெரியாது. 1965 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் டட்லி சேனநாயக்காவுடன் உடன்படிக்கை செய்து திருச்செல்வம் அவர்களை அமைச்சராக்கினார்கள். பின்னர் 1968 இல் பதவி விலகி யாழ்ப்பாணம் வந்தனர். முதலில் என்னுடைய ஊரான கல்வியங்காட்டில் முதலாவது பொதுக் கூட்டம் நடந்தது. அப்பொழுது மக்கள் மத்தியில் சரியான கொந்தளிப்பு நிலை காணப்பட்டது. தந்தை செல்வநாயகம் பேச எழும்பினார் அவர் பெரிதாக ஒன்றும் பேசவில்லை. நாங்கள் அவர்களை நம்பினோம். ஏமாற்றி விட்டார்கள். ஏமாந்து போனோம் இவ்வளவுதான் சொன்னார். அந்த சபையில் ஒரு சலனம், சத்தம் இல்லை. அமைதியாக இருந்தது. தந்தை அவ்வளவுதான் சொன்னார். ஏன் நான் இது சொல்கிறேன் என்றால் அவர் உண்மையைச் சொன்னார். நம்பின நாங்கள் ஏமாற்றிவிட்டார்கள் ஏமாந்து போனோம். இன்றைக்கும் இது இருக்கிறது. இது ஒரு வரலாறாக நடைபெறுகின்றது.

இதை நாங்கள் என்னவென்று ஒளிக்கிறது. அது உண்மை. ஆனால் இதையே மீளச் செய்யாமல் இனிமேல் நெடுக நாங்கள் சர்வதேசம் சர்வதேசம் என்று சொல்கிறார்கள். சர்வதேசத்தையும் குறிப்பாக இந்தியாவையும் இணைத்து, இந்தியா இதில் கொண்டிருக்கிற தெளிவான வகிபாகத்தை பலப்படுத்தி செயற்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. இந்தியா – இலங்கை ஒப்பந்தத்தை அதை உறுதிப்படுத்தியது. இந்திய அரசாங்கம் ஒரு அன்டரைட்டர். அந்த ஒப்பந்தத்திலே இருக்கிறது. இந்தியாவுக்கு பொறுப்பு இருக்கிறது.

அதை நாங்கள் வலியுறுத்த வேண்டிய தேவை இருக்கிறது. அதன் ஊடாக சுமுகமான சூழலை இந்தியா மூலம் ஏற்படுத்த வேண்டும். நாங்கள் பலமாக நின்று கொண்டு இந்தியாவையும் கேட்லாம். நீங்கள் பிரிந்து பிரிந்து ஒற்றை, இரட்டை பிடித்துக் கொண்டு நின்றால் இந்தியாவும் அதில் வர வாய்ப்பு இல்லை. இதில் இந்தியாவை குறை சொல்லக்கூடாது. நாங்கள் பலமாக நின்றுகொண்டு மக்கள் எங்களை தெரிவு செய்வார்களோயானால் இந்தியாவைக் கூட வலுவாக நாங்கள் கேட்கலாம், நாங்கள் பலமாக நிற்கிறோம். நீங்கள் எங்கள் பிரச்சினையில் தலையிடுங்கள் என்று கேட்கலாம். சர்வதேசத்தைக் கேட்கலாம். அதன் மூலம் நாங்கள் தீர்வைப் பெற்றுக் கொள்ளலாம். ஆனால் எந்த விடயமாக இருந்தாலும் இறுதி முடிவு இந்நாட்டிலே இருக்கின்ற, பதவியில் இருக்கின்ற அரசாங்கம்தான் செய்ய வேண்டும். அதை எதிர்க்கட்சிகளும் ஆதரிக்கக்கூடிய நிலையை உருவாக்க வேண்டும். அது சர்வதேசத்தாலேதான் முடியும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here