உய்குர் முஸ்லிம்கள் மீது மனித உரிமை மீறல்; சீனாவின் 3 முக்கிய புள்ளிகளுக்கு தடை: அமெரிக்கா அதிரடி

சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் உள்ள சிறுபான்மையினரான உய்குர் முஸ்லிம்கள், கலாக்கஸ் பிரிவு மக்களுக்கு எதிராக மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட சீனாவின் ஆளும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 3 மூத்த அதிகாரிகள், அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த 3 சீன அரசு அதிகாரிகள் மட்டுல்லாது அவர்களின் குடும்பத்தினர், அவர்களைச் சார்ந்தோர் யாரும் அமெரிக்காவுக்குள் நுழைய தடைவிதிக்கப்படுவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பொம்பியோ அறிவித்துள்ளார்.

இதன்படி ஜின்ஜியாங் மாகாணத்தின் உய்குர் சுயாட்சிப் பகுதியில் உள்ள சீன கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் சென் குவாங்குவோ, ஜின்ஜியாங் மாகாணத்தில் அரசியல் மற்றும் சட்டக் குழுவின் செயலாளர் ஹூ ஹெய்லன், ஜின்ஜியாங் பொது பாதுகாப்புக்குழுவின் செயலாளர் வாங் மிங்ஷான் ஆகியோர் அமெரிக்காவுக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென் குவாங்குவோ சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சக்தி வாய்ந்த மத்தியகுழு உறுப்பினராவார்.

ஜின்ஜியாங் மாகாணத்தில் உய்குர் முஸ்லிம்கள் உள்ளிட்ட பல்வேறு சிறுபான்மை மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் மீது சீன அதிகாரிகள் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவது, கட்டாயப்படுத்தி சிறையில் அடைப்பது, தீவிரவாத குற்றங்கள் சுமத்துவது போன்ற கொடூரச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் உய்குர் முஸ்லிம் மக்களின் மக்கள் தொகையைக் குறைக்கும் வகையில் அங்குள்ள பெண்களுக்கு கட்டாயக கருக்கலைப்பு, கட்டாயக் கருத்தடை செய்வது, ஆண்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு செய்வது, 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் கடும் அபராதம், அல்லது சிறைவாசம் போன்ற கொடூர நடவடிக்கையில் சீனா ஈடுபட்டு வருகிறது.

இது உலகளவில் பெரும் கவனத்தை ஈர்த்து மேற்கத்திய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இது தொடர்பாக ஐ.நா.விலும் உய்குர் முஸ்லிம்கள் மீது மனித உரிமை மீறல் குறித்து விவாதிக்கப்பட்டது

இந்த சூழலில் ஜின்ஜியாங் மாகாணத்தின் சீன அதிகாரிகள் 3 பேருக்கு தடை விதித்து அமெரி்க்கா நேற்று உத்தரவிட்டுள்ளது.

ஜின்ஜியாங்கில் தீவிரவாதத்தை எதிர்த்து போராடுகிறோம் என்ற பெயரில் தொழில் திறன் பயிற்சி மையங்கள், மறு கல்வி முகாம்கள் என்ற பெயரில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான உய்குர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஐ.நா மதிப்பிடுகிறது.

இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பொம்பியோ வெளியிட்ட அறிவிப்பில் “சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் நடக்கும் மனித உரிமை மீறல்கள், மக்கள் மீது இழைக்கப்படும் கொடுமைகளுக்கு எதிராக அமெரிக்கா இன்று நடவடிக்கை எடுத்துள்ளது. சீன கம்யூனிஸ்ட் கட்சி அரசின் மூன்று முக்கிய அதிகாரிகள், அவர்களின் குடும்பத்தினர் அமெரிக்காவுக்குள் நுழைய தடைவிதிக்கப்பட்டுள்ளது.

ஜின்ஜியாங் மாகாணத்தின் உய்குர் சுயாட்சிப் பகுதியில் உள்ள சீன கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் சென் குவாங்குவோ, ஜின்ஜியாங் மாகாணத்தில் அரசியல் மற்றும் சட்டக் குழுவின் செயலாளர் ஹூ ஹெய்லன், ஜின்ஜியாங் பொது பாதுகாப்புக்குழுவின் செயலாளர் வாங் மிங்ஷான் ஆகியோர் அமெரிக்காவுக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதில் சென் குவாங்கோ திபெத்திய பகுதி மக்கள் மீது அத்துமீறி நடந்து, மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளார். கொடூரமான செயல்களையும், கொள்கைகளையும் சீன அரசு சிறுபான்மைகள் மீது பயன்படுத்துகிறது.

அனைத்து நாடுகளும் சீன கம்யூனிஸ்ட் கட்சி அரசு மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவது தொடர்பாக தங்கள் கவலைகளைத் தெரிவித்து கண்டிக்க வேண்டும். மனித உரிமைகளையும், அடிப்படை உரிமைகளையும் பாதுக்காக குரல் கொடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here