ஐவரி கோஸ்ட் பிரதமர் காலமானார்!

ஐவரி கோஸ்ட் நாட்டின் பிரதமர் அமடோ கோன் கூலிபாலி (61) காலமானார்.

நேற்று முன்தினம் அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தபோது திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு, வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவர் கடந்த 2012ஆம் ஆண்டு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இந்த நிலையில் அவர் பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் சென்று 2 மாதங்கள் சிகிச்சை செய்து கொண்டு சமீபத்தில் நாடு திரும்பினார்.

ஒக்டோபர் மாதம் அந்த நாட்டில் நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் ஆளும் கட்சியின் வேட்பாளராக அமடோ போட்டியிட இருந்தார். இந்த நிலையில் அவர் திடீரென மரணம் அடைந்திருப்பது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரதமர் அமடோவின் மறைவுக்கு ஜனாதிபதி ஒட்டாரா ஆழ்ந்த அனுதாபம் தெரிவித்துள்ளார்.

இதையொட்டி அவர் விடுத்துள்ள செய்தியில், “30 ஆண்டு காலம் எனது நெருங்கிய கூட்டாளியாக இருந்ததுடன் எனது தம்பியாகவும், மகனாகவும் விளங்கிய அமடோவுக்கு மரியாதை செலுத்துகிறேன். தாய்நாட்டின் மீது மிகுந்த விசுவாசம், பக்தி மற்றும் அன்பு கொண்ட ஒரு அரசியல் தலைவரின் நினைவுக்கு நான் வணக்கம் செலுத்துகிறேன்” என கூறி உள்ளார்.

கடந்த வாரம் பாரீஸ் நகரில் சிகிச்சை முடித்துக்கொண்டு அபித்ஜான் விமான நிலையம் வந்திறங்கியபோது, “ஜனாதிபதியுடன் சேர்ந்து நமது நாட்டை முன்னேற்றுவதற்காகவும், கட்டியெழுப்புவதற்காகவும் என் பணியைத் தொடர்வதற்காக நான் திரும்பி வந்துள்ளேன்” என உற்சாகமாக கூறிய பிரதமர் அமடோ ஒரு வார காலத்துக்குள் மரணம் அடைந்திருப்பது அந்த நாட்டு மக்களை மீளாத்துயரில் ஆழ்த்தி உள்ளது.

ஐவரிகோஸ்டில் உள்நாட்டு குழப்பங்களின் மத்தியில் ஜனாதிபதி தேர்தல் பெரும் எதிர்பார்பை பெற்றிருந்தது. அமடோவின் மரணம் அரசியல் நிச்சயமற்ற தன்மையை உருவாக்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here