கனடாவில் தமிழ் பெண் கொலையின் மர்மம் துலங்கியது: கணவன் கைது!

கனடாவில் இளம் தமிழ் பெண் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் நிலவிய மர்மம் நான்கு மாதங்களின் பின்னர் துலங்கியுள்ளது. அந்த பெண்ணின் கணவன் உள்ளிட்ட மூவரை ரொறோண்டோ பொலிசார் கைது செய்துள்ளனர்.

ஸ்காபரோ பிறிம்லி வீதி, பிற்ஃபீல்ட் வீதி சந்திப்பில் கடந்த மார்ச் மாதம் 13 ம் திகதி இந்த கொலைச்சம்பவம் நடந்தது. யாழ்ப்பாணம், வடமராட்சி, கொற்றாவத்தையை சேர்ந்த தீபா சீவரத்தினம் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.

அன்று காலை 9:55 மணியளவில் வீடொன்றிலிருந்து வந்த அவசர அழைப்பையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிசார் துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் இரண்டு பெண்களை மீட்டனர். அவர்களை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்ற போது அவர்களில் ஒருவர் இறந்துபோயிருந்தார். மற்றவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டிருந்தார்.

தீபா சீவரத்தினம் (38) என்பவரே உயிரிழந்தார். அவரது தாயார் படுகாயமடைந்திருந்தார்.

கொலை தொடர்பாக மார்ச் மாதம் 30ம் திகதி ஸ்ரெட்லி கேர் என்பவர் கைது செய்யப்பட்டதாக ரொறோண்டோ பொலிஸ் அறிவித்திருந்தது. அவர் மீது இரண்டாம் நிலைக் கொலைக் குற்றமும், கொலை முயற்சிக்கான குற்றமும் பதியப்பட்டிருந்தன.

இக் கொலை தொடர்பாக நேற்று முன்தினம் (7) மேலும் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனரென பொலிசார் தெரிவித்துள்ளனர். கைதானவர்கள் ஓஷாவா நகரைச் சேர்ந்த கெரி சாமுவேல்ஸ் (27) மற்றும் ரொறோண்டோவைச் சேர்ந்த விஜேந்திரன் பாலசுப்ரமணியம் (42) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களுள் விஜேந்திரன், கொலைசெய்யப்பட்ட தீபாவின் கணவராவார்.

இவர்கள் இருவர் மீதும் முதலாம் நிலைக் கொலைக் குற்றமும், கொலை செய்வதற்குச் சூழ்ச்சி செய்ததற்கான குற்றமும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர்களில் சாமுவேல்ஸ், செவ்வாயன்று 1911 எக்லின்ரன் அவனியூ (கிழக்கு) இல் அமைந்துள்ள நீதிமன்றத்தில் முன்னிலையானார். விஜேந்திரன் நேற்று புதன்கிழமை அதே நீதிமன்றத்தில் தொலையூடகத் தொடர்பாடல் மூலம் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

மூன்றாமவரான கேர், எதிர்வரும் ஜூலை 23, வியாழனன்று இதே நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார் எனவும் அப்போது அவர் மீதான குற்றச்சாட்டுகள் முதலாம் நிலைக் கொலை, கொலை செய்வதற்குத் திட்டம் தீட்டியமை, கொலை முயற்சி ஆகியவற்றுக்குத் தரமுயர்த்தப்படுமெனவும் ரொறோண்டோ பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here