41அமெரிக்க ஜனாதிபதிகள் விரும்பியணிந்த ஆடை நிறுவனத்தின் சோகம்; உலகப்புகழ்பெற்ற brooks brothers கொரோனாவினால் திவாலானது!

உலகம் முழுவதும் 70 க்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்டு அமெரிக்காவில் 200 ஆண்டுகளாகச் செயல்படும் புரூக்ஸ் பிரதர்ஸ் ஆடை நிறுவனம், கொரோனாவால் தொழிலை நடத்த முடியாமல் திவாலாவதிலிருந்து தடுக்கக் கோரி நோட்டீஸ் அளித்துள்ளது.

அமெரிக்காவின் 45 ஜனாதிபதிகளில் 41 ஜனாதிபதிகள் புரூக்ஸ் பிரதர்ஸ் நிறுவனத்தின் ஆடைகளைத்தான் விரும்பி அணிந்துள்ளனர். மிகவும் பாரம்பரிய நிறுவனம், நேர்த்தியான வடிவமைப்பு, இந்த ஆடைகளை அணிந்தால் பெருமை, கௌரவம் என்பதால் இதை விரும்பி அணிந்தனர்.

இதுபோன்ற பாரம்பரியம் கொண்ட பெருமைகளைச் சுமந்து 200 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தப்பட்ட புரூக்ஸ் பிரதரஸ் நிறுவனம் கொரோனாவால் ஏற்பட்ட தொழில் முடக்கத்தால் பல நாடுகளில் கிளைகளை மூடத் தொடங்கி, தற்போது திவால் நிலையில் இருந்து காக்கக் கோரி நோட்டீஸ் அளித்துள்ளது.

நியூயோர்க் நகரின் மன்ஹாட்டனில் மாடிஸன் அவென்யூ பகுதியில் கடந்த 1818ஆம் ஆண்டு புரூக்ஸ் பிரதர்ஸின் ஆண்களுக்கான ஆடை நிறுவனம் தொடங்கப்பட்டது. இத்தாலியைச் சேர்ந்த கோடீஸ்வரர் கிளாடியோ டெல் வெச்சியோ என்பவரால் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது.

ஆண்களுக்கான ஆயத்த ஆடைகளை மட்டும் தயாரித்த புரூக்ஸ் பிரதர்ஸ் நிறுவனம் காலப்போக்கில் ஜவுளித்துறையிலும், பெண்களுக்கான ஆடை தயாரிப்பிலும் இறங்கியது. தற்போது புரூக்ஸ் பிரதர்ஸ் நிறுவனத்துக்கு அமெரிக்காவில் மட்டும் 210 கிளைகள் உள்ளன. 70 நாடுகளில் கிளைகளைப் பரப்பி வர்த்தகம் செய்து வருகிறது.

உலக அளவில் உள்ள முக்கிய விஐபிக்கள், கோடீஸ்வரர்கள் எனப் பலரும் விரும்பி அணியும் ஆடையாக புரூக்ஸ் பிரதர்ஸ் ஆடை இருந்து வந்தது. அமெரிக்காவின் ஜனாதிபதிகளில் 45 பேரில் 41 பேர் புரூக்ஸ் பிரதர்ஸ் ஆடைகளைத்தான் அணிந்துள்ளனர்.

ஆபிரஹாம் லிங்கன், ஹெர்பெர்ட் ஹோவர், செஸ்டர் ஆர்த்தர், ரூஸ்வெல்ட், கெனடி, நிக்ஸன், கிளிண்டன், ஜோர்ஜ் டபிள்யு புஷ், ஜோர்ஜ் புஷ், ஒபாமா எனப் பலரும் இந்த ஆடைகளைத்தான் அணிந்துள்ளனர்.

ஆனால், உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் லொக்டவுனைச் சந்தித்த புரூக்ஸ் பிரதர்ஸ் நிறுவனம் வர்த்தகத்தை இழந்து, பெரும் இழப்பைச் சந்தித்துள்ளது. ஏராளமான கடைகள் வர்த்தகம் இன்றி மூடப்பட்டுள்ளன. ஏறக்குறைய 200 கடைகளை புரூக்ஸ் நிறுவனம் நிரந்தரமாக மூடிவிட்டது.

nகாரோனா வைரஸ் லொக்டவுனால் உண்டான பொருளாதார அழுத்தம், சிக்கல் ஆகியவற்றைத் தாங்க முடியாமல் வேறு வழியின்றி திவாலாவதைத் தடுக்கும் வகையில் 11ஆம் பிரிவில் புரூக்ஸ் பிரதர்ஸ் நிறுவனம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.

இதுகுறித்து திவால் நோட்டீஸ் சட்டத்தரணி ஜோனத்தன் பாஸ்டர்நாக் கூறுகையில், “கொரோனா வைரஸுக்கு முன்பு தங்கள் கடைகளை விரிவாக்கம் செய்ய புரூக்ஸ் பிரதர்ஸ் நிறுவனம் திட்டமிட்டிருந்தது. அமெரிக்காவில் ஆடைகளைத் தயாரிப்பதில் அதிகம் செலவாகும் என்பதால் மற்ற நாடுகளில் கிளைகளைத் திறக்க இருந்தது. ஆனால், அந்த நிறுவனம் இப்போது திவால் நோட்டீஸ் அளித்திருப்பது வியப்பாக இருக்கிறது. நம்பமுடியவில்லை” எனத் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு நியூயோர்க்கில் ரிவால் பேர்னிஸ் நிறுவனம் திவால் நோட்டீஸ் அளித்தது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்குப் பின், அமெரிக்காவின் புகழ்பெற்ற சில்லறை வர்த்தக நிறுவனங்களான ஜெ.க்ரியூ, நீமான் மார்கஸ், ஜெ.சி.பென்னி ஆகியவை திவால் நோட்டீஸ் அளித்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here