பௌத்த தேரர்களிற்கே முதலில் வரலாற்றை கற்றுக்கொடுக்க வேண்டும்!

கொரோனாவைக் கட்டுப்படுத்த தமிழர் தேசத்தில் கனரக ஆயுதங்களை பொருத்திய நாடுதான் இலங்கை எனத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட வேட்பாளருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். உதயநகர் கிழக்கு மக்களுடனான சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு கிழக்கிலே தமிழர்கள் பூர்வீகக் குடிகள் அண்மையில் ஒரு தேரர் அவர்கள் கூறியிருக்கிறார். திருகோணேஸ்வரர் ஆலயத்தின் வரலாறுகள் பற்றி கூறியிருக்கிறார். இந்த நாட்டில் வசிக்கும் சிங்கள மக்களுக்கும் சிங்கள அரசியல் தலைவர்களுக்கும் சிங்கள பௌத்த தேரர்களுக்கும் இலங்கையின் வரலாற்றினை முதலில் கற்றுக் கொடுக்க வேண்டும்.

இலங்கையின் பூர்வீகக் குடிகள் தமிழர்களே. இதற்கான ஆதாரங்கள் நிறையவே இருக்கிறது. ஆனால் இலங்கை அரசு தனது இராணுவ பலத்தோடு இந்த நாட்டினுடைய வரலாறுகளை மாற்றத் துடிக்கிறது. தமிழர்களின் தேசம் எங்கும் இராணுவ சோதனைச்சாவடிகள் புதிதாக தோன்றியிருக்கிறது. இராணுவ மயமாக்கல் மூலம் தமிழர்களை முடக்க நினைக்கிறார் 40 ஆண்டு கால இராணுவ சிந்தனையோடு இருக்கிற ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச.

இந்த நாட்டின் பல நிர்வாகத்துறைகளிற்கு தலைவர்களாக முன்னாள் இராணுவத் தளபதிகள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இவற்றின் மூலம் தமிழர்கள் இராணுவ ஆட்சிக்குள் முடக்கப்படப்போகிறது என்பதை கட்டியம் கூறி நிற்கிறது. உலக நாடுகள் கொரோனா என்னும் கொடிய நோயின் காரணமாக உலக நாடுகள் அதிர்ந்து போய் சுகாதாரத் துறைகளை மேம்படுத்த எதிர்ப்பு மருந்துகளைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருக்க இலங்கை அரசு மட்டும் தமிழர் தேசம் எங்கும் இராணுவத்தை குவித்து ஆணையிறவில் கனரக ஆயுதங்களை பொருத்தி கொரோனாவை கட்டுப்படுத்த முயன்றது.

பிரதமர் அண்மையில் கூறியிருக்கிறார் 19 ஆவது திருத்தச் சட்டத்தை நீக்குவது தொடர்பாக கூறியிருக்கிறார். இவ்வாறாக நீக்கப்படுமானால் சுயாதீன ஆணைக்குழுக்கள் இல்லாமல் போகும்.

இவ்வாறாக ஏற்படப்போகும் ஆபத்துக்களை தமிழர்கள் எவ்வாறு எதிர்கொள்ள முடியும் என்றால் தமிழர்கள் ஓரணியில் நின்றால் மாத்திரமே எதிர் கொள்ள முடியும்.

இந்த தேர்தல் வெறுமனே பாராளுமன்ற தேர்தலாக மட்டும் பார்க்காது தமிழர்களின் இருப்புக்கான தேர்தலாக நாம் நோக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here