யாழ் மாநகரசபை உறுப்பினர்களின் சின்னத்தனம்: முதல்வரின் ஆளணியை நிறுத்தியதால் வெளிநடப்பு!

யாழ் மாநகரசபை முதல்வர் இ.ஆனோல்ட்டின் தனிப்பட்ட ஆளணியை நீக்கும் விடயத்தை வாக்கெடுப்பிற்கு விட பிரதி முதல்வர் தீர்மானித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, யாழ் மாநகரசபையில் அங்கம் வகிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

தமது பெயர்களின் முன்பாக கௌரவ என்ற அடைமொழியை பாவிக்கும் இந்த உறுப்பினர்கள், இந்த சின்னத்தனமான நடத்தைக்கு வேறு காரணத்தை கற்பித்தார்கள்.

மாநகரசபை உறுப்பினர் ஒருவரின் தந்தையின் நினைவுநாளை முன்னிட்டு, மாநகரசபை அமர்வு நாளிற்கு ஒரு நாள் முன்னதாக அமர்வு இடம்பெற்றது என குறிப்பிட்டே இன்று அமர்வை புறக்கணித்தனர்.

கடந்த 27.05.2019 அன்று மாநகர சபை உறுப்பினரான தனுஜனின் தந்தை விபத்திலே மரணமானார். சபை அமர்வு நடைபெற்றுக் கொண்டிருந்த அன்றைய நாளில் அவ் துயரமான நிகழ்விற்கு அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

கடந்த மாதம் மாநகர சபை அமர்வின் போது அடுத்த மாநகர அமர்வு 10.07.2020 ஆம் திகதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் சில நாட்களுக்கு பின்னர் தான் குறித்த நாள் அன்றே தன்னுடைய அப்பாவின் 45 ஆவது நாள் வருவதனை தனுஜன் அறிந்து கொண்டார். தன்னுடைய அப்பாவின் இறுதி நிகழ்வில் கலந்து கொண்ட அத்தனை பேரையும் அன்றைய நாளில் அழைக்க வேண்டும் என்பதனால் அவர்கள் அனைவரும் கலந்து கொள்ளும் பொருட்டு கூட்டத்தினை வேறு ஒரு திகதியில் நடத்த முடியுமா என்று சபை செயலாளரிடம் கேட்டிருந்தார்.

சபை செயலாளரும் மனிதாபிமான அடிப்படையில் பதில் முதல்வர் அவர்களுடன் கலந்துரையாடி தபால் மூல வாக்களிப்பு அடுத்த வாரத்தில் நடைபெறவுள்ளதன் காரணமக கூட்டத்தினை அடுத்த வாரத்திற்கு பிற்போட முடியாமையினால் குறித்த அமர்வினை 09.07.2020 அன்று நடாத்துவதற்கு தீர்மானித்திருந்தார். அது தொடர்பான கடிதங்கள் உறுப்பினர்களிற்க 06.07.2020 அன்று கிடைக்கும் விதமாக அனுப்பி வைக்கப்பட்டது.

அக் கடிதத்தின் பிரகாரம் இன்று யாழ்.மாநகர சபை அமர்வுகள் தொடங்கின. கூட்டத்தின் ஆரம்பதில் இக் கூட்டம் சட்டவலுவற்ற கூட்டம் மாநகர கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் நடைபெறவில்லை என்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உறுப்பினார்களால் கூறப்பட்டதுடன் சட்டவலுவற்ற இக் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாது என்று அனைத்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களும் வெளிநடப்புச் செய்தனர்.

இது நடைபெற்ற சம்பவம்.

மாநகர கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் ஒரு கூட்டமானது நான்கு நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்படவேண்டும் என்பது விதி. மூன்று நாட்கள் முன்னறிவித்தலுடன் கூட்டம் கூட்டப்பட்டது மாநகர கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் பிழையானது. ஆனால் அதனைக் காரணம் காட்டி வெளிநடப்பு செய்தது, அசாதாரணமானது. பொருத்தமற்றது.

ஏனெனில் கடந்த இரண்டரை வருடங்களாக சபை கூட்டத்தொடர்களில் பல சட்ட வலுவற்ற விடயங்கள் நடந்திருக்கின்றன. பல மாநகர கட்டளைச் சட்டங்களினை மீறி நடக்கின்ற செயல்கள் நடைபெற்றன. அப்போது எல்லாம் எதிர்க்கட்சிகள் தவறுகளை சுட்டிக் காட்டியபோது மௌனமாக இருந்த இந்த உறுப்பினர்கள் இன்று கூட்டம் குறித்த திகதியை விடுத்து ஒரு நாள் முன்கூட்டியே நடாத்தப்பட்டு விட்டது, இக் கூட்டம் சட்டவலுவற்றது என்று கூறி வெளிநடப்பு செய்துள்ளனர்.

கடந்த காலங்களில் முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் தலைமை தாங்கிய மாநகர சபை அமர்வுகளில் பல சட்ட மீறல்களைச் சுட்டிக் காட்டிய போது, முதல்வர் அவர்கள் ஆம் மீறப்பட்டுள்ளது அதனால் என்ன பிரச்சனை என்ன தீமை என்று வெளிப்படையாக கேட்ட போது, அதைஅமோதித்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் (ஒருவரைத் தவிர) எல்லோரும் இன்று ஒரு சிறு விடயத்திற்கு பொங்கி எழுந்து வெளி நடப்பு செய்தது ஆச்சரியமாக இருந்தது.

கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் முதல்வர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுடன் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அன்றைய தினம் நடைபெற வேண்டிய கூட்டத்தினை வேறு ஒரு திகதிக்கு பிற்போட்டார்.

அத்துடன் ஒரு தடவை முதல்வர் தன்னுடைய தூரத்து உறவினரின் மரண வீட்டில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக கூட்டத்தினை இடை நடுவில் நிறுத்தி விட்டு கலந்து கொள்ள சென்றார். அப்போது மனித நேயத்தின் அடிப்படையில் சபை அனுமதி வழங்கியது

தவிர்க்க முடியாத காரணத்தில் சபை அமர்வில் கலந்து கொள்ள முடியாது உள்ளது, எனவே 27 ஆம் திகதி கூட்டத்தினை தலமை தாங்கி நடாத்தி தருமாறு முதல்வர் வழங்கி கடித்தின் அடிப்படையில் 28 ஆம் திகதி பிரதி முதல்வரால் நடாத்திய கூட்டம் சட்ட வலுவற்ற கூட்டம் என்று தெரிந்தும் அதனை சுட்டிக் காட்டி எதிர்க்கட்சிகள் அக்கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தன.

இவ்வாறு பல்வேறு மாநகர கட்டளைச் சட்டங்களை மீறிய செயற்பாடுகள் சட்ட வலுவற்ற விடயங்கள் நடைபெற்ற போதும் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மெத்தனமாக இருந்தனர்.

ஆனால் பல விடயங்களில் மௌனமான இருந்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் இன்றைய சபை நடவடிக்கைகளை ஒரு உறுப்பினரின் தந்தையின் நினைவு நாளுக்காக ஒரு நாள் முன்கூட்டி கூட்டப்பட்ட கூட்டம் சட்டவலுவற்றது என்ற காரணத்தினால் வெளிநடப்பு செய்ததன் பின்னணியில் இருந்தது வேறு ஒரு காரணம்.

தமிழ் அரசு கட்சியினருக்கு, பிரதி முதல்வர் மீது ஏற்பட்ட அதிருப்தியே, வேறு ஒரு காரணத்தை காண்பித்து வெளிநடப்பு செய்ய காரணமாக அமைந்தது.

முதல்வர் ஆனோல்ட்டின் தனிப்பட்ட ஆளணியினை நிறுத்துவதற்கான பிரேரணையை வாக்கெடுப்பிற்கு விட்டு அதனை நிறைவேற்றி அவர்களை நிறுத்திய காரணத்தினாலேயே இன்று வேறு காரணத்தை கூறி வெளிநடப்பு செய்ததாக அறிய முடிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here