117 நாட்களின் பின் தொடங்கிய கிரிக்கெட் போட்டி!

இங்கிலாந்து- மேற்கிந்தியத்தீவுகள் அணிகளிற்கிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மழை பாதிப்புக்கு மத்தியில் நேற்று தொடங்கியது.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியத்தீவுகள் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதன்படி முதலாவது டெஸ்ட் போட்டி சவுதம்டனில் நேற்று தொடங்கியது. கொரோனா அபாயத்தால் தடைப்பட்டிருந்த சர்வதேச கிரிக்கெட் போட்டி 117 நாட்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கி இருக்கிறது. ஆனால் 143 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக ரசிகர்கள் ஸ்டேடியத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை.

ரொஸ் போடுவதற்கு முன்பாக மழை குறுக்கிட்டது. இதனால் மதிய உணவு இடைவேளை வரை போட்டி நடக்கவில்லை. மழையால் 3 மணி நேரம் பாதிப்பு ஏற்பட்டது. இதன் பிறகு ரொஸ் வென்ற இங்கிலாந்து பொறுப்பு கப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார். அந்த அணியில் மார்க் வுட் இடம் பெற்றதால் மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிரோட் கழற்றிவிடப்பட்டார். ஸ்டூவர்ட் பிரோட் உள்ளூரில் டெஸ்ட் போட்டியை தவற விடுவது 2012ஆம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல்முறையாகும்.

ஆட்டம் தொடங்குவதற்கு முன்பாக இரண்டு அணி வீரர்களும் சமீபத்தில் மறைந்த மேற்கிந்தியத்தீவுகள் ஜாம்பவான் சேர் எவர்டன் வீக்சின் மறைவுக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர். இதையொட்டி அவர்கள் கையில் கருப்பு பட்டையும் அணிந்திருந்தனர்.

அத்துடன் இனவெறியை கண்டித்தும், ஒற்றுமையை வலியுறுத்தியும், கருப்பினத்தவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் இரண்டு அணி வீரர்களும், நடுவர்களும் மைதானத்தில் 30 வினாடி முட்டிப்போட்டு நின்றனர். ஆடும் லெவனில் இடம் பெறாத வீரர்கள் எல்லைக்கோட்டுக்கு வெளியே முட்டிப்போட்டனர். மேற்கிந்தியத்தீவுகள் வீரர்கள் வலது கையில் கருப்பு நிற கையுறை அணிந்து கொண்டு, இன்னொரு கையை மேல்வாக்கில் தூக்கியபடி நின்று கவனத்தை ஈர்த்தனர்.

இதைத் தொடர்ந்து இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோரி பர்ன்சும், ரொம் சிப்லியும் இறங்கினர். இங்கிலாந்து அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. ரொம் சிப்லி (0), கப்ரியல் வீசிய பந்தை ஸ்டம்புக்கு வெளியே செல்வதாக நினைத்து மட்டையை உயர்த்தினார். ஆனால் பந்து ஸ்டம்பை பதம் பார்த்தது.

அடுத்து ஜோ டென்லி வந்தார். இதன் பின்னர் மேலும் இரண்டு முறை மழை குறுக்கிட்டு தொடர்ந்து ஆட்டம் நடந்தது. நிதானத்தை கடைப்பிடித்த இங்கிலாந்து அணி 17.4 ஓவர்களில் முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட்டுக்கு 35 ரன்கள் எடுத்திருந்த போது போதிய வெளிச்சம் இன்மையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது பர்ன்ஸ் 20 ரன்களுடனும், டென்லி 14 ரன்களுடனும் ஆடிக்கொண்டிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here